Latest News

January 19, 2012

கொள்ளைக்காரன் - திரைப்பட விமர்சனம்
by admin - 0

நடிப்பு: விதார்த், சஞ்சிதா ஷெட்டி, ரவிசங்கர், செந்தி, பேபி வர்ஷா
இசை: ஜோகன்
பிஆர்ஓ: மவுனம் ரவி
தயாரிப்பு: பிரசாத் சினி ஆர்ட்ஸ்

இயக்கம்: தமிழ்ச் செல்வன்

மண் மணத்தோடு இந்தப் பொங்கலுக்கு வந்திருக்கும் படம் கொள்ளைக்காரன். கதை பரிச்சயமானதுதான் என்றாலும், மனதைத் தொடும் விதத்தில் அமைக்கப்பட்ட திரைக்கதையும், விரசமில்லாத நகைச்சுவையும், ஏதோ நமது பக்கத்து வீட்டில் நடப்பதைப் போன்ற இயல்பான சம்பவங்களின் தொகுப்பும் இந்தப் படத்தை தாராளமாகப் பார்க்கலாம் என சொல்ல வைக்கிறது.

ஊரில் சின்னச்சின்ன திருட்டுத்தனங்களும், அவ்வப்போது போக்கிரித்தனமும் செய்து ஊர் வம்பை விலைக்கு வாங்கி வரும் இளைஞர் விதார்த். மனவளர்ச்சி குன்றி தங்கைக்காக, தன் கல்யாணத்தைக்கூட எண்ணாமல் முதிர் கன்னியாக நிற்கும் அக்காவுக்கு அடங்காத தம்பியாக சுற்றித் திரிகிறார். பக்கத்து ஊரில் டுடோரியல் படிக்கும் சஞ்சிதாவுக்கும் விதார்த்துக்கும் காதல்.
விதார்த் ஒரு திருடன் என்ற உண்மை தெரிய வர, காதல் உடைகிறது. காதலிக்காக
திருந்தி நல்லவனாக மாறுகிறார் விதார்த்.

இதற்கிடையே அந்த ஊர் பெரும்புள்ளிக்கும் விதார்த்துக்கும் சின்னதாக உரசல். சரியான நேரம் பார்த்து அந்த உரசலுக்கு பழி வாங்குகிறான் பெரும்புள்ளி. கோயில் நகையைத் திருடிவிட்டு அதை விதார்த் மீது சுமத்துகிறான். இதில் இருவருக்கும் நடக்கும் கைகலப்பில், விதார்த்தின்
மனவளர்ச்சி குன்றிய தங்கை பலியாகிறாள். கோபம் கொண்டு பொங்கி எழும் விதார்த் பெரும்புள்ளியை பழிவாங்குகிறார்.



கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் போகிறது கதையி்ன் முதல்பாதி. வசனங்களில் நகைச்சுவை துள்ளி விளையாடுகிறது. ஊர் பெரும்புள்ளி ரவிசங்கரிடம் நக்கலும் எகத்தாளமுமாக விதார்த் பேசும் காட்சிகளும், அதற்கு ரியாக்ட் பண்ண முடியாமல் ரவிசங்கர் பல்லைக் கடித்துக் கொண்டு திணறுவதும் புதுசு.

சப்பாத்திக் கள்ளியில் சாறெடுத்து அதை பேனா மையாக்கி எழுதுவது போன்ற கிராமத்து இயல்புகள், பழக்க வழங்கங்கள், பேச்சு வழக்குகளை ('ஊளை மூக்கி') போகிற போக்கில் அழகாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் தமிழ்ச் செல்வன்.

விதார்த்துக்கு விளையாட தோதான களம். தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். குருவி (என்ற குமார்!) என்ற ஒரு இளைஞனை பக்கத்திலிருந்து பார்த்தது போன்ற உணர்வைத் தருகிறது அவரது நடிப்பு. ஆடு திருடி விற்ற காசில் ஜோராக புதுத்துணி போட்டு, கறுப்புக் கண்ணாடியுடன்
தெனாவட்டாக ஊரில் இறங்கி, தன்னை யாரும் கவனிக்கவில்லையே என்ற கவலையுடன்,
அங்கும் இங்கும் நடைபோடுவது ரொம்ப எதார்த்தம். கூல்டிரிங்க்ஸ் வாங்கித் தரேன்... நான் எப்படியிருக்கேன்னு சொல்லேன் என்று கையில் சிக்கியவரைப் படுத்தி எடுக்கும் காட்சி கலகல!

விதார்த்தின் அக்காவாக வரும் செந்திகுமாரி வெகு இயல்பாக நடித்திருக்கிறார். எப்போதும் கோபமும் ஆத்திரமுமாக தம்பியிடம் நடந்து கொள்ளும் அவர், கல்யாணம் நிச்சயமான பிறகு, தம்பிக்கு சாதம் பிசைந்து தரும் காட்சியில் நெகிழ வைக்கிறார்.

நாயகியாக அறிமுகமாகியுள்ள சஞ்சிதா மனதைக் கவர்கிறார். உணர்ச்சிகளை வெகு
இயல்பாக வெளிப்படுத்துவது இவரது ப்ளஸ், நல்ல படங்களில் கவனம் செலுத்தினால் துடிப்பான கிராமத்துப் பெண் பாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகையாக திகழ்வார்!

செந்திக்கு மாப்பிள்ளையாக வருபவர் நடிப்பு ரொ்ம்ப பாந்தம். வில்லனாக வரும் ரவி சங்கர் மீது மகா வெறுப்பு வருகிறது பார்ப்பவர்களுக்கு!.

க்ளைமாக்ஸ் வழக்கமானதுதான். ஆனால் பின்னணியில் நரசிம்ம அவதார காலட்சேபம் ஒலிக்க, வித்தியாசமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

ஜோகனின் இசை பரவாயில்லை. இரண்டு பாடல்கள் கேட்கும்படி உள்ளன. குறிப்பாக சாமிக் குத்தம் என்ற சோகப்பாடல்.

காட்சி மற்றும் வசனங்களில் காட்டிய அக்கறையை கதையிலும் காட்டியிருக்கலாம் இயக்குனர். அதேபோல திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டியிருந்தால் இந்தப் படம் நிஜமான பொங்கல் விருந்தாக அமைந்திருக்கும்!
« PREV
NEXT »

No comments