Latest News

December 12, 2011

கேரள அரசு, மத்திய அரசைக் கண்டித்து டிச. 14ம் தேதி தேனியில் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம்
by admin - 0

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநில மோதல்களை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசையும், பிடிவாதமாக இருந்து வரும் கேரள அரசையும் கண்டித்து தேனியில் டிசம்பர் 14ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகம், கேரளம் இடையிலான மோதலை வளர்க்கும் வகையில் மத்திய அரசின் போக்கு உள்ளது. இரு மாநிலங்களுக்கிடையே நிலவும் கலவரச் சூழலை அகற்ற உதவாமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது.

தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் சென்ற ஐயப்ப பக்தர்களை அங்குள்ள விஷமிகள் தாக்கியிருக்கிறார்கள். இதை கேரள அரசு கண்டிக்கவில்லை, தமிழக பக்தர்களைக் காக்கவும் முன்வரவில்லை. இது கண்டனத்துக்குரியது.

அதேபோல புதிய அணை கட்டுவோம் என்று கூறி கேரள சட்டசபையில் தீர்மானம் போட்டிருப்பதும் மோதலை அதிகரிக்கும் செயலாகும்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து டிசம்பர் 14ம் தேதி தேனியில் எனது தலைமையில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்ட போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்துள்ளார் அவர்.
« PREV
NEXT »

No comments