28.5 அடி உயர ஆஞ்சநேயர் சிலையுடன் நடிகர் அர்ஜுன் கட்டியுள்ள கோயிலுக்கு வரும் அக்டோபர் மாதம் கும்பாபிஷேகம் நடக்கிறது.
சென்னையை அடுத்த கெருகம்பாக்கத்தில், நடிகர் அர்ஜூனுக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் தோட்டம் இருக்கிறது. அர்ஜூன், தீவிரமான ஆஞ்சநேயர் பக்தர். தனது தோட்டத்தில் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்ட முடிவு செய்தார். ஆஞ்சநேயர் சிலையை வடிவமைப்பதற்காக, பெங்களூர் அருகே 28.5 அடி நீளம், 17 அடி அகலம், 9 அடி கனமுள்ள ஒரே கல் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அதில், ஆஞ்சநேயர் தவம் இருப்பது போல் அந்த சிலை வடிவமைக்கப்பட்டது. பின்னர், மெகா டிரக் மூலம் அந்த நிலை பெங்களூரில் இருந்து சென்னை கெருகம்பாக்கத்துக்கு கொண்டுவரப்பட்டது.
ஆஞ்சநேயர் சிலையை நிலை நிறுத்துவதற்காக, 3 அடி உயரத்தில் பீடம் கட்டப்பட்டது. அதன் மீது சிலையை நிலை நிறுத்த மும்பையில் இருந்து பெரிய கிரேன் வரவழைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அர்ஜூன் கூறுகையில், "ஆஞ்சநேயர் சிலை மிகப்பெரிய அளவில் இருப்பதால், ஒரேநாளில் தூக்கி நிறுத்திவிட முடியாது. சிலைக்கு எந்த சேதமும் ஏற்படாமல், பொறுமையாக கிரேன் மூலம் படிப்படியாக நகர்த்தி, பீடத்தில் உட்கார வைக்க மாதக்கணக்கில் ஆகும்.
அக்டோபரில் கும்பாபிஷேகம்
ஆஞ்சநேயர் சிலை நிலை நிறுத்தப்பட்டதும், கோவில் கோபுரம் கட்டப்படும். அதன்பிறகு, வருகிற அக்டோபர் மாதம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்திருக்கிறோம்,'' என்றார்.
பாராட்டுக்களை குவிக்கும் பிரசாத்
மேலும் அவர் கூறுகையில், "என் 26 வருட சினிமா அனுபவத்தில், இதுவரை நான் நடித்திராத ஒரு வேடத்தில், 'பிரசாத்' என்ற படத்தில் நடித்துள்ளேன். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாராகியிருக்கிறது. சண்டை காட்சிகள் கிடையாது. 'டூயட்' கிடையாது. மிக யதார்த்தமான படமாக தயாராகியிருக்கிறது.
பெர்லின் நகரில் நடந்த சர்வதேச படவிழாவுக்கு அனுப்பப்பட்டது. படம் பார்த்த அத்தனை பேரும் பாராட்டினார்கள்," என்றார்.
No comments
Post a Comment