இலங்கையில் தமிழ் இளைஞர்களின் நிலை குறித்து விஜயகாந்த் தலைமையிலான தமிழக சட்டசபை எதிர்கட்சியான தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உரையாற்றியனார்.
அப்போது அவர் அந்தத் தகவலை வெளியிட்டார். அவர் உரையாற்றுகையில்,
ஆளுநர் உரையில் இலங்கைத் தமிழர் பிரச்னை பற்றி குறிப்பிடப்படவில்லை. வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கை சென்று அங்கு வீடுகள் கட்டும் திட்டத்துக்கு உதவிகளைச் செய்ததாக செய்திகளைப் பார்த்தோம்.
ஆனால், அங்குள்ள தமிழ் இளைஞர்கள் காணாமல் போவதாகவும், கடத்தப்படுவதாகவும், சிறையில் தள்ளப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.
அது குறித்து ஆராய இலங்கை அரசே நீதிபதிகளைக் கொண்ட ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவும் தமிழ் இளைஞர்கள் காணாமல் போவதையும், கடத்தப்படுவதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழர்கள் வாழும் பகுதிகளில் 2 லட்சம் சிங்கள இராணுவத்தினர் உள்ளனர். இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தமிழர்களின் பகுதிகள் இருப்பதால் தமிழர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவதில்லை.
மக்கள் அடிமைகளாக உள்ளனர். தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் மனிதாபிமான அடிப்படையில் வீடு கட்டித் தருவது உள்ளிட்ட பணிகளை இந்தியா மேற்கொள்கிறது.
ஆனால் தமிழர்களின் வாழ்வுரிமையையே பறிக்கும் செயல்தான் அங்கு நடக்கிறது. வெளியுறவு அமைச்சர் அல்லது அதிகாரிகள் முதல்வரைச் சந்திக்கும் போது இந்த நிலையை அவர்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்
No comments
Post a Comment