Latest News

August 07, 2011

இலங்கையின் வான் பரப்பில் 10 அமெரிக்க போர் விமானங்கள் ஊடுருவல்:
by admin - 0

சிறிலங்கா வான்பரப்பில் அமெரிக்க விமானப்படையின் 10 போர் விமானங்களைக் கொண்ட ஸ்குவாட்ரன் ஒன்று ஊடுருவிப் பறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கப் போர் விமானங்களின் அத்துமீறல் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுரகத்தில் கடும் எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் குடியியல் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் எம்.சி.நிமலசிறி, அமெரிக்கப் போர் விமானங்கள் சிறிலங்காவின் கடல் அல்லது வான் எல்லைக்குள் அத்துமீறிப் பறந்தனவா என்பதை உறுதி செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைத்துலகச் சட்டங்களின்படி, ஒரு நாட்டின் வான் பரப்பை இன்னொரு நாட்டின் விமானங்கள் பயன்படுத்த முன்னர் அதுபற்றி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா வான்பரப்பில் அமெரிக்கப் போர் விமானங்கள் அவ்வப்போது ஊடுருவுவதாகவும், அத்தகைய சந்தர்ப்பங்களில் அவற்றை வெளியேறுமாறு தாம் கூறி வருவதாகவும் சிறிலங்கா விமானப்படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவற்றின் தொடர்புசாதனங்களை இடைமறித்த போது அந்த போர் விமானங்கள் அமெரிக்க விமானந்தாங்கி கப்பலில் இருந்து புறப்பட்டு வந்தவை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க கடற்படையின் ஏழாவது படைப்பிரிவின் ஜெட் ஸ்குவாட்ரனைச் சேர்ந்த போர் விமானங்களே சிறிலங்கா வான்பரப்புக்குள் ஊடுருவியிருக்கலாம் என்று நம்புவதாகவும் சிறிலங்கா விமானப்படை அதிகாரி மேலும் கூறியுள்ளார்.

சிறிலங்காவின் மிக உயரமான மலைச்சிகரமான பீதுருதாலகாலவில் சிறிலங்கா விமானப்படை அமைத்துள்ள ரேடர் கண்காணிப்பு கருவியிலேயே அமெரிக்கப் போர் விமானங்களின் ஊடுருவல் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்த அதிகாரிகள் உடனடியாக அதுபற்றி சிறிலங்கா விமானப்படைத் தலைமையகத்துக்கும் குடியியல் விமானப் போக்குவரத்து அதிகார சபைக்கும் தகவல் அளித்திருந்தனர்.

இந்த ரேடர் கண்காணிப்பு கருவி மூலம் 200 கடல் மைல் தொலைவு வரைக்கும், 380 கி.மீ வான்பரப்பையும் கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கப் போர் விமானங்களின் ஊடுருவல் தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பேச்சாளர் கருத்து வெளியிட மறுத்து விட்டதாகவும் கொழும்பு ஆங்கில வார இதழ் குறிப்பிட்டுள்ளது.


« PREV
NEXT »

No comments