Latest News

December 04, 2011

கருணாநிதி வழிகாட்டுதலின்படி இனி தீவரமாக அரசியலில் ஈடுபடுவேன்- கனிமொழி
by admin - 0

திமுக தலைவர் கருணாநிதியின் வழிகாட்டுதலின்படி இனி மேல் தீவிரமாக அரசியலில் ஈடுபடுவேன் என்று கனிமொழி கூறியுள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி கைதாகி 6 மாதங்களுக்கும் மேலாக திஹார் சிறையில் அடைபட்டிருந்தார் கனிமொழி. சில நாட்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் விடுதலையானார். நேற்று சென்னை திரும்பினார். அவரை திமுக தலைவர் கருணாநிதி தனது மனைவி தயாளுவுடன் விமான நிலையம் சென்று நேரில் வரவேற்றார்.

கருணாநிதியும், தயாளுவும் கட்டித் தழுவி கனிமொழியை வரவேற்றனர். பின்னர் வீடு திரும்பிய கனிமொழிக்கு திமுக பிரமுகர்கள் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் நின்று வரவேற்றனர்.

இன்று தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார் கனிமொழி. அப்போது அவரிடம், உங்களது மன நிலையும், உடல் நிலையும் எப்படி உள்ளது என்று செய்தியாளர்கள் கேட்டபோது, நன்றாக இருக்கிறது என்றார்.

இனி தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவீர்களா என்ற கேள்விக்கு, தலைவர் என்னை அரசியலுக்கு அழைத்து வந்து இருக்கிறார். அவர் என்ன எதிர்பார்க்கிறாரோ அந்த அளவுக்கு நிச்சயமாக தொடர்ந்து தீவிர அரசியல் பணியில் ஈடுபடுவேன் என்றார்.

உங்கள் மீதான வழக்கு குறித்து என்ன கருதுகிறீர்கள் என்ற கேள்விக்கு,

இந்த வழக்கை கழகமும், நானும் சரியான முறையில் நீதிமன்றத்தில் சந்தித்து வருகிறோம். கட்சிக்கும் எனக்கும் ஏற்பட்டுள்ள பேரை நீதி மன்றத்தில் சட்டப்படி சந்தித்து மீண்டு வருவேன் என்றார்.

சென்னையில் அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்த கேள்விக்கு, தலைவரும், எனது கணவரும் மிகுந்த வருத்தம் அடைந்து இருந்தனர். இந்த நேரத்தில் எனது வலிகளுக்கும், கஷ்டங்களுக்கும் நேற்றைய வரவேற்பு மிகப் பெரிய மருந்தாக அமைந்தது. சென்னை வந்ததில் மிகப்பெரிய மகிழ்ச்சி. அனைவரையும் சந்திக்க முடிந்தது. எல்லோரும் அன்போடு என்னை வர வேற்றது நெகிழ வைத்தது.

நான் சென்னை திரும்பியதை விட அத்தனை பேரையும் சந்திக்க முடிந்ததுதான் எனக்கு பெரும் மகிழ்ச்சி அளித்தது என்றார் கனிமொழி.
« PREV
NEXT »

No comments