Latest News

December 10, 2011

யூரோ மண்டலத்தை காப்பாற்ற கடும் விதிமுறைகள்: 17 நாடுகள் ஏற்றன; ஏற்க மறுத்தது பிரிட்டன்
by admin - 0

யூரோ மண்டலத்தில் நிலவும் நிதித் தட்டுப்பாடு, கடன் நெருக்கடியை சமாளிக்க தத்தமது நாடுகளின் வரி விதிப்பிலும், வரவு செலவுத் திட்டத்திலும் மாற்றங்களைச் செய்ய அந்த நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

ஆனால், இந்த யூரோ கூட்டமைப்பு மண்டலத்தில் உள்ள 27 நாடுகளில் யூரோவை பயன்படுத்தும் 17 நாடுகள் மட்டுமே இந்தத் தீர்வை உடனடியாக ஏற்றுக் கொண்டன. யூரோவைப் பயன்படுத்தாத பிரிட்டன், இந்தத் திட்டலிருந்து விலகி நிற்பதாக அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் சுவீடன், ஹங்கேரி, செக், டென்மார்க், போலந்து, லாட்வியா, அயர்லாந்து உள்ளிட்ட 9 நாடுகள் தங்களது நாடாளுமன்றங்களில் இது குறித்து ஆலோசித்துவிட்டு முடிவெடுப்பதாக அறிவித்துள்ளன.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் கடந்த இரு நாட்களாக ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர்கள் யூரோ மண்டலப் பொருளாதார நெருக்கடிக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு காண்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

இக் கூட்டத்தில் "fiscal compact'' என்ற திட்டத்தின் கீழ் புதிய கட்டுப்பாடுகளை கடைபிடிக்க இந்த நாடுகள் முடிவு செய்தன. இந்தத் திட்டத்தில் அடங்கியுள்ள முக்கிய அம்சங்கள்:

1. ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் தங்கள் ஆண்டு பட்ஜெட்டில், நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி), 0.5 சதவீதத்தைத் தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

2. நாட்டின் பொதுக் கடன் ஜி.டி.பியில், 3 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கக் கூடாது. மீறினால், பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்.

3. இந்த விதிகளை தங்களது நாடுகளின் அரசியல் சாசனங்களில் திருத்தங்கள் செய்து சேர்க்க வேண்டும்.

4. ஐரோப்பிய நாடுகளுக்கு நிதித் தட்டுப்பாடு ஏற்படும்போது உதவும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் 'ஐரோப்பியன் ஸ்டெபிளிட்டி மெக்கானிசம்' (European Stability Mechanism-ESM) என்ற நிரந்தர அமைப்பு 2012ம் ஆண்டு ஜூலை முதல் செயல்படத் துவங்கும்.

5. இந்த அமைப்புக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 666 பில்லியன் டாலர் நிதி போதுமா என்பது ஆராயப்பட்டு, தேவைப்பட்டால் அதிகரிக்கப்படும்.

6. கடனில் சிக்கித் தவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு உதவுவதற்காக, சர்வதேச நிதியத்திற்கு (International Monetary Fund-IMF) கூடுதலாக 200 பில்லியன் யூரோ நிதி வழங்கப்படும். இந்த நிதியை பொருளாதார பலம் கொண்ட ஐரோப்பிய யூனியன் மற்றும் யூரோ மண்டல நாடுகள் வழங்கும்.

7. வரும் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த "fiscal compact'' திட்டம் அமலுக்கு வரும்.

இந்தத் திட்டத்துக்கு யூரோ மண்டலத்தில் உள்ள 27 நாடுகளிடம் இருந்துமே சம்மதத்தைப் பெற இத் திட்டங்களை முன் வைத்த ஜெர்மனியும் பிரான்சும் முயன்றன. ஆனால், அதை பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஏற்காததால், இது ஒரு ஐரோப்பிய ஒப்பந்தமாக ஆகாமல், அதற்கும் குறைவாக நாடுகள் இடையிலான ஒரு உடன்படிக்கையாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள சில நிதி ஒழுங்கு முறைகளில் இருந்து பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் திட்டவட்டமாகக் கூறிவிட்டதோடு, உடன்படிக்கையை ஏற்கவும் மறுத்துவிட்டார்.

இந்த உடன்படிக்கையை ஏற்பது பிரிட்டனின் நலன்களுக்கு உகந்ததல்ல என்பதால் பிரிட்டன் இதில் கையெழுத்திடவில்லை என்றும் கெமரூன் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments