Latest News

July 24, 2011

செயல் தலைவர் பதவி: ஸ்டாலின், அழகிரி போட்டா போட்டி-பதவி விலகுவதாக கருணாநிதி எச்சரிக்கை
by admin - 0

மு.க.ஸ்டாலினை திமுக செயல் தலைவராக்கினால், கடும் விளைவுகள் ஏற்படும் என மத்திய அமைச்சர் அழகிரி எச்சரித்ததையடுத்து தானே பதவி விலகத் தயாராக இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி விரக்தியுடன் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

கோவை சிங்காநல்லூரில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில், பொருளாளர் ஸ்டாலினுக்கு கட்சியில் உயர் பதவி தரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டு இருந்தை தெரிந்து கொண்ட மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அதை முளையிலேயே கிள்ளியெறிய எண்ணியதாகத் தெரிகிறது.

கருணாநிதி தங்கியிருந்த இடத்துக்கு நேற்றுக் காலை அழகிரி சென்று, ஸ்டாலினுக்கு கட்சியில் உயர்ந்த பதவி கொடுத்தால் அதன் விளைவு பொதுக் குழுவில் எதிரொலிக்கும் என்று கூறியதாகத் தெரிகிறது.

இந் நிலையில் மாலையில் செயற்குழுக் கூடியதும் ஸ்டாலினின் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் பேசியபோது "ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி கொடுக்கப்பட வேண்டும். அவர் தான் மாநிலம் முழுவதும் சென்று கட்சிப் பணியாற்றுகிறார் என்று வாதிட்டுள்ளனர்.

இதையடுத்து எழுந்த அழகிரியின் ஆதரவாளர்கள், அந்தப் பதவியை 'அஞ்சா நெஞ்சன்' அழகிரிக்கே தர வேண்டும் என குரல் எழுப்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து காரசாரமான வாக்குவாதம் நடந்துள்ளது. தேனியைச் சேர்ந்த அழகிரியின் ஆதரவாளர் ஒருவர் எழுந்து, ஸ்டாலின் என்ன புதிதாக செய்து விட்டார்?, அவர் வகிக்கும் பதவிக்கு என்ன வேலையைச் செய்ய வேண்டுமோ அதைத் தானே செய்துள்ளார் என்று கேட்டதை தொடர்ந்து வாக்குவாதம் முற்றியுள்ளது.

அப்போது இடைமறித்த மத்திய இணையமைச்சர் பழனிமாணிக்கம், நாம் கட்சியின் வளர்ச்சி பற்றி பேச வந்த இடத்தில், அடுத்த செயல் தலைவர் யார் என்று பேச வேண்டிய அவசியம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதே போல மூத்த தலைவரான துரைமுருகன் எழுந்து, கருணாநிதி தான் இப்போது நமது தலைவர். இதனால் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து பேசவே வேண்டியதில்லை என்றார்.

அப்போது கருணாநிதி, பொன்முடியைப் பார்த்து, நான் இந்த பதவியை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறுகிறீர்களா? என்று கோபமாக கேட்டுள்ளார்.

இதையடுத்து பேராசிரியர் அன்பழகன் எழுந்து, கலைஞர் தான் இந்த கட்சியின் தலைவர். அவர் நம்முடன் இருக்கும்வரை இந்த பதவியை பிடிக்கும் எண்ணம் யாருக்கும் வரக்கூடாது. கலைஞர் தலைவராக இருக்கும்போது எங்களால் உங்களை (ஸ்டாலினை) தலைவராக ஏற்க முடியாது என்றார் திட்டவட்டமாக. மேலும் கலைஞர் பதவி விலகுவதாக இருந்தால் நானும் எனது பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகுகிறேன் என்று கூறியதாக தகவல்கள் வருகின்றன.

இதைத் தொடர்ந்து பேசிய கருணாநிதி, தேர்தல் தோல்விக்கான நாம் யார் மீதும் பழி போடக் கூடாது. தோல்விக்கான பொறுப்பை நாம் எல்லோரும் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். இங்கே இருக்கும் யாராவது நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று விரும்பினால் கட்சிக்காக அதைச் செய்ய நான் தயார். இங்கே நாடகம் அரங்கேற்றப்பட்டதை நான் உணர்ந்துள்ளேன். எனக்கும் ஸ்டாலினுக்கும் மோதலை உண்டாக்க நீங்கள் முயற்சிக்கிறீர்கள். தேவைப்பட்டால் நான் ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன் என்று கூறிய அவர் அவசர, அவசரமாக வெளியேறி விட்டதாக தெரிகிறது.

தலைவர் பதவியைப் பிடிக்க ஸ்டாலின் மிகவும் அவசரப்படுவதாக கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. அதே நேரத்தில் ஸ்டாலினை செயல் தலைவராக்கினால், அதை ஏற்க மாட்டோம் என கருணாநிதியிடம் அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகவும் தெரிகிறது.
« PREV
NEXT »

No comments