Latest News

January 18, 2012

ஏ-9 பாதை திடீரென்று மூடப்பட்டது
by admin - 0

ஏ-9 வீதி போக்குவரத்துக்கள் 17.01.2012 மாலை 2 மணியில் இருந்து 5 மணிவரை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டத்தை நடாத்த வந்த தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை தடுத்து நிறுத்தும் நோக்குடனேயே இவ்வாறு பாதை மூடப்பட்டதாக தெரிய வருகிறது. இதனால் இவ்வீதியால் பயணம் செய்த பொதுமக்கள் பலரும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:- கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்ட மக்கள் போராட்ட இயக்கத்தைச் சேர்ந்த குகன், முருகானந்தன் ஆகியோரை விடுதலை செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மக்கள் போராட்டஇயக்கம், காணாமல்போனோரை தேடியறியும் குழு உட்பட 10 இக்கும் மேற்பட்ட அமைப்புக்களைச் சேர்ந்த சுமார் 1500 பேர் தென்னிலங்கையில் இருந்து 15 பஸ்களில் யாழ்ப்பாணத்தை நோக்கி வருகை தந்தனர். இவர்களின் போராட்டத்தை குழப்பும் நோக்குடன் இராணுவத்தினர் ஏ-09 வீதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் வைத்து வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். இவர்கள் பயணித்த வாகனத்தில் குண்டு இருப்பதாக கூறியே தடுத்து வைக்கப்பட்டதாக தெரிய வருகிறது. இதனால் ஏ-9 பாதை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் 5 மணிக்குப்பின் வழமை போல போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. இராணுவத்தினரின் இந் நடவடிக்கை காரணமாக வீதியால் பயணம் செய்த பொதுமக்கள் பலத்த சிரமங்களை எதிர் நோக்கினர். குறிப்பாக பாடசாலை ஆசிரியர்கள், அலுவலகங்களில் கடமை புரிகின்ற ஊழியர்கள் ஆகியோர் இப் போக்குவரத்து தடை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
« PREV
NEXT »

No comments