ஈராக்கில் முகாமிட்டிருந்த அமெரிக்க ராணுவம் கடந்த மாதம் அந்நாட்டை விட்டு வெளியேறியது. இதையடுத்து அங்கு மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அங்கு ஷியா முஸ்லிம்களுக்கும், சன்னி முஸ்லிம்களுக்கும் இடையே போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சத்ர் நகர் மற்றும் அவர்களின் புனித தளம் உள்ள மற்றொரு மாவட்டத்திலும் நேற்று காலை குண்டுகள் வெடித்தன. இதில் சுமார் 30 பேர் பலியாகினர் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவங்கள் நடந்து பல மணி நேரம் கழி்தது ஷியா முஸ்லிம்களின் புனித நகரான கர்பலா நோக்கி சென்ற யாத்திரிகர்களை குறிவைத்து நசிரியாவில் தற்கொலைப் படை தாக்குதல் நடந்தது. ஷியா முஸ்லிம்களின் புனித நாள் வருவதையொட்டி ஏராளமானோர் கர்பலா நோக்கி செல்கின்றனர். இந்நிலையில் நடந்த தாக்குதலில் 48 பேர் பலியாகினர். இந்த தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
சம்பவ இடத்தில் கிடைத்த பொருட்களை வைத்துப் பார்க்கையில் இது சன்னி முஸ்லிம்களின் வேலையாகத் தான் இருக்கும் என்று போலீசார் கருதுகின்றனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பாக்தாதில் ஷியா முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் பகுதியில் குண்டுகள் வெடித்ததில் 69 பேர் பலியாகினர். அதற்கு ஈராக்கில் உள்ள அல் கொய்தா அமைப்பு பொறுப்பேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment