யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கு மற்றும் வளாகத்திலுள்ள மண்டபங்கள், விரிவுரை அறைகளைச் சென்று பார்த்த பொலிஸார் வழமைக்கு மாறான எந்த நிகழ்வும் இல்லாததால் அமைதியாகத் திரும்பினர்.
பல்கலைக்கழகத்துக்குள் பொலிஸார் குவிக்கப்பட்டும் சூழலில் இராணுவத்தினர் தயார் நிலையில் பெரும் எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டும் இருந்ததால் சிறிது நேரம் அந்தப்பகுதியில் பதற்றம் நீடித்தது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்று முற்பகல் கூடிய மாணவர்களில் ஒரு பகுதியினர் தமிழினத்தின் விடுதலைக்காக போராடி வீரச்சாவடைந்த போராளிகளுக்காகவும், போரில் மரணமடைந்த மக்களுக்காகவும் மௌன அஞ்சலியைச் செலுத்தினர் என்பதே பரவிய தகவல்.
இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்திடம் கேட்டபோது:
´பல்கலைக் கழகத்தினுள் நிலைமையை அவதானிப்பதற்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் என்னிடம் அனுமதியைக் கேட்டார். அதற்கான அனுமதியை வழங்கினேன். பல்கலைக்கழகத்தின் நிலைமையை அவதானித்து விட்டு அவர்கள் சென்று விட்டனர்´என்றார்.
பல்கலைக் கழகத்தைச் சோதனையிட வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது என யாழ். பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரைக் கேட்டபேது,
´பல்கலைக் கழகத்தில் பிரச்சினை நடப்பதாக அங்கிருந்து தகவல் ஒன்று கிடைத்தது. அங்கு சென்று சோதனை செய்தபோது பிரச்சினை எதுவும் இடம்பெறவில்லை எனத் தெரியவந்தது. நாம் அங்கு யாரையும் தாக்கவும் இல்லை; கைது செய்யவும் இல்லை´ என்றார்.
No comments
Post a Comment