Latest News

November 17, 2011

மரவள்ளியை தாக்கும் புதிய வைரஸ்-மரவள்ளி பளுப்புக் கீற்று வியாதி''
by admin - 0

மரவள்ளி தாவரத்தை தாக்குகின்ற ஒரு வகையான வைரசு தற்போது ஆப்பிரிக்காவில் மிகவும் வேகமாகப் பரவி வருவதாக ஐநா விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள்.
மக்களுக்கு தேவையான மூன்றில் ஒரு கலோரி சத்தை வழங்குகின்ற உலகின் முக்கியமான தாவரங்களில் மரவள்ளி ஒன்றாகும்.
ஐநாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, நோயின் தாக்குதல் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக கூறியுள்ளதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் ஏனைய வழிகளில் விவசாயிகளுக்கு உதவுவதற்கு அதிக நிதிக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.
மிகவும் குறைந்த மழை வீழ்ச்சி உள்ள இடங்களிலும், செழிப்பற்ற மண்ணிலும் வளரக்கூடிய மரவள்ளி ஒரு உலக உணவு ஆதாரமாக, குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் திகழுகிறது.
தற்போது கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியில் இந்த வைரசு அந்த தாவரத்தை வெகுவாகத் தாக்குவதாக ஐநாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு கூறியுள்ளது.
''மரவள்ளி பளுப்புக் கீற்று வியாதி'' என்று கூறப்படுகின்ற இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், அது ஒரு கொள்ளை நோய் என்ற நிலையை எட்டவிருப்பதாகவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.
முதலில் உகண்டாவில் 2006 ஆம் ஆண்டில் இது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களில் புரூண்டி மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய இடங்களிலும் இது முதல் தடவையாக காணப்பட்டிருக்கிறது.
இந்த வைரஸின் முக்கியமான பிரச்சினை என்னவென்றால், இந்த நோயின் சமிக்ஞை வேரில் மாத்திரமே தென்படும் என்பதால், அறுவடைக்கு செல்லும் வரை தமது தாவரம் செழிப்பாக வளர்ந்து வருகிறது என்றே விவசாயிகள் நம்பிக்கொண்டிருப்பார்கள்.
தற்போது பயிரிடலுக்காக விவசாயிகளுக்கு வழங்கப்படும் எந்த விதமான மரவள்ளி தாவர வகையும் இந்த நோயில் இருந்து தப்பிக்கும் வலுவை கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.
இந்த நோயை மட்டுப்படுத்துவதற்கு மாத்திரம் தற்போதைக்கு முயல முடியும் என்று தாவர உற்பத்தி மற்றும் பாதுகாப்பு அதிகாரியான மைக் றொப்சன் கூறுகிறார்.
இந்த வைரஸை கண்டுப்படுத்துவதற்காக தாம் தற்போது போராடிக்கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும், புதிய வகையான மரவள்ளி தாவரத்தை ஆராய்ந்து கண்டுபிடிப்பதற்கும் நிறையப் பணம் தேவை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

« PREV
NEXT »

No comments