Latest News

July 15, 2011

தெய்வத் திருமகள் - திரை விமர்சனம்
by admin - 4


5 வயது சிறுவனின் மனநிலை கொண்ட கிருஷ்ணாவாக வருகிறார் சீயான் விக்ரம். அவரது 5 வயது மகள் நிலா. சில நிகழ்வுகளால் விக்ரமிடமிருந்து நிலா பிரிக்கப்படுகிறாள். அவளைத் தேடி அலையும் கிருஷ்ணா, வழக்கறிஞரான அனுஷ்காவிடம் போய் சேர்கிறார்.
நல்லதொரு வழக்கிற்காக காத்திருக்கும் அனுஷ்கா, இந்த வழக்கை கையிலெடுக்கிறார். இந்த வழக்கின் மூலம் பணம் கிடைக்கும் என எதிர்பார்த்த அனுஷ்காவிற்கு, விக்ரமின் மனநிலையை அறிந்ததும் அவரை விட்டு விட்டு போய்விடுகிறார். சில சந்தர்ப்பங்களால் விக்ரமின் கதையை அனுஷ்கா கேட்க நேரிடுகிறது.
அப்போது அவருக்கு குழந்தை பிறந்ததும் அவரது மனைவி இறந்து விடுவதும், விக்ரம் மனநிலை குன்றியவராக இருப்பினும், தான் ஒருவரே குழந்தையை மிகுந்த பாசத்துடன் வளர்த்து வந்ததும், பின் அவரது மாமனாரால் ஏமாற்றப்பட்டு, குழந்தையை அவர்களிடம் பறிகொடுத்து விடுவதும் தெரியவருகிறது.
இதையடுத்து நீதிமன்றத்தின் மூலம் விக்ரமின் மகளை விக்ரமுடன் ஒருமணி நேர சந்திப்பிற்கு ஏற்பாடு செய்வதில் வெற்றி பெறுகிறார் வழக்கறிஞரான அனுஷ்கா.
அன்னை இல்லாத காரணத்தால், அக்குழந்தை தந்தையிடம் வளர வேண்டும் என்று நீதிமன்றம் மூலம் நிலாவை விக்ரமிடம் பெற்றுத் தர முயல்கிறார் அனுஷ்கா.
விக்ரமின் மாமனார் தரப்பில் வழக்கறிஞராக வரும் நாசர் எந்த வழக்கிலும் வெற்றியையே சந்தித்திருப்பவர், மனநிலை குன்றியவரிடம் குழந்தை எப்படி ஒப்படைப்பது என்று வாதிடுகிறார்.
deiva-thirumagan2
thirumakan

இந்த வழக்கின் முடிவு என்ன? கிருஷ்ணாவிற்கு அவரது குழந்தை நிலா கிடைத்தாளா? மனநிலை குன்றிய விக்ரமை விடுத்து அவரது மாமனாரிடம் நிலா சென்றாளா? என்பதை உணர்ச்சி பூர்வமான முடிவை சொல்லியிருக்கிறார்கள். இந்த பத்து நிமிட கிளைமாக்ஸ் காட்சியை பார்ப்பவர்களின் இதயம், எவ்வளவு இரும்பாக இருந்தாலும் அதனை இளகிய கண்ணீராக மாற்றிவிடுகிறது என்பதை நாம் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். உணர்வுகளும், பாச உணர்ச்சிகளும் இந்த பத்து நிமிடத்தில் நம்மை வசியம் செய்து விடுகின்றன.
சீயான் விக்ரம், இப்படத்தில் 5 வயது கிருஷ்ணாவாக வாழ்ந்திருக்கிறார். ‘மூன்றாம் பிறை’யில் ஸ்ரீதேவி போல, இப்படத்தில் விக்ரம் வாழ்ந்திருக்கிறார். இதற்கு நிச்சயம் விருது கிடைக்கும் என்றே சொல்லலாம். குழந்தைக்கு கதை சொல்வது,. கண்ணுங் கருத்துமாய் பார்த்துக் கொள்வது என மனிதர் அசத்தியிருக்கிறார்.
இப்படத்தின் மையமே 5 வயது மகளாக வரும் சாரா என்ற குழந்தைதான். இவளைச் சுற்றித்தான் கதையே நகர்கிறது. படம் பார்ப்பவருக்கு இது நம்முடைய குழந்தை என்று அன்பு கொள்ளும் அளவிற்கு மிகவும் இயல்பாய் நடித்து அசத்தியிருக்கிறாள். சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதினை இந்த சிறுமி தட்டிச் செல்வாள்.
வழக்கறிஞராக வரும் அனுஷ்கா, அவருக்கு உதவியாளராக வரும் சந்தானம். இந்த கூட்டணி முன்பாதியில் காமெடியில் களை கட்டுகிறது. பின்பாதியில் விக்ரமிற்காக போராடும் போது, பாராட்ட வைக்கிறது. அனுஷ்காவிற்கு மிகவும் பொறுத்தமான வேடம். கலக்கியிருக்கிறார்.
நிலாவின் ஸ்கூல் கரெஸ்பாண்டென்டாக வரும் அமலா பால், இறந்து போன தனது அக்காவின் குழந்தைதான் நிலா என்று தெரிய வரும்போது அவர் காட்டுகிற அன்பு நம்மை அசர வைக்கிறது. அவ்வளவு இயல்பு, மைனாவிற்கு அடுத்த படத்தில் மிகவும் தேர்ந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.
deiva-thirumagan1
theivathirumakan

நாசர் தன் பங்கிற்கு தனது வேலையை கன கச்சிதமாகவும் கம்பீரமாகவும் செய்து முடித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் இசை இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது எனலாம். உணர்ச்சி மயமான காட்சிகள் வரும் போது தனது பின்னணி இசையால் அதற்கு உயிரூட்டி இருக்கிறார். பாடல்களும் மெல்லிசை கலந்த தாலாட்டாக காதில் ரீங்காரமிடுகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் இவரது பின்னணி இசை, நம்மையறியாமல் நம்மை உருக வைத்துவிடுகிறது.
விக்ரமின் குரலில் ‘கதை சொல்ல போறேன்.. ஒரு கதை சொல்லப் போறேன்” பாடல் நிச்சயம் குழந்தைகளுக்கு பிடித்த பாடலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு ஊட்டியை அடுத்துள்ள அவலாஞ்சி கிராமத்தை, தனது கேமரா கண்களால் சிறைபிடித்து நம் கண்ணில் உலவ விட்டிருக்கிறது. ‘விழிகளில் ஒரு வானவில்’ பாடலில் ஒளிப்பதிவாளரின் கோணங்களை, தனது படத்தொகுப்பு திறமையில் செதுக்கியிருக்கிறார் ஆண்டனி.
‘மதராசபட்டினம்’ என்ற படத்தைக் கொடுத்த விஜய், ஒரு தந்தை-மகளின் பாசப் போரட்டத்தை மிகவும் உணர்ச்சிமயமாகவும், தனது அட்டகாசமான திரைக்கதையாலும் தெய்வத்திருமகளை நம்முன் உலவ விட்டிருக்கிறார்.
அவரது உழைப்பு, அனைவரின் நடிப்பு அனைத்தும் குடும்பமாய் வாழ்கின்ற அனைத்து தரப்பு ரசிகர்களின் அரவணைப்பையும் பெறும்.
இரண்டே முக்கால் மணி நேரம் ஓடுகின்ற இந்த நீளமான படத்தை, தனது உணர்ச்சிகரமான திரைக்கதையால் அதை மறக்கடிக்கச் செய்திருக்கிறார் இயக்குனர் விஜய். ரத்தமும், கலவரமும், சதையும், கவர்ச்சியையும் நம்பி உலா வரும் படங்களிடையே, நம்முள் உறைந்து கிடக்கும் பாச உணர்வுகளை, 'தெய்வத்திருமகள்' மூலமாய் உணர்ச்சிபூர்வமாக சொல்லியிருக்கும் விஜய்க்கு ஆயிரம் முறை சபாஷ் போடலாம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நிறைவான குடும்பப் படத்தை பார்த்த திருப்தியை இந்த ‘தெய்வத்திருமகள்’ நமக்குத் தருகிறாள்.
« PREV
NEXT »

4 comments

Shiva sky said...

அமாம்....படம் மிகவும் அழகு....அருமை..

Shiva sky said...

மிக சிறந்த விமர்சனம்

admin said...
This comment has been removed by the author.
admin said...

parththuviddeerkala nanpare???????