இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்குச் சென்று பார்வையிடுவதற்கு ஒழுங்குகளை செய்து தரும்படி சிறிலங்கா அரசிடம் கோரப் போவதாக இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கான நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு அவர் நேற்றிரவு கொழும்பை வந்தடைந்தார்.
கொழும்பு புறப்பட முன்னர் அவர் இந்திய ஊடகங்களுக்கு அளித்த செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
"யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்களையும், இந்துக் கல்லூரி மாணவர்களையும் சந்திக்கவுள்ளேன்.
அத்துடன் அங்குள்ள புலமையாளர்கள், நிபுணர்கள், பொதுமக்களை சந்திப்பதையிட்டு நிச்சயமாக மிகவும் மகிழ்ச்சிடைகிறேன்.
2020இல் இந்தியாவை ஆற்றலுள்ள நாடாக மாற்றுவதற்கான திட்டம் குறித்த எமது அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இந்த அனுபவங்களை சிறிலங்கா மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
மும்மொழிக் கல்வித் திட்டத்தின் மூலம் சிறிலங்காவை மீளக்கட்டியெழுப்ப நல்லதொரு வாய்ப்பாக அமையும்.
இந்தியாவில் பலமொழிகள், பல கலாசாரங்கள் இருந்த போதிலும், ஜனநாயகம் எல்லா மக்களுக்கும் சமஉரிமையை உறுதி செய்கிறது. அதன் மூலம் அமைதியான வாழ்வை உறுதிப்படுத்த முடியும்.
சிறிலங்காவில் இருதரப்பு தலைவர்களையும் சந்தித்து பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்புவது குறித்த பேசவுள்ளேன். இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு செல்வதற்கு ஒழுங்குகளை செய்து தரும்படி சிறிலங்கா அரசிடம் கோரவுள்ளேன்.
சிறிலங்காவுக்கான இந்தப் பயணம் அமைதியை ஊக்குவிப்பதற்கானது. இதனை சிலர் விமர்சித்தாலும் அது அவர்களின் ஜனநாயக உரிமை.
போர்கள் மோசமான நிலைமைகளையே கொண்டு வந்துள்ளன. தமது மகன்களையே தந்தைமார் புதைத்துள்ளனர்.
எந்தப் பிரச்சினைக்கும் போர் மூலம் தீர்வு காணமுடியாது. மோதல்களுக்கான தீர்வாக எந்தவொரு போரும் அமையவில்லை.
போருக்குப் பிந்திய நம்பிக்கையை, உண்மையை, நம்பகத்தன்மை கட்டியெழுப்ப வேண்டியது சிறிலங்காவின் தேவை.“ என்றும் அப்துல் கலாம் மேலும் கூறியுள்ளார்.
No comments
Post a Comment