Latest News

September 11, 2011

இரட்டை கோபுர அழிப்பு பத்து ஆண்டுகள் photo in
by admin - 0

உலக வல்லரசாக காலரை தூக்கி விட்டுக் கொண்டு திரிந்த அமெரிக்கர்களை நிம்மதியில்லாமல் போகச் செய்த சம்பவம் நடந்து இன்றுடன் 10 வருடங்கள் முடிகின்றன. 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவை உலுக்கிய நான்கு ஒருங்கிணைக்கப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் உலகையே அதிர வைத்த தினம் இன்று.

நியூயார்க், வாஷிங்டன் ஆகிய இரு நகரங்களிலும் 19 அல் கொய்தா தீவிரவாதிகள் நடத்திய விமானத் தாக்குதல்கள்லால் அமெரிக்காவே நிலை குலைந்து போனது. அதிலும் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் மீதே அல் கொய்தாவினர் கை வைத்ததால் பெரும் அதிர்ச்சி அடைந்தனர் அமெரிக்கர்கள்.

செப்டம்பர் 11ம் தேதி காலை, அமெரிக்காவுக்கு அன்று மோசமான நாளாகவே விடிந்தது. நான்கு ஜெட் விமானங்களை அல் கொய்தா தீவிரவாதிகள் கடத்தினர். அவற்றில் இரண்டு விமானங்களை நியூயார்க்கின் இரட்டை கோபுரம் மீது அடுத்தடுத்து மோத விட்டனர்.இதில் இரண்டு மணி நேரங்களில் இரு பிரமாண்ட கட்டடங்களும் தூள் தூளாகி சாம்பலாகி மண்ணோடு மண்ணாக சிதைந்து போனது.

இன்னொரு விமானம் பென்டகன் மீது மோதியது. நான்காவது விமானம், ஷாங்க்ஸ்வில்லி என்ற இடத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த அதி பயங்கர தாக்குதல்களில் கிட்டத்தட்ட 5000 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பின்லேடனின் அல் கொய்தாதான் காரணம் என்று தெரிய வந்ததும் அமெரிக்கா தீவிரவாதத்திற்கு எதிரான போரை அறிவித்தது. பின்லேடனை வேட்டையாடகளம் இறங்கியது அமெரிக்கப் படை.

ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்கப் படைகள் அதிரடியாக நுழைந்து அங்கு ஆட்சியில் இருந்து வந்த தலிபான்களை விரட்டியடித்தது. உலகம் முழுவதும் அல் கொய்தாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா முடுக்கி விட்டது. உலகின் பல நாடுகளிலும் தீவிரவாதத்திற்கு எதிரான தீவிரநடவடிக்கைகள் அந்த ஆண்டில்தான் தொடங்கின. பல தீவிரவாத அமைப்புகளை அமெரிக்கா தடை செய்தது.

ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டபடி பாகிஸ்தானுக்குள்ளும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்த அமெரிக்கப் படைகள், பின்லேடனை வேட்டையாடுவதில் மிகத் தீவிரமாக இருந்து வந்தன. அவர்களின் தொடர் முயற்சியின் விளைவாக 2011 மே மாதம் பாகிஸ்தானில் அபோதாபாத்தில் பதுங்கி வசித்து வந்த பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இன்றுடன் அமெரிக்கா மீதான தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன.இதையடுத்து அமெரிக்கா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுறுவியிருப்பதாகவும், கார் வெடிகுண்டுத் தாக்குதல்கள், சிறிய ரக விமானங்களை கடத்தித் தாக்கலாம் என்று உளவுத் தகவல்கள் கிடைத்திருப்பதாலும் அமெரிக்கா முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட அனேக நாடுகளில் பாதுகாப்பும், கணகாணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்குப் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் சமீபத்தில்தான் டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்பதால் நாடு முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், வணிக வளாகங்கள், கோர்ட்டுகள், வழிபாட்டுத் தலங்கள், முக்கிய ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என அனைத்து இடங்களிலும் பாதுகாப்பை அனைத்து மாநில அரசுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கமாண்டோப் படையிரும், அதிரடிப்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.












« PREV
NEXT »

No comments