Latest News

May 11, 2011

விவசாயிகளை சந்திக்க சைக்கிளில் சென்ற ராகுல் காந்தி
by admin - 0


டெல்லி அருகே நொய்டாவை ஒட்டியுள்ள கிராம பகுதியில் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது ஏற்பட்ட கலவரத்தில் 2 பொலிஸ்காரர்களும், 2 விவசாயிகளும் பலியானார்கள். ஏராளமான விவசாயிகள் காயம் அடைந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி நொய்டா அருகே கலவரம் நடந்த கிராமங்களுக்கு மோட்டார் சைக்கிளில் திடீரென சென்றார்.
உள்ளூர் பொலிசாருக்கு தெரிவிக்காமலேயே அவர் சென்றார். பட்டாபாரசல் கிராமத்துக்கு அதிகாலை 4 மணிக்கு ராகுல்காந்தி சென்றார். அந்தப் பகுதியில் வசிக்கும் விவசாயிகளிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார்.
ராகுல் காந்தியை பார்த்ததும் விவசாயிகள் ஆச்சரியம் அடைந்தனர். சிலர் வந்திருப்பது ராகுல்காந்தி என்று தெரியாமல் திகைத்துப் போய் நின்றார்கள். அப்போது விவசாயிகள் தாங்கள் தாக்கப்பட்ட விவரத்தை தெரிவித்தனர். ஒரு வயதான பெண், தேடுதல் வேட்டை என்ற பெயரில் பொலிசாரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக தெரிவித்தார்.
வயதான விவசாயி ஒருவர் பொலிசார் தாக்கியதில் தனது உடலில் ஏற்பட்ட காயங்களை காட்டினார். கலவரப் பகுதியில் பாதுகாப்புக்கு பொலிசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்திருப்பது ராகுல்காந்தி என்று தெரிந்ததும் திகைத்துப் போய் நின்றனர்.
மோட்டார் சைக்கிளின் பின்னால் ராகுல்காந்தி உட்கார்ந்து இருந்தார். முன்னாள் வேறொருவர் அமர்ந்து ஓட்டி வந்தார். அவர் யார் என்று பொலிசாரால் அடையாளம் காண முடியவில்லை. அவர் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கலாம் என்று தெரிகிறது. ராகுல்காந்தி விவசாயிகளை சந்தித்து தனது முழு ஆதரவை தெரிவித்தார். கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு போதுமான நஷ்டஈடு வாங்கித்தருவதாக கூறினார்.
கலவரத்துக்கு மாநில அரசே காரணம் என்று குற்றம் சாட்டினார். விவசாயிகள் வன்முறையை கைவிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ராகுல்காந்தி இதுபோல் உள்ளூர் பொலிசாருக்கு தகவல் சொல்லாமல் திடீர் என்று செல்வது வழக்கம்.
அப்போதெல்லாம் அவர் காரிலோ, விமானத்திலோ தான் செல்வார். ஆனால் இப்போது மோட்டார் சைக்கிளில் சென்று இருப்பது பொலிஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
« PREV
NEXT »

No comments