Latest News

January 26, 2012

ஆஸ்கர் நிலநடுக்கத்தில்' உடைந்தது 'டேம் 999'!
by admin - 0


இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவில் இருந்து சென்ற சோஹன் ராயின் டேம் 999 படம் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெறவில்லை.

முல்லைப் பெரியாறு அணை குறித்து தேவையில்லாமல் பீதியைக் கிளப்பும் வகையி்ல எடுக்கப்பட்ட படம்தான் இந்த டேம் 999. கேரளாவைச் சேர்ந்த சோஹன் ராய் என்பவர் வெளிநாடுகளில் வாழும் மலையாளிகளின் நிதியுதவி மற்றும் கேரள அரசின் ஆதரவோடு இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார்.

84வது ஆஸ்கர் விருதுப் போட்டியில் டேம் 999 படமும் கலந்து கொண்டது. இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சாமுயல் கோல்டுவின் தியேட்டரில் ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் டேம் 999 இல்லை.

முல்லைப் பெரியாறு அணை உடைந்து பல லட்சம் மக்கள் பாதிக்கப்படுவது போன்று எடுக்கப்பட்ட படம் டேம் 999. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த படம் தமிழகத்தில் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் டேம் 999 ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

சிறந்த படம், பாடல்கள் மற்றும் ஒரிஜினல் இசை ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த படம் பரிந்துரைக்கப்பட்டது. ஆயினும் இறுதிப் பட்டியலில் இடம்பெறத் தவறியுள்ளதால் சோஹன் ராயின் ஆஸ்கர் கனவு பொய்த்துவிட்டது.

தி ஆர்டிஸ்ட், தி டிசென்டன்ட்ஸ், தி ஹெல்ப், ஹ்யூகோ, மணிபால் உள்ளிட்ட படங்கள் தான் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. வரும் பிப்ரவரி மாதம் 26ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கோடக் தியேட்டரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடக்கின்றது.

இந்தப் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தால் சந்தோஷமாக இருக்கும் என்று இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

நிலநடுக்கம் ஏற்படும், முல்லைப் பெரியாறு உடையும் என்று கேரளக்காரர்கள் கூறி வந்த நிலையில், அவர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த டேம் 999 'ஆஸ்கர் நிலநடுக்கத்தில்' சிக்கி உடைந்து போயிருப்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments