Latest News

July 15, 2011

தாயகத்திற்காக தியாகம் செய்தவர்களின் தியாகம் வீண் போகாது- தெற்கு சூடான் அதிபர்கிர்
by admin - 0

எப்போதுமே தியாகிகளின் உயிர்த் தியாகம் வீண் போகாது. வெற்றி நிச்சயம் வந்து சேரும் என்று உணர்ச்சிகரமாக பேசியுள்ளார் புதிதாக பிறந்துள்ள தெற்கு சூடான் நாட்டின் முதல் அதிபராகப் பொறுப்பேற்றுள்ள சல்வா கிர்.

வடக்கு சூடானின் அராஜக ஆட்சியையும், அடக்குமுறையையும் கண்டித்து கடந்த 50 ஆண்டுகளாக உணர்ச்சிப் பெருக்குடன் போராடி வந்த தெற்கு சூடான் மக்களுக்கு இறுதியில் விடுதலை கிடைத்துள்ளது. சுதந்திர நாடாக அவர்கள் பிறப்பெடுத்துள்ளனர்.

இதுகாலம் வரை நடத்தி வந்த ரத்தக் களறிப் போராட்டம் முடிவுக்கு வந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்துள்ளது தெற்கு சூடான்.

இந்த நாட்டின் முதல் அதிபராக சல்வா கிர் பொறுப்பேற்றுள்ளார். சுதந்திரத்திற்குப் பின்னர் முதல் முறையாக நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய தெற்கு சூடான் அதிபர் சல்வா கிர் கூறுகையில், தியாகிகளின் உயிர்த் தியாகம் எப்போதுமே வீண் போகாது. நமது தியாகிகளின் தியாகமும் வீண் போகவில்லை.

நமது தாயகத்தின் விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்து மாண்டவர்களின் போராட்டம் வீண் போகவில்லை.இன்று நாம் சுதந்திர மனிதர்களாகியுள்ளோம்.

இந்த நாளுக்காகத்தான் கடந்த 56 ஆண்டுகளாக நாம் காத்திருந்தோம். இந்த நாள், நமது இதயங்களில் கல்வெட்டாக பதிய வைக்கப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நாள்.

இன்று முதல் நமது அடையாளம் ஆப்பிரிக்கர்கள், தெற்கு சூடானியர்கள் என்பது மட்டுமே. நாம் இனி அராபியர்களோ அல்லது முஸ்லீம்களோ அல்ல.

நமக்கு பாதகம் செய்தவர்களை, நமக்கு துன்பம் விளைவித்தவர்களை நாம் மன்னித்து விடுவோம். நமது தாயகத்தை கட்டியெழுப்ப, வலிமை வாய்ந்த நாடாக இது உருவெடுக்க பாடுபடுவோம். நமது நாட்டுக்கான வலுவான அடித்தளைத்தை அமைக்க பாடுபடுவோம் என்றார் கிர்.

முன்னதாக தெற்கு சூடான் நாடு உருவானதையொட்டி நடந்த விழாவில் வடக்கு சூடானின் அதிபரான ஒமர் அல் பஷீரும் வருகை தந்திருந்தார். அவரைப் பார்த்து பலரும் கேலி செய்து, சிரித்து நகையாடினர். இருப்பினும் அதை தனது முகத்தில் காட்டாமல், வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் விழாவில் பங்கேற்றார் பஷீர்.
« PREV
NEXT »

No comments