Latest News

December 26, 2011

சுனாமி நினைவலைகள்: 7 ஆண்டு ஆகியும் அழியாத நினைவுகள்-கடலோர மாவட்டங்களில் அஞ்சலி
by admin - 0

ஆசிய நாடுகளை சுனாமி தாக்கியதன் 7 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று தமிழ்நாடு முழுவதும் கடலோர மாவட்டங்களில் அனுசரிக்கப்பட்டது.

ஆழிப்பேரலையின் கோர தாண்டவத்திற்கு உயிரிழந்தவர்களின் உறவினர்கள், கடற்கரையில் குவிந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.


2004 ம் ஆண்டு டிசம்பர் 24ம் நாள் காலை 8 மணியளவில் தமிழ்நாடு கடலோர மாவட்ட மக்கள் அப்படியொரு மரண அரக்கன் தங்களைத் தேடி வருவான் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கடலில் இருந்து எழும்பிய ராட்சத அலைகள், கடற்கரையில் இருந்த மக்களையும், அவர்களின் உடமைகளையும், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கபளீகரம் செய்துகொண்டு சென்றது.

பெற்றோர்களை இழந்த குழந்தைகளும், குழந்தைகளை காவு கொடுத்த பெற்றோர்களும், கணவனை இழந்தவர்களும், உற்றார்களை, உறவுகளை, நட்புகளை வாரிச் சுருட்டிக் கொண்டோடியது சுனாமி. ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த ஆசியநாடுகளும் அழுது அரற்றிய காட்சி வரலாற்றில் காண முடியாத காட்சியாகிவிட்டது.

சென்னை முதல் குமரி வரை

இந்தோனேசியா முதல் இந்தியா வரை இந்தியப் பெருங்கடலைப் புரட்டிப் போட்ட சுனாமி அலைகளுக்கு லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் சென்னை முதல் குமரி வரை கடற்கரையோர மாவட்ட மக்கள் சுனாமியின் கோரத்தாண்டவத்திற்கு 8 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர்.

கடற்கரையோரங்களில் வீடுகட்டி ராஜவாழ்க்கை வாழ்ந்தவர்கள் எல்லாம் ஒரே நாளில் தெருவோரத்திற்கு வந்த சம்பவமும் அந்த நாளில் நிகழ்ந்தது. நாகை மாவட்டத்தில் மட்டும், 6ஆயிரத்து 65 பேரை ஆழிப் பேரலை அள்ளிப்போட்டுக்கொண்டது.

கிருஸ்துமஸ் தினத்திற்கு மறுதினம் என்பதால் வேளாங்கண்ணியில் குவிந்திருந்த பக்தர்கள் அனைவரும் கொத்துக்கொத்தாக கடலின் கோர நாவுகளுக்கு இரையாகினர்.

நினைவு அஞ்சலி




கடலோர மக்களை சுனாமி சுருட்டிப்போட்டு இன்றோடு ஏழு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இதனையொட்டி, கடல் கொண்ட தங்களின் உறவினர்களுக்கு ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை மெரீனா கடற்கரையில் குழுமிய மக்கள் கடலுக்குள் குடம் குடமாய் பாலை ஊற்றி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நாகை, வேளாங்கன்னி, தரங்கம்பாடி, உள்ளிட்ட தமிழக கடற்கரையோர பகுதிகளில் நினைவு பேரணி அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பல பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

கன்னியாகுமரியில் அஞ்சலி

கன்னியாகுமரி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு தூண் முன்பு ஏராளமானோர் மெழுகு வர்த்தி ஏற்றிவைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இந்தியா மட்டுமின்றி சுனாமி தாக்கிய மற்ற நாடுகளும் இன்று ஏழாம் வருட துக்க தினத்தை அனுசரித்து வருகின்றன.
« PREV
NEXT »

No comments