மூன்று நாட்களுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதா குறித்து தரக்குறைவாக செய்திகள் வெளியானதாக குறைகூறி, நக்கீரன் அலுவலகத்தின் மீது அஇஅதிமுகவினர் தாக்குதல்கள் நடந்தன.
நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டது
இந்நிலையில் தங்களுக்குப் பாதுகாப்பு கோரி நக்கீரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கு வந்தபோது, தமது அலுவலகத்தில் குடிநீர் மற்றும் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தலைமை நீதிபதி இக்பால், ''அரசு என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஜாதி, மத, கட்சி பேதம் பார்க்கக் கூடாது. நக்கீரன் அலுவலகத்தின் மின்சாரத்தையும், குடிநீர் இணைப்பையும் ஏன் நிறுத்தினீர்கள்? உங்களை யார் நிறுத்தச் சொன்னது?'' என்று வினவினார்.
அப்போது குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதற்காக நக்கீரன் அலுவலகத்துக்கு அளிக்கப்பட்ட நோட்டீசின் நகல் நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டது.
"குடிநீரில் அசுத்தம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் துண்டித்துள்ளோம்" என்று அதில் கூறப்பட்டிருந்தது.
அதற்கு நீதிபதி, ''எத்தனையோ இடங்களில் அசுத்தம் ஏற்பட்டுள்ளது. எப்படி இந்த விஷயத்தில் மட்டும் அவசரமாக துண்டித்தீர்கள்?'' என்று கேள்வி எழுப்பினார்.
நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதில் அளிக்க ஒரு நாள் அவகாசம் கேட்டது அரசு தரப்பு.
இதையடுத்து வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது .
உயரிய பதவியிலிருப்போரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செய்திகள் வெளியிட்டது, அஇஅதிமுகவினர் சிலரை மிரட்டியது உள்ளிட்ட சில புகார்களின் பேரில் நக்கீரன் ஆசிரியர் கோபால் மற்றும் இணையாசிரியர் காமராஜ் உள்ளிட்டோர் மீது வேறொரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
முன்ஜாமீன் கோரி அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுக்களும், உயர்நீதிமன்றத்தின் முன் புதனன்று விசாரணைக்கு வரவிருக்கிறது
No comments
Post a Comment