Latest News

January 07, 2012

இலவச துப்பாக்கி உரிமம் கொடுப்போம்
by admin - 0

இலவச அரிசி, டிவி கொடுப்பேன் என்பதெல்லாம் பழைய வாக்குறுதி. எங்களுக்கு வாக்களித்தால் துப்பாக்கி உரிமம் கொடுப்போம் என்பது தான் லேட்டஸ்ட் வாக்குறுதி. உத்தரபிரதேச மாநில சமூக நல அமைச்சர் இந்திரஜித் சரோஜ் தான் இந்த அதிரடி வாக்குறுதியைக் கொடுத்து அரசியல் வட்டாரத்தை பரபரப்பு அடையச் செய்துள்ளார்.



உத்தர பிரதேசத்தில் 7 கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த முறையும் எப்படியும் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், அம்மாநில முதல்வருமான மாயாவதி முனைப்பாக உள்ளார். அவருக்கு சற்றும் சளைக்காதவர்களாய் காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாடி கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் குதித்துள்ளன.

இதனால் அம்மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. காசா, பணமா என்று ஆளாளுக்கு தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவிட்டு வருகின்றனர். நம்ம ஊரில் எல்லாம் வாக்களித்தால் இலவச அரிசி, மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர் தானே தருகிறார்கள். ஆனால் உத்தர பிரதேச மாநில சமூக நலத்துறை அமைச்சர் இந்தரஜித் சரோஜ் தனது பிரச்சாரத்தின்போது அளித்த ஒரு வாக்குறுதி தான் அரசியல் வட்டாரங்களில் ஹாட் டாபிக்.

அப்படி என்ன தான் வாக்குறுதி கொடுத்தார் என்று பார்க்கிறீர்களா. பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களித்தால் இலவசமாக துப்பாகி உரிமம் வழங்கப்படும் என்பது தான் அந்த வாக்குறுதி. பகுஜன் சமாஜ் கட்சி மட்டும் மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் இனிப்பு வழங்குவது போன்று அனைவருக்கும் இலவசமாக துப்பாக்கி உரிமம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் அவர் பலருக்கு துப்பாக்கி உரிமம் வாங்கிக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு மட்டும் உத்தர பிரதேசத்தில் 1,000 பேர் து்பபாக்கி உரிமம் பெற்றுள்ளனர். 5,000 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே அமைச்சரின் இந்த வாக்குறுதியால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெடும் என்று கூறி கௌஷம்பி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அதுல் குமார், அமைச்சர் தேர்தல் விதிமுறைகளை மீறியிருந்தால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments