Latest News

December 07, 2011

முல்லைப் பெரியாறு போராட்டங்களால் ஐயப்ப பக்தர்கள் பாதிப்பு- சபரிமலை போகாமல் திரும்புகின்றனர்
by admin - 0

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளாவிலும், தமிழகத்திலும் எல்லைப் பகுதியில் நிலவி வரும் போராட்டங்கள், போக்குவரத்துத் தடையால் ஐயப்ப பக்தர்கள்தான் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இதனால் பல பக்தர்கள் சபரிமலைக்குப் போக விரும்பாமல் பாதியிலேயே திரும்பத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்திலிருந்து தேனி மாவட்டம் வழியாக சபரிமலைக்குச் செல்ல முடியாமல் ஐய்யப்ப பக்தர்கள் ஸ்தம்பித்துப் போயுள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது செங்கோட்டை மற்றும் பாலக்காடு வழியாக சபரிமலைக்குப் போகுமாறு போலீஸாரால் திருப்பி விடப்பட்டு வருகின்றனர். இதனால் கூடுதலாக 300 கிலோமீட்டர் தொலைவுக்கு சுற்றிப் போகும் நிலைக்கு ஐயப்ப பக்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

குமுளியில் தமிழர்கள் மீதும், தமிழர்கள் நடத்தி வரும் நிறுவனங்கள் மீதும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று வெறித்தாக்குதலில் ஈடுபட்டனர். தமிழர்களின் கடைகளை சூறையாடியதோடு, அவர்களையும் ஓட ஓட விரட்டித் தாக்கியுள்ளனர்.மேலும் தமிழகத் தொழிலாளர்களையும் சிறை பிடித்தனர். தமிழகப் பெண்களையும் மானபங்கப்படுத்தும் முயற்சியும் நடந்ததால் கம்பம், கூடலூர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள தமிழக நகரங்கள் கொந்தளித்து விட்டன.

இதுவரை இல்லாத அளவுக்கு கேரளத்தினருக்கு எதிராக வன்முறையில் இப்பகுதி இளைஞர்கள் குதித்தனர். இது நாள் வரை நாங்கள் அமைதி காத்து வந்தோம். ஆனால் கேரளத்தினர், எங்களது பெண்களை மானபங்கப்படுத்த முயன்றது எங்களை கொதிக்க வைத்து விட்டது என்று கம்பத்தைச் சேர்ந்தவர்கள் கோபத்துடன் கூறினர்.

கம்பம் பகுதியில் உள்ள கேரள நிறுவனங்கள், நிதி நிறுவனங்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கி நொறுக்கினர். கேரளா செல்லும் தமிழக வாகனங்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன.

இன்றும் போராட்டம் தொடர்கிறது. இதனால் தமிழகத்திலிருந்து தேனி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு போக்குவரத்து முற்றிலும் நின்று போய் விட்டது. இந்தப் போராட்டங்களால் சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

தொடர்ந்து 2வது நாளாக அவர்களால் குமுளி வழியாக செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. போலீஸார் வழியில் நின்று கொண்டு அந்தப் பாதை வழியாக வரும் பக்தர்களை குமுளி வழியாக செல்ல முடியாது, பழனி போய் அங்கிருந்து பாலக்காடு வழியாக செல்லுமாறு திருப்பி விட்டு வருகின்றனர்.

அதேபோல செங்கோட்டை வழியாகவும் ஐயப்ப பக்தர்கள் செல்ல வேண்டியுள்ளது. குமுளி வழியாக போக முடியாமல் தேவதானப்பட்டி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளின் இரு மருங்கிலும் பெருமளவில் வாகனங்கள் தேங்கி நிற்கின்றன. இதேபோல லாரிகள், வேன்கள் என பெருமளவிலான வாகனங்கள் தேங்கிக் கிடக்கின்றன.

கேரளாவுக்குப் போன காய்கறிகளை வைத்து அன்னதானம்

இந்த நிலையில் சபரிமலைக்குப் போக முடியாமல் தவிக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு கம்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நூதன முறையில் அன்னதானம் போட்டு அசத்தினர்.

கேரளாவுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட காய்கறிகள் உள்ளிட்டவற்றை மடக்கிப் பிடித்து அவற்றைக் கொண்டு ஐயப்ப பக்தர்களுக்கு சமைத்து அன்னதானம் செய்து வருகின்றனர். அவங்களுக்குக் கொடுப்பதற்குப் பதில் உங்களுக்கு அன்னதானம் போட்டால் எங்களுக்குத்தான் புண்ணியம் என்றும் அவர்கள் கூறினர்.

சுருளியோடு விரதத்தை முடிக்கும் பக்தர்கள்

இதற்கிடையே பல பக்தர்கள் இதற்கு மேலும் கேரளாவுக்குப் போக விரும்பாமல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவிப் பகுதிக்குச் சென்று அங்கு ஐயப்பன் படத்தை வைத்து வணங்கி விரதத்தை முடித்து வருகின்றனராம். மேலும் பலர் இனியும் கேரளாவுக்குப் போக வேண்டாம், வேறு ஐயப்பன் கோவிலுக்குப் போகலாம் என்று தீர்மானிக்கும் நிலையும் உருவாகியுள்ளது.

சென்னை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் பலர், மீண்டும் சென்னைக்கே திரும்பி அங்குள்ள ஐயப்பன் கோவிலில் விரதத்தை முடிக்க திட்டமிட்டு வருகின்றனர்.
« PREV
NEXT »

No comments