Latest News

October 26, 2011

இந்திய ராணுவ ஹெலிகாப்டரின் ஜிபிஎஸ் கருவியிலிருந்து ரகசிய தகவல்களை 'டெளன்லோட்' செய்த பாகிஸ்தான்!
by admin - 0

பாகிஸ்தானுக்குள் தவறுதலாக நுழைந்த இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டரை தரையிறங்க வைத்த பாகிஸ்தான் ராணுவத்தினர், அந்த ஹெலிகாப்டரில் இருந்த ஜிபிஎஸ் கருவியில் (Global positioning system) இருந்து இந்திய ராணுவத்தின் விமான-ஹெலிகாப்டர் தளங்கள் குறித்த ஏராளமாண ரகசிய தகவல்களை டெளன்லோட் செய்து கொண்டு, ஹெலிகாப்டரை விடுவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய ராணுவத்தின் விமானப் பிரிவைச் சேர்ந்த சீட்டா வகை ஹெலிகாப்டர் ஒன்று காஷ்மீரின் லே பகுதியிலிருந்து பிம்பத் நோக்கி பறந்து கொண்டிருந்தது. அப்போது தவறுதலாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்தது.

இதையடுத்து விரைந்த பாகிஸ்தான் விமானப் படையினர் இந்திய ஹெலிகாப்டரை வலுக்கட்டாயமாக தரையிறங்க வைத்தனர். இந்த ஹெலிகாப்டரை நோக்கி விரைந்து வந்த இரு போர் விமானங்கள், தரையிறங்காவிட்டால், சுட்டு வீழ்த்துவோம் என எச்சரித்ததால் அந்த ஹெலிகாப்டர் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆர்டிலரி பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹெலிபேடில் தரையிறங்கியது. இந்த ஹெலிபேடின் எண் 90 ஆகும்.

இதையடுத்து அந்த ஹெலிகாப்டரில் இருந்த 4 இந்திய ராணுவத்தினரிடம் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதே நேரத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் வயர்லெஸ் பிரிவினர், இந்திய ஹெலிகாப்டரில் ஏறி அதன் ஜிபிஎஸ் கருவியில் இருந்து பல ரகசிய தகவல்களை டெளன்லோட் செய்துள்ளனர்.

ஹிமாலயப் பகுதியில் உள்ள சியாசின், ஆகாஷ் சின், லடாக், கார்கில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்திய விமானப் படைத் தளங்கள், ஹெலிபேடுகள் குறித்த பல ரகசிய தகவல்கள் அதில் அடக்கம்.

இந்தப் பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது லே பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தின் 14 கார்ப்ஸ் டிவிசன் ஆகும். இந்த படைப் பிரிவைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், எங்கள் படைப் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஹெலிபேடுகள் குறித்த விவரங்களும், பல தளங்களின் சங்கேத குறிகளும் (code signs) இப்போது பாகிஸ்தானிடம் சிக்கிவிட்டது என்று கூறியுள்ளார்.

இதனால், எதற்காக அந்த ஹெலிகாப்டர் பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்தது என்பது குறித்து ராணுவ உளவுப் பிரிவினர், விமானப் படை உளவுப் பிரிவினர், ரா அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் மூலம் இன்னொரு அதிர்ச்சிகரமான விவரமும் வெளியே வந்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் number 90 ஹெலிபேடில் இந்திய ஹெலிகாப்டர் வலுக்கட்டாயமாக தரையிறக்கப்படும் வரை அந்த இடத்தில் அப்படி ஒரு தளம் இருப்பதே இந்திய ராணுவத்துக்குத் தெரியாது என்ற விவரமும் இப்போது தெரியவந்துள்ளது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை இந்திய ராணுவத்தின் 14வது படைப் பிரிவின் கமாண்டரான லெப்டினன்ட் ஜெனரல் ரவி தஸ்தான், கார்கில் பகுதிக்கு அட்வான்ஸ்ட் லைட் ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். அங்கு ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்படவே அதை சரி செய்ய, சீட்டா ரக ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது.

அதில் இரு விமானிகளும் இரு என்ஜினியர்களும் இருந்தனர். அப்போது வானிலை மிகவும் மோசமாகவே விமானிகள் தவறுதலாக ஹெலிகாப்டரை கார்கில் டவுனைத் தாண்டியுள்ள கில்ஜித்-பலிஸ்தான் பகுதியில் உள்ள மரோல் பகுதிக்குள் செலுத்தியுள்ளனர். இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியாகும்.

அப்போது தான் பாகிஸ்தான் ஹெலிகாப்டரை தரையிறங்க வைத்த ஜிபிஎஸ் கருவியில் இருந்த ரகசிய தகவல்களை கறந்து கொண்டு, ஹெலிகாப்டருக்கு பெட்ரோலும் நிரப்பி, வீரர்களை திருப்பி அனுப்பி வைத்துள்ளது.

பகல் 1.20 மணிக்கு தரையிறக்கப்பட்ட அந்த ஹெலிகாப்டரை மாலை 6 மணிக்கு பாகிஸ்தான் ராணுவம் விடுவித்தது. இந்த 5 மணி நேரத்தில் இந்திய ராணுவத்தின் விமானப் பிரிவின் பல ரகசியங்கள் பாகிஸ்தான் வசம் போய்விட்டன.
« PREV
NEXT »

No comments