இந்த வைரஸ் கிருமியின், மிக இலகுவாக பரப்பப்படக்கூடிய வடிவத்தை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதை இந்த ஆய்வு கண்டறிந்தமை குறிப்பிடத்தக்கது.இவ்வாறான ஆய்வுகளின் மூலம் மிக மோசமான ஆபத்துக்கள் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள உலக சுகாதார ஸ்தாபனம், அவற்றை மிக கட்டுப்பாடான கண்காணிப்புக்குள் வைத்திருக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது.
நெதர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவொன்று முலையூட்டிகளுக்கிடையே குறிப்பாக மனிதர்களிடையே இந்த வைரஸை எவ்வாறு பரப்ப முடியும் என்பதை கடந்த வாரம் கண்டறிந்திருந்தது.
பயோ டெரரிஸ்ட் - அதாவது உயிரியல் பொருட்களை, குறிப்பாக ஆபத்தான கிருமிகளைக் கொண்டு அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் விஞ்ஞானத்தின் நோக்கம் தோற்றுப்போகக்கூடிய நிலை ஏற்படலாம் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் துணை இயக்குநர் டொக்டர் கீய்ஜி ஃபுக்குடா பிபிசியிடம் சுட்டிக்காட்டினார்.
இந்த வைரஸ்களை எவ்வாறு உருவாக்குவது, அவற்றை எவ்வாறு பயன்படு்த்துவது போன்ற விடயங்கள் வெளியாருக்கு தெரியவந்தால் அந்த வைரஸ்கள் தவறாக பயன்படுத்தப்பட்டால் அந்த துஸ்பிரயோகத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை எப்படி எம்மால் குறைக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பறவைக் காய்ச்சல் வைரஸான எச்5என்1 உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய கிருமிதான், ஆனால் தற்போதிருக்கின்ற கிருமிகள் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவாது என்ற நிலை தான் காணப்படுகின்றது.
அமெரிக்காவில் அரசு- விஞ்ஞானிகள் கருத்து முரண்பாடு
இந்தப் பிரச்சனை அமெரிக்காவில் பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கு அந்த கண்டுபிடிப்பு தகவல்களை பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரையாக வரைந்தவர்கள், அவற்றை விஞ்ஞான சஞ்சிகைகளில் வெளியிட வேண்டுமானால் முக்கிய சில தரவுகளை மறைக்க வேண்டுமென்று அதிகாரிகள் வற்புறுத்தியுள்ளனர்.இவ்வாறான தகவல்கள் வெளிவருவது பயங்கரவாத நோக்கங்களுக்கு சாதகமாக அமைந்துவிடுமென்று அந்நாட்டு சுகாதாரதுறை அதிகாரிகள் வாதி்ட்டுள்ளனர்.
ஆனால், ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு இந்த தரவுகளை தாராளமாகப் பயன்படுத்தமுடியும் என்ற உத்தரவாதம் கிடைக்கும்வரை கட்டுரை மாற்றியமைக்கப்படாது என்று சைன்ன்ஸ் மற்றும் நேச்சர் சஞ்சிகைகளின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வுக் கட்டுரையை மாற்றியமைக்கக் கோரும் அமெரிக்காவின் உயிரியல் பாதுகாப்பு தொடர்பான தேசிய விஞ்ஞான ஆலோசனை சபையின் விளக்கத்தை தம்மால் ஏற்க முடியாது என்று இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்ட விஞ்ஞானிகள் குழுவைச் சேர்ந்த நெதர்லாந்து ஆய்வாளர் அல்பேர்ட் ஒஸ்டர்ஹோஸ் கூறிவிட்டார்.
கிருமிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகளுக்கு இந்த தரவுகளைப் பயன்படுத்த தாராளமாக அனுமதியளிக்கப்பட வேண்டுமென்று நேச்சர் சஞ்சிகைக்கு அவர் தெரிவித்துள்ளார்.
-
No comments
Post a Comment