இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது நேற்று இரவு ஒரு தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றது. இன்று காலை 5. 30 மணி நிலவரப்படி அது மேலும் வலுப்பெற்று தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருப்பெற்றுள்ளது.
இது தற்போது சென்னையிலிருந்து 900 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இலங்கை மற்றும் தமிழகத்தை நோக்கி இது நகரத் தொடங்கியுள்ளது. இன்றுஇரவுக்குள் இது புயலாக மாறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
எனவே கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் யாரும் கடலுக்குள் போக வேண்டாம் என்றுகேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடலில் காற்றும் பலமாக வீசும். நாளை முதல் தமிழகத்தின் வட பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசத்தில் மழை பெய்யத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகவுள்ள இந்தப் புயலானது தொடர்ந்து மேற்கு வட மேற்குத் திசையில் நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆநதிரா இடையே, கடலூர் மற்றும் நெல்லூர் இடையே 29ம் தேதி அதிகாலையில் கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே நாளை முதல் 29ம் தேதி வரை தமிழகத்தின் வட மாவட்டங்களில் கன மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
No comments
Post a Comment