உத்தரபிரதேச மாநிலம் புல்புரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, உத்தரபிரதேச வாலிபர்கள் வேலைக்காக பிச்சைக்காரர்களைப்போல மகாராஷ்டிரா மாநிலத்திடம் கையேந்துகிரார்கள் என்று தெரிவித்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த பவதோஷ் குர்ஜர் என்பவர் இந்திய குற்றப்பிரிவு தண்டனைச்சட்டம் 200 ன் கீழ் காங்கிஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கிற்கான ஆவணங்களை நவம்பர் 21-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சண்டிகரில் வழக்கு
இதேபோல் ராகுல் காந்திக்கு எதிராக அவர் மீது சண்டிகாரில் உள்ள தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உலகளாவிய மனித உரிமை கவுன்சிலை சேர்ந்த அரவிந்த் தாக்குர், சிவமூர்த்தி யாதவ் ஆகியோர் இம்மனுவை தாக்கல் செய்துள்ளனர். வாழ்வாதாரத்துக்காக வேறு மாநிலங்களில் வாழும் உத்தரபிரதேச மக்களைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதாக, ராகுல் காந்தி மீது அம்மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர்.
No comments
Post a Comment