Latest News

May 26, 2011

தாயின் உருவில் ஒரு தெய்வம்!
by admin - 0

இருபது ஆண்டுகளுக்கும் மேல், நடமாட முடியாத குழந்தைகளை, பாசம் குறையாமல் வளர்த்து வரும் தாய் சந்திரா: நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடி கிராமம் தான் என் சொந்த ஊர். கணவர், கொத்தனார் வேலை செய்கிறார். திருமணமான ஒரு ஆண்டிற்குப் பின், முதலில், ஒரு பெண் பிறந்தாள். எல்லா குழந்தைகளையும் போல, நடமாடிக் கொண்டிருந்தாள்.ஆனால், நாளடைவில், கை, கால்களில் அசைவு இல்லாமல் இருந்ததால், டாக்டரிடம் காட்டினோம். அப்பதான், பிறவியிலேயே அவளுக்கு உடல் வளர்ச்சி குறைபாடு உள்ளது தெரிந்தது. மனதை தேத்திக் கொண்டு வளர்க்க ஆரம்பித்தோம்.அடுத்தடுத்து பிறந்த பெண், மற்றும் ஆண் என, இரு குழந்தைகளும், இதே நிலையில் தான் பிறந்தன. மனம் வெறுத்த கணவர், குடிக்க ஆரம்பித்துவிட்டார். இதனால், வீட்டில் தினமும் பிரச்னை. எட்டு ஆண்டுகளுக்குப் பின், நான்காவதாக பெண் குழந்தை பிறந்தாள்; எந்த குறையும் இல்லாமல் இருக்கிறாள். வள்ளியூரில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறாள். என் நிலையைப் பார்த்து, அவளின் படிப்பு செலவை பள்ளி ஏற் றுக் கொண்டுள்ளது.அதன்பின், நல்லபடியாக குழந்தை பிறக்கும் என நம்பி, ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தேன்.அவனுக்கும் அந்த குறை இருந்தது. இருப்பினும், அவன் பள்ளிக்கு செல்கிறான். 20 ஆண்டுகளுக்கும் மேலாக, மற்ற மூன்று குழந்தைகளுக்கும், என் வீட்டில் உள்ள சிறிய அறை தான் உலகம். பசித்தால், அழ வேண்டும் என்று கூட தெரியாது. நான் தான், நேரம் தவறாமல், படுக்கையிலேயே உணவு ஊட்டி விடுகிறேன்.ஜீன்களின் கோளாறு, சொந்தத்தில் திருமணம் முடித்தது போன்றவை தான் காரணம் என்கின்றனர் டாக்டர்கள். மேற்கொண்டு சிகிச்சை அளிக்கவும், வசதியில்லை.






« PREV
NEXT »

No comments