Latest News

October 30, 2011

சரண் அடைகிறார் கடாபி மகன்:ஐ.சி.சி.யுடன் பேச்சுவார்த்தை _
by admin - 0

லிபியாவின் மறைந்த முன்னாள் தலைவர் கடாபியின் மகன்மார்களுள் ஒருவரான சயீப் அல் இஸ்லாம், 39, சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் (ஐ.சி.சி.,) உள்ள தனது வழக்கில் சரண் அடைவதற்கான பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகிறார். 'லிபியாவில் நடந்த போர்க் குற்றங்கள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது" என அவர் கூறியதாக ஐ.சி.சி.,யின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

லிபியாவில் கடாபி ஆட்சிக்கு எதிராக நடந்த மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மீது இராணுவத்தை ஏவி வன்கொலைகளில் ஈடுபட்டதற்காக, கடாபி மற்றும் சயீப் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில், இருவரையும் கைது செய்வதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.மக்களுக்கு எதிரான குற்றவியல் செயல்களில் மறைமுகமாக கூட்டுச் சதியில் ஈடுபட்டது, கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையிலான நாட்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மக்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தியது ஆகிய குற்றங்கள் சயீப் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

எதிர்ப்பாளர்களால் கடாபியும், அவரது மற்றொரு மகன் முட்டாசிமும் கொல்லப்பட்ட நிலையில், சயீப் அல் இஸ்லாம் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. ஒருவேளை அவர் நைஜர், லிபியா எல்லையில் பதுங்கியிருக்கக் கூடும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அவை உறுதி செய்யப்படவில்லை.இந்நிலையில், ஐ.சி.சி.,யில் தன் மீதான வழக்கில் சரண் அடைவதற்கான பேச்சு வார்த்தைகளை சயீப், சிலர் மூலம் நடத்தி வருகிறார்.

இதுகுறித்து ஐ.சி.சி., வழக்கறிஞர் லூயிஸ் மொரனோ ஒகம்போ கூறியதாவது:சயீபுக்காக பேச்சு நடத்துவோர் தங்களை யார் என்று காட்டிக் கொள்ளவில்லை. எங்களுக்கும் சயீபுக்கும் இடையில் சிலர் பேச்சு நடத்துவதால் சயீபுடன் நேரடித் தொடர்பு எங்களுக்கு இல்லை. அவர் எங்குள்ளார் என்பதும் தெரியாது.லிபியாவில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது என்றும், அதை விரைவில் நிரூபிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதன் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.இவ்வாறு ஒகம்போ தெரிவித்தார்.
 
« PREV
NEXT »

No comments