Latest News

November 04, 2011

சீன ஆட்சியில் தமது உரிமைகள் தொடர்ந்தும் மிக மோசமாகவும் பறிக்கப்படுவதால் வெறுத்துப்போய் திபெத் பெண் துறவி தீக்கொளுத்தி மாண்டார்
by admin - 0


சீனாவின் மேற்குப் பகுதியில் திபெத்திய பௌத்த பெண் துறவி ஒருவர் தனக்குத் தானே தீவைத்துக்கொண்டு உயிரிழந்ததுள்ளார் என்று சீனாவிலிருந்தும், திபெத்திலிருந்தும் வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிச்சுவான் பிராந்தியத்தில் உள்ள டாவு என்ற ஊரின் மையப் பகுதியில் உள்ள ஒரு பாலத்தில் நின்று இந்த 35 வயது பெண் துறவி தன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக்கொண்டுள்ளார்.
அவருடைய பெயர் கியு சியாங் என்றும், இவர் ஏன் உயிரை மாய்த்துக்கொண்டார் என்பது தெரியவில்லை என்றும் சீன அரசு செய்தி நிறுவனமான ஸின்ஹுவா கூறுகிறது.
ஆனால் உயிர் விடும் நேரத்தில் தலாய் லாமாவை திபெத்துக்கு திரும்பி வர அனுமதியுங்கள் என்று இவர் கத்தியதை மற்றவர்கள் கேட்டுள்ளனர் என்று திபெத் விடுதலை என்ற பிரச்சார இயக்கம் கூறுகிறது.

சீன ஆட்சி மீது விரக்தி

சீன ஆட்சியில் தமது உரிமைகள் தொடர்ந்தும் மிக மோசமாகவும் பறிக்கப்படுவதால் வெறுத்துப்போய் ஆட்கள் தமக்குத்தாமே தீவைத்து உயிர்விடுவது என்பது முன்பில்லாத அளவில் தற்போது நடந்துவருவதாக அந்த இயக்கம் தெரிவிக்கிறது.
இந்த வருடத்தில் மட்டுமே இவ்வாறாக 11 பேர் தீவைத்துக்கொண்டதாகவும் அதில் 6 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீவைத்துக்கொண்டவர்களில் இருவர் பௌத்த மதத் துறவிகள் என்றும் குறிப்பிடப்படுகிறது.
நாடு கடந்த திபெத்திய அரசாங்கத்தின் பிரதமரான லொப்சங் சன்கே அமெரிக்க காங்கிரஸ் மன்றத்தில் உரையாற்றுகையில், திபெத்தில் கட்டவிழ்ந்து வரும் பெருந்துயரத்தின் தீவிரத்தன்மையையும் செயல்பட வேண்டியதன் அவசரத்தையும் உலகம் உணர வேண்டும் என்று கூறினார்.
உண்மை கண்டறிவதற்கான குழுவொன்றை திபெத்துக்கு அனுப்ப வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சீன நடவடிக்கைகள்

"மாறுவேடத்தில் வரும் பயங்கரவாதம்" என்று குறிப்பிட்டு, அப்படி ஒன்றை தலாய் லாமா வளர்க்கிறார் என்று சீனா பழி சுமத்துகிறது.
திபெத்தில் பெரும் எண்ணிக்கையில் பாதுகாப்புப் படையினரை பணியமர்த்துவது, அப்பகுதியில் தொலைதொடர்பு வசதிகளை துண்டிப்பது, அப்பகுதிக்குள் ஊடகவியலாளர்கள் செல்ல தடை விதிப்பது, பௌத்த மடங்களை மூடிவிடுவது, பிக்குகளை வலுக்கட்டாயமாக மறு-கல்விக்கு உட்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டுவருகிறது.
தீவைத்துக்கொண்டவர்களூக்கு உதவினார்கள், ஆட்கள் தீவைத்துக்கொண்டபோது அதனைத் தடுக்க ஒன்றும் செய்யாமல் இருந்தார்கள் என்று குற்றம்சாட்டி திபெத்தியர்கள் ஆறு பேரை சீனா சிறையில் அடைத்துள்ளது.
கிர்ட்டி என்ற ஒரு மடத்திலிருந்து சுமார் முந்நூறு பிக்குகள் இவ்வாண்டில் முன்னதாக வெளியேற்றப்பட்டிருந்ததுதான் திபெத்தில் நடந்துவரக்கூடிய ஆர்ப்பாட்டங்களின் உடனடிக் காரணமாக இருந்து வருகிறது.
ஆனால் அந்த முந்நூறு பேரின் கதி என்ன ஆனது என்பது இன்னும் தெளிவில்லாமலேயே இருக்கிறது.




« PREV
NEXT »

No comments