Latest News

January 17, 2012

மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு
by admin - 0

1. நோய் தாக்கப்பட்டு மடிந்த மரம்; 2. தாக்கப்பட்ட மரத்தின் தண்டுப்பாகம்;


3a & 3b : தாக்கப்பட்ட தண்டின் குறுக்குவெட்டுத் தோற்றம்
மலைவாழை கடல் மட்டத்திலிருந்து 2000 முதல் 5000 அடி வரை இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. இவ்வாழை வாடல் நோயினால் பெரிதும் பாதிப்படைந்து வருகிறது. இவ்வாழை பல்லாண்டு பயிராக சாகுபடி செய்யப் படுவதால் இந்நோயினால் பெரிதும் சேதம் உண்டாகின்றன. இதற்கு பனாமா வாடல்நோய் என்ற பெயரும் உண்டு. இது ஒரு வகை பூசண நோயாகும்.
நோயின் அறிகுறிகள்: இந்நோய் பெரும்பாலும் 5 மாத வயதுடைய வாழை மரங்களைத் தாக்கும். ஆனால் 2-3 மாத வயதுடைய இளம் செடிகளைக்கூட தாக்கக்கூடும். நோயின் முதல் அறிகுறி, தாக்கப்பட்ட மரங்களின் முதிர்ந்த மற்றும் இளம் இலைகளின் காம்புகளில் இளம் மஞ்சள் நிறக்கீற்றுக்கள் நீளவாக்கில் தோன்றும். இதைத் தொடர்ந்து, இலைக்காம்பிலிருந்து முறிந்து தொங்கிவிடும். சில நேரங்களில் இலைகள் நிறம் மாறாமலேயே, காம்பிலிருந்து முறிந்து தொங்கிவிடும். பெரும்பாலும் இளம் குருத்து இலைகளைத்தவிர, மற்ற எல்லா இலைகளும் காம்பிலிருந்து முறிந்து தொங்கிவிடும். குருத்து இலைமட்டும் நேராக நிமிர்ந்து நிற்கும். புதிதாக தோன்றும் இலைகளில் திட்டு திட்டாக மஞ்சள் நிறப்பீடைகளும், சுருக்கங்களும் தென்படும். இலைக் காம்புகளில் மஞ்சள் நிறக்கீற்றுக்கள் தோன்றிய 4-6 வாரங்களில் மரங்கள் முழுவதும் வாடி மடிந்துவிடும். தண்டுப்பாகத்தை மூடியிருக்கும் வெளிப்புறத்து இலை உறைகளில் பெரும்பாலும் நீளவாக்கில் பிளவுகள் தோன்றும்.
நோய் கட்டுப்பாடு: நோய் பாதிக்காத வயல்களிலிருந்து நோய் தாக்காத கன்றுகளை நடவுக்குத் தேர்வு செய்ய வேண்டும். மேலும் இந்நோய் தாக்கிய மரங்களிலிருந்து நீரை மற்ற மரங்களுக்கு பாய்ச்சக்கூடாது. தாக்கப்பட்ட மரங்களின் இலைகள், மரத்தின் பாகங்கள் மற்றும் கிழங்குகளில் நோய்க்காரணி நீண்டகாலம் வாழக்கூடுமானால் அவற்றை அவ்வப்போது அகற்றி எரித்துவிட வேண்டும். நோய் தாக்கிய மரங்களை பக்கக் கன்றுகளுடனும், கிழங்குகளுடனும் அகற்றிவிட்டு, அந்தக் குழிகளில் 1.5 கிலோ வீதம் சுண்ணாம்புத்தூளை பரவலாகத் தூவி, சில வாரங்கள் நன்கு ஆறவிட்டு பின்னர் அந்தக் குழிகளில் வேறு கன்றை நடலாம்.
நோய் தாக்கிய நிலத்தில் நீரைத்தேக்கி, சில நாட்கள் வைத்திருந்து, பின்னர் 6 மாத காலம் அந்த நிலத்தில் வாழை பயிரிடாமல், தரிசாக விடுவதன் மூலம் மண்ணில் காணப்படும் பூசண வித்துக்களை அழிக்கலாம். நீர் தேக்கி வைக்கும்போது நிலத்தில் உண்டாகும் அசிட்டிக் அமிலம் போன்ற நச்சுப் பொருட்கள் நோய் காரணியை அழிக்கக் கூடியவை. நோய் தாக்கிய பயிரை மறுதாம்புக்கு விடக்கூடாது. கார்பன்டாசிம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் மருந்து என்ற விகிதத்தில் கலந்து, அந்தக் கலவையுடன் சிறிது சேற்றையும் சேர்த்து கலக்க வேண்டும். நடுவதற்கு முன்னர் வாழைக் கன்றுகளின் கிழங்கு பாகத்தில் காணப்படும் வேர்களை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு, பின்னர் மருந்துக் கலவையில் கிழங்குபாகத்தை நன்கு நனைக்க வேண்டும். பின்னர் கிழங்கின் மேற்பரப்பில் 5 கிராம் வீதம் கார்போ பியூரான் 3சத குருணையை பரவலாகத் தூவ வேண்டும். இதனால் நூற்புழுக்களின் தாக்குதல், பூசணத்தின் தாக்குதலில் இருந்தும் கன்றுகளை பாதுகாக்க முடியும்.
ஜெலட்டின் மருந்து உறைகளில் 50-75 மி. கிராம் கார்பன்டாசிம் மருந்தை நிரப்பி, தண்டின் அடிப்பாகத்தில், கிழங்கினுள் சுமார் 10 செ.மீ. ஆழத்திற்கு 45 டிகிரி கோணத்தில் சாய்வாக, ஒரு இரும்புக் கம்பியின் மூலம் துவாரம் உண்டாக்கி, அதனுள் மருந்து செலுத்தி, துவாரத்தை பூசணக்கொல்லி மருந்து கலந்த சேறு கொண்டு அடைத்துவிட வேண்டும். காலி மருந்து உறைகள் கிடைக்காவிட்டால் 2 சதம் கார்பன்டாசிம் மருந்து கரைசலை கிழங்கினுள் சுமார் 10 செ.மீ. ஆழத்தில் 45 டிகிரி கோணத்தில் சாய்வாக, ஒரு துவாரம் செய்து, அதனுள் 3 மி.லி. என்ற விகிதத்தில் ஊற்றி, பின்னர் தாமிர ஆக்சி குளோரைட் பூசணக்கொல்லி கலந்த சேறு கொண்டு துவாரத்தை அடைத்துவிட வேண்டும்.
« PREV
NEXT »

No comments