Latest News

November 06, 2011

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு கலாம் அளித்த சான்றிதழை ஏற்க மாட்டோம்: உதயக்குமார்
by admin - 1

கூடங்குளம் வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எங்களைச் சந்திக்கவில்லை. மேலும் அவர் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு அளித்துள்ள நற்சான்றிதழமையும் நாங்கள் ஏற்க முடியாது என்று கூடங்குளம் போராட்டக்குழுத் தலைவர் உதயகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், அப்துல் கலாம் ஒரு வி்ஞ்ஞானி போல பேசவில்லை. குறிப்பிட்ட சிலரை மட்டும் சந்தித்து விட்டு அவர் போய் விட்டார் என்றும் உதயக்குமார் புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூடங்குளம் வரும்போது எங்களையும் சந்திப்பார், எங்களது மக்களிடம் குறைகளை கேட்பார் என நம்பியிருந்தோம். ஆனால் அவர் வரவில்லை. இது எங்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

இதை விட சிறந்த தொழில்நுட்பம் தேவை என்று அப்துல் கலாம் எழுதியுள்ள கட்டுரை இந்து நாளிதழில் வந்துள்ளது. ஆனால் இன்று கூடங்குளம் அணு மின் நிலையப் பாதுகாப்பு சிறப்பாக உள்ளதாக கூறியுள்ளார் கலாம். இது நேர் மாறாக, முரண்பாடாக உள்ளது.

இங்கு அமைக்கப்பட்டிருப்பது சிறப்பான அணு மின் நிலையம் என்றால் இதேபோல ஒன்றை கேரளாவில் போய் அவர்கள் அமைக்க முடியுமா? ஏன், மேற்கு வங்கத்தில் கூட நான்கை ஆரம்பிக்கட்டுமே. அதை ஏன் அவர்கள் செய்யவில்லை.

கூடங்குளம் சுற்றுவட்டாரத்தில் சுமார் 12 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஆனால், அப்துல்கலாம் 40 பேரை சந்தித்ததாக கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது. 40 பேரும் கூலிக்கு மாரடிப்பவர்களாக கூட இருக்கலாம்.

கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து கொஞ்சம் கழிவுதான் வெளியேறும் என்று வி்ஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது என்ன பேச்சு வி்ஞ்ஞானிகள் போல அவர்கள் பேச வேண்டும். கொஞ்சம் என்றால் எத்தனை டன் என்பதை அவர்கள் விளக்க வேண்டும். 

மேலும் இந்தப் பகுதியில் சுனாமி வராது, பூகம்பம் வராது என்று உத்தரவாதம் தரத் தயாரா? சுனாமி வந்தபோது 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலையை கடல் அலைகள் மூடியதை அத்தனை பேரும் பார்த்தோம். அப்படி இருக்கையில் 13.5 அடி உயரமே கொண்ட இந்த அணு உலைகளை கடல் அலைகள் மூடாதா?.

எங்களுக்கு கூடங்குளம் அணு மின் நிலையம் வேண்டாம். அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இந்தியாவுக்கு மின்சாரம் தேவைதான். அதை உற்பத்தி செய்ய பல மாற்று வழிகள் உள்ளன. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தாலுகாவிலும்,முக்கிய நகரங்களிலும் பல்வேறு வகையான மாற்று மின் உற்பத்தித் திட்டங்களை நிறைவேற்றலாம். அதைச் செய்யாமல் அணு உலைகளை நிறுவுவதை எந்தக் காரணம் கொண்டும் ஏற்க மாட்டாம்.

கூடன்குளம் அனுமின்நிலையத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் என உதயகுமார் கூறினார்.
« PREV
NEXT »

1 comment

இருதயம் said...

நண்பருக்கு வணக்கம் ....

தங்களின் கட்டுரையில் இருந்து திரு. உதயகுமார் எப்படியெல்லாம் மக்களை குழப்பி விடுகிறார் என்பதை அறிந்து கொண்டேன் .

// சுனாமி வந்தபோது 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலையை கடல் அலைகள் மூடியதை அத்தனை பேரும் பார்த்தோம்.//
எப்படி மக்களை உசுப்பேற்றி விடுகிறார் இவர் . 2004 ல் ஏற்பட்ட சுனாமியின் அதிகபட்ச உயரமாக 80 அடி இந்தோனேசியாவில் தான் பதிவு செய்யப்பட்டது . பாறையில் மோதி தண்ணீர் துளிகள் திருவள்ளுவர் சிலைக்கு மேல சென்றதை எவ்வளவு அழகாக 133 அடி உயரத்திற்கு சுனாமி வந்தது என்று கதை விடுகிறார் .

// முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூடங்குளம் வரும்போது எங்களையும் சந்திப்பார், எங்களது மக்களிடம் குறைகளை கேட்பார் என நம்பியிருந்தோம்.//
திரு . அப்துல் கலாம் வருகிறார் என்றவுடனே அவர் கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் அவரை சந்திக்கவும் மாட்டோம் என்று அறிக்கை விட்டாரே , இப்பொழுது என்ன பிலிம் காட்டுகிறார் .

// 40 பேரும் கூலிக்கு மாரடிப்பவர்களாக கூட இருக்கலாம். //
இவரை பின்பற்றுபவர் தான் உத்தமர் என்ற நினைப்பு போல . இவர் மேல் இருக்கும் குற்றசாட்டுகளை நான் நாகரீகம் கருதி சொல்லவில்லை . நினைப்பு தான் பொழப்ப கெடுக்கும் என்பது திரு. உதயகுமாருக்கு தெரியாதது ஆச்சரியம் தான் .

// இங்கு அமைக்கப்பட்டிருப்பது சிறப்பான அணு மின் நிலையம் என்றால் இதேபோல ஒன்றை கேரளாவில் போய் அவர்கள் அமைக்க முடியுமா? ஏன், மேற்கு வங்கத்தில் கூட நான்கை ஆரம்பிக்கட்டுமே. அதை ஏன் அவர்கள் செய்யவில்லை.//
இப்பொழுது தான் இந்தியா அணுமின் திட்டங்களுக்கு நேராக தன கண்களை திருப்பி உள்ளது . சரியான நிலம் இந்த மாநிலங்களில் இருந்தால் நிச்சயம் வரும் .

வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் தான் மக்கள் இவர் பின்னால் நிற்கிறார்கள் . அவர்களின் அச்சம் தீரும் நாள் வரப்போகிறது . காத்திருப்போம் .