கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் அவரால் நியமிக்கப்பட்டவர்கள் மக்கள் நலப் பணியாளர்கள். மொத்தம் 13000 பேரை அவர் நியமித்திருந்தார்.
இவர்களில் சுமார் 12,600 ஆயிரம் பேர் பணியிலிருந்து வந்தனர். ஜெயலலிதா பதவி ஏற்றதும் இவர்களுக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்தினார். இரு வாரங்களுக்கு முன்பு மொத்த பணியாளர்களையும் நீக்கி உத்தரவிட்டார். இவர்கள் அனைவரும் திமுக சார்புடையவர்கள் என்று அவர் காரணம் கூறினார்.
அரசின் இந்த முடிவுக்கு எதிராகவும், மக்கள் நல பணியாளர்கள் நீக்கத்தை ரத்துச் செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மக்கள் நல பணியாளர் சங்கம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை கடந்த 11-ம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுகுணா, மக்கள் நல பணியாளர்கள் நீக்கத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் தங்கள் பணியில் தொடர அனுமதி அளித்தும் அவர் உத்தரவிட்டார்.
மேலும், அந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இவர்கள் அனைவரையும் நாளை காலைக்குள் பணியில் சேர்த்துவிட வேண்டும் என்றும், இதுகுறித்த இறுதி அறிக்கையை நாளை மறுநாள் நீதிமன்றத்தில் தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments
Post a Comment