Latest News

September 07, 2011

கலைஞர் டிவிக்கு ரூ.1.25 கோடி அபராதம்: 2 வாரத்தில் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு!
by admin - 0

 டி.பி. ரியாலிட்டி நிறுவனத்திடமிருந்து ரூ. 200 கோடி பெற்ற வழக்கில் கலைஞர் டிவிக்கு அமலாக்கப் பிரிவு ரூ. 1.25 கோடி அபராதம் விதிக்கும் என்று தெரிகிறது. இந்தப் பணத்தைக் கொடுத்த, டி.பி. ரியாலிட்டி நிறுவனத்துக்கு ரூ. 222 கோடி அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரத்தை மிகக் குறைந்த விலைக்கு பெற்றதற்கு பிரதிபலனாக கலைஞர் டிவிக்கு டி.பி. ரியாலிட்டி நிறுவனம் ரூ. 200 கோடி கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. ஆனால், அந்த நிறுவனத்திடம் வட்டிக்குத் தான் ரூ. 200 கோடியைப் பெற்றதாகவும், அதை 10 சதவீத வட்டியோடு திருப்பித் தந்துவிட்டதாகவும் கலைஞர் டிவி கூறி வருகிறது.

இந்த விவகாரத்தில் தான் திமுக எம்பி கனிமொழி, கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் கலைஞர் டிவிக்கும் ஷாகித் உசேன் பல்வாவுக்குச் சொந்தமான டி.பி. ரியாலிட்டி நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கும் பணிகளில் அமலாக்கப் பிரிவு ஈடுபட்டுள்ளது. பணத்தைத் திரும்பத் தந்துவிட்டதால் கலைஞர் டிவிக்கு ரூ. 1.25 கோடி மட்டுமே அபராதம் விதிக்கப்படுவதாகத் தெரிகிறது.

டி.பி. ரியாலிட்டி நிறுவனத்திடம் வாங்கிய ரூ. 200 கோடியை கலைஞர் டிவி தனது கடன்களை அடைக்க பயன்படுத்தியுள்ளது. இந்தக் கடன்கள் 16 சதவீத வட்டிக்கு வாங்கப்பட்டவை. ஆனால், டி.பி. ரியாலிட்டி நிறுவனத்துக்கு கலைஞர் டிவி 10 சதவீதம் மட்டுமே வட்டியோடு பணத்தைத் திருப்பிச் செலுத்தியுள்ளது.

இதன்மூலம் கலைஞர் டிவிக்கு 6 சதவீத வட்டித் தொகையான ரூ. 1.25 கோடி மிச்சமாகியுள்ளது. இதனால் இந்தப் பணத்தை கலைஞர் டிவி அபராதமாக செலுத்த வேண்டும் என்று அமலாக்கப் பிரிவு கருதுகிறது.

இந்த அபராதத் தொகையை வசூலிக்கும் வகையில், கலைஞர் டிவியின் ரூ. 1.25 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கையப்படுத்தும் பணியை அமலாக்கப் பிரிவு விரைவிலேயே தொடங்கவுள்ளது.

அதே போல கலைஞர் டிவிக்குப் பணம் தந்த டி.பி. ரியாலிட்டிக்கு ரூ. 222 கோடியளவுக்கு அபராதம் விதிக்கவும் அமலாக்கப் பிரிவு முடிவு செய்துள்ளது. இவர்களுக்கு இவ்வளவு பெரிய தொகை அபராதமாக விதிக்கக் காரணம், ரூ. 200 கோடியை கலைஞர் டிவிக்குத் தந்துவிட்டு அதை வட்டியோடு திரும்பப் பெற்று லாபமும் அடைந்துள்ளது இந்த நிறுவனம். தவறும் செய்துவிட்டு வட்டி லாபமும் அடைந்த நிறுவனம் என்ற வகையில், அந்த நிறுவனம் ரூ. 200 கோடியையும் அதற்குக் கிடைத்த வட்டியான ரூ. 22 கோடியையும் அபராதமாகச் செலுத்த வேண்டும் என அமலாக்கப் பிரிவு கூறுகிறது.

இந்த நிறுவனத்தின் ரூ. 222 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கும் பணிகளையும் அமலாக்கப் பிரிவு ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. ஷாகித் உசேன் பல்வாவுக்குச் சொந்தமான டைனமிக்ஸ் ரியாலிட்டி, டிபி ரியாலிட்டி, கன்வுட் கன்ஸ்ட்ரக்ஷன், நிகார் கன்ட்ரக்ஷன், எவர்ஸ்மைல் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பென் ஆகியவற்றின் ரூ. 222 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கப் பிரிவு அடையாளம் கண்டுள்ளது.

அமலாக்கப் பிரிவின் இந்த நடவடிக்கை மூலம் வழக்கு விசாரணை கனிமொழிக்கு சாதகமாகத் திரும்பலாம் என்று தெரிகிறது. அமலாக்கப் பிரிவின் இப்போது எடுத்துள்ள நடவடிக்கைகள் மூலம், கலைஞர் டிவிக்கு, டிபி ரியாலிட்டி நிறுவனம் தந்த பணம் லஞ்சம் அல்ல, கடன் தான் என்பது உறுதியாகிறது என்று கனிமொழி தரப்பு வாதாடலாம்.

இந்த வழக்கில் கனிமொழி, சரத்குமார், டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் துணை நிறுவனமான சினியுக் நிறுவனத்தின் கரீம் மொரானி, இன்னொரு துணை நிறுவனமான குசேகாவ்ன் ரியாலிட்டி நிறுவனத்தின் ஆசிப் பல்வா, ராஜிவ் அகர்வால் ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவு சட்ட விரோத பணப் பரிமாற்றப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2 வாரத்தில் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு:

இந் நிலையில் கனிமொழி விரைவில் ஜாமீனில் விடுதலையாகலாம் என்றும் தெரிகிறது.

2ஜி வழக்கில் 3வது குற்றப் பத்திரிகையை, சிபிஐ அடுத்த வாரம் தாக்கல் செய்ய உள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான விசாரணையும் விரைவில் முடிவுக்கு வர உள்ளது.

இந்த விசாரணைகள் முடிந்து விட்டால் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யலாம்.

இதனால் 100 நாட்களுக்கும் மேலாக திகார் சிறையில் உள்ள கனிமொழி, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை முடிந்ததும், தன்னை பிணையில் விடுதலை செய்யக் கோரி மனு செய்வார் என்று தெரிகிறது.

சிபிஐ தரப்பிலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படாது என்று தெரிவதால், இரு வாரங்களில் கனிமொழி விடுதலையாக வாய்ப்புள்ளது.
« PREV
NEXT »

No comments