Latest News

November 12, 2011

ஆப்கானில் பெண்களுக்கு தண்டனையாய் கல்லடி, துப்பாக்கிச் சூடு
by admin - 0

ஆப்கானிஸ்தானின் மத்தியில் உள்ள கஸ்னி பிராந்தியத்தில் தாலிபான்கள் விதவைத் தாய் ஒருவரையும் அவரது மகளையும் கல்லால் அடித்தும் பின்னர் அவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றும் உள்ளதாக அவர்தம் உறவினர்களும் மருத்துவர்களும் பிபிசிடம் தெரிவித்துள்ளனர்.
ஒழுக்கக்கேடான விஷயங்களில் இந்தப் பெண்கள் ஈடுபட்டதாக தாலிபான்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இளம் விதவை ஒருவரும் அவரது மகளும் வாழ்ந்துவந்த வீட்டுக்குள் நுழைந்த தடாலடியாக நுழைந்த தாலிபான் ஆயுததாரிகள், வெளி ஆண்களுடன் உறவு வைத்துள்ளதாக அந்தப் பெண்கள் மீது குற்றம் சாட்டியதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தாலிபான்கள் அப்பெண்களை வீட்டை விட்டு வெளியில் இழுத்துப் போட்டு கல்லால் அடித்தும், பின்னர் துப்பாக்கியால் சுட்டு சாகடித்தும் இருந்தனர்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்களெல்லாம் அந்த ஆயுததாரிகளைத் தடுத்து நிறுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
அப்பகுதியின் காவல்துறைத் தலைமையதிகாரி அலுவலகத்துக்கும், பிராந்திய ஆளுநரின் அலுவலகத்துக்கும், ஆப்கானிய உளவுத்துறையின் முக்கிய அலுவலகம் ஒன்றுக்கும் வெறும் சில நூறு மீட்டர் தூரத்திலே இப்படி ஒரு கோர சம்பவம் நடந்துள்ளது.
திருமண பந்தத்துக்கு வெளியில் உறவு வைத்திருப்பவர்கள் பற்றி தகவல் தரும்படி கஸ்னியின் மதத் தலைவர்கள் அண்மையில் ஃபத்வா எனப்படும் மத ஆணைகளைப் பிறப்பித்திருந்தனர் என்று கூறப்படுகிறது
இந்த நகரைக் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஆப்கானிய அரசு அதிகாரிகள் திணறிவருகிறார்கள் என்றே தெரிகிறது.
இந்தப் பிராந்தியத்தில் தாலிபான்கள் தமது தரப்பில் ஆளுநர் ஒருவரையும், நீதிபதிகளையும் வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்த ஊரில் உள்ள வானொலி நிலையங்கள் சிலவற்றில் தற்போது தாலிபான்களின் பிரச்சாரப் பாடல்கள் ஒலிப்பதாகவும் சொல்கிறார்கள்.
கஸ்னியைச் சுற்றிய இடங்களில் கிளர்ச்சிக்காரர்கள் வெளிப்படையாகவே உலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
« PREV
NEXT »

No comments