Latest News

November 21, 2011

எகிப்தில் ராணுவத்திற்கு எதிராக வெடித்தது கலவரம்-11 பேர் சுட்டுக் கொலை
by admin - 0

எகிப்தில் முபாரக் ஆட்சியை அகற்றப் போராடிய மக்கள் தற்போது ராணுவத்திற்கு எதிராக புரட்சியில் குதித்துள்ளனர். கெய்ரோவில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சுதந்திர சதுக்கத்தில் (தஹிரிர் சதுக்கம்) கூடிய மக்களைக் கலைக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டதால் எகிப்தில் மீண்டும் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது.

பல காலமாக எகிப்தை ஆட்டிப் படைத்து வந்த ஹோஸ்னி முபாரக் பதவி விலகக் கோரி மக்கள் அங்கு புரட்சியில் ஈடுபட்டனர். சுதந்திர சதுக்கத்தில் குழுமி மக்கள் நடத்திய போராட்டத்துக்கு ராணுவமும் மறைமுக ஆதரவு அளித்தது. இதையடுத்து முபாரக் பதவியை விட்டுஅகன்றார்.

அதன் பின்னர் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. முறைப்படி தேர்தல் நடத்துவோம் என்று அது கூறிய நிலையிலும், இன்னும் அது ஆட்சி நிர்வாகத்திலிருந்து அகலாமல் உள்ளது.

இதையடுத்து தற்போது ராணுவம் ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று கோரிமக்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். சுதந்திர சதுக்கத்தில் திரண்ட அவர்கள் அங்கிருந்தபடி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக நடந்து வரும் போராட்டம் தற்போது வன்முறைக் களமாக மாறியுள்ளது.

போராட்டம் நடத்த திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து விலகிச்செல்லுமாறு போலீஸாரும், ராணுவத்தினரும் உத்தரவிட்டனர். ஆனால் அவர்கள் அகல மறுத்ததால் போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர். இதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து அங்கு பதட்டமான நிலை காணப்படுகிறது. வன்முறை மூலம் தங்களை ஒடுக்க போலீஸாரும், ராணுவமும் முயல்வதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

என்ன நடந்தாலும் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் மக்களாட்சி மீண்டும் மலரும் வரை போராடப் போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் கூறியுள்ளதால் கெய்ரோவில் பெரும் பதட்ட நிலை காணப்படுகிறது.

இதற்கிடையே, தஹிரிர் சதுக்கம் பகுதியில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒருவரின் உடலை, போலீஸ்காரர்கள் சிலர் இழுத்துச் சென்று குப்பைத் தொட்டியில் போடும் வீடியோ காட்சி ஒன்று டிவிட்டர் மூலம் பரவியுள்ளது. இதனாலும் பரபரப்பு அதிகரித்துள்ளது.

எகிப்து தவிர அலெக்சான்ட்ரியா, சூயஸ் உள்ளிட்ட நகரங்களிலும் கூட போராட்டம் வெடித்துள்ளது. அங்கும் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

கியூனா, அசியூட்ஆகிய நகரங்களிலும் கூட போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
« PREV
NEXT »

No comments