பாகிஸ்தானின் கராச்சி நகரி்ன் சொராப் காத் பகுதியில் உள்ள ஒரு மதரஸாவின் ரகசிய அறையில் 50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்தனர். தீவிரவாதிகள் சிறுவர்களை கட்டாயப்படுத்தி தீவிரவாத பயிற்சி அளித்து வந்துள்ளனர். தாங்கள் சொல்வதை செய்ய மறுக்கும் சிறுவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
இது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அந்த மதரஸாவிற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ரகசிய அறையில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட சிறுவர்களை போலீசார் மீட்டனர். மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கைபர் பக்துன்க்வா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸ் அதிகாரி கடாப் தெரிவித்தார்.
ஒரு குறிப்பிட்ட கொள்கையைப் பின்பற்றும் மதரஸாக்கள் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். நாட்டில் 20,000க்கும் அதிகமான மதரஸாக்கள் குழந்தைகளுக்கு மார்க்கக் கல்வி கற்றுத் தருகின்றன. அவை அனைத்தையும் அரசாங்கத்தில் பதிவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
வடமேற்கு கைபர் பக்டுங்வா மாகாணத்தில் உள்ள பல மதரஸாக்கள் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவ்வாறு குற்றம்சாட்டப்பட்ட பல மதரஸாக்களில் அரசு சோதனை நடத்தியது. பெஷாவர் அருகே உள்ள மவுலானா சமி உல் ஹக் மதரஸாவில் தான் தாலிபான் தலைவர் முல்லா உமர் பயிற்சி பெற்றதாக நம்பப்படுகிறது.
No comments
Post a Comment