2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில், மத்திய புலனாய்வு அமைப்பான சி பி ஐ, அவர் ஏர் செல் நிறுவனத்தின் பங்குகளை மலேஷிய நிறுவனம் ஒன்றுக்கு விற்க நிர்பந்தித்தார் என்று உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை அறிக்கையை சமர்பித்த நிலையில், தயாநிதி மாறன் பதவி விலகியுள்ளார்.
வியாழக்கிழமை காலை புதுடில்லியில் இடம்பெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தை அவர் அளித்தார் என்று புதுடில்லி தகவல்கள் கூறுகின்றன.
திமுக தலைமையுடன் காங்கிரஸ் மேலிடம் தொடர்பு கொண்டு பேசியதை அடுத்து, தயாநிதி மாறனின் பதவி விலகலுக்கு திமுக தலைவர் இசைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திய தொலைத்தொடர்புத் துறையில் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பில் பெருமளவில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில், திமுகவைச் சேர்ந்த ஆ ராசா தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
ஆ ராசாவுக்கு முன்னர் தயாநிதி மாறனும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேஷிய நிறுவனமான மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்க, ஏர்செல் நிறுவனத்தின் தலைவருக்கு தயாநிதி மாறன் அழுத்தம் கொடுத்ததாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட மத்திய புலனாய்வு அமைப்பு, அவர் அப்படியான அழுத்தங்களை கொடுத்தார் என்று குற்றஞ்சாட்டியுள்ளதை அடுத்தே மாறன் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
news bbc
No comments
Post a Comment