ரைசோபியம் - குடும்பத்தைச் சார்ந்த பயிர்களுடன் கூட்டு வாழ்க்கை நடத்தி பயிர்களின் வேர்களில் வேர்முடிச்சுகளை உண்டாக்குகின்றன. இதன்மூலம் பயிர்களும் பாக்டீரியாக்களும் ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன. ரைசோபியம் பயிர்களுக்கு தேவையான தழைச்சத்தை காற்றிலிருந்து கிரகித்துக் கொடுத்து பயிர்களில் இருக்கும் சத்துக்களை எடுத்துக்கொண்டு வாழ்கிறது. வேர்முடிச்சுக்களை உண்டாக்கும் ரைசோபியம் அனைத்தும் ஒரே வகையைச் சார்ந்தவை அல்ல. ஒரு குறிப்பிட்ட சில பயறு வகைச் செடிகளில்தான் வேர் முடிச்சை உண்டுபண்ணக்கூடியது. உதாரணம் பச்சைப்பயறு, உளுந்து செடிகளில் வேர்முடிச்சுகளை உண்டாக்கும் ரைசோபியம் இனம் அதே தாவர குடும்பத்தைச் சேர்ந்த நிலக்கடலை செடிகளில் கூட்டு சேர்ந்திருப்பதில்லை. அத்தகைய குறிப்பறிதல் திறனின் அடிப்படையில் ரைசோபியத்தில் 7 வகைகள் உள்ளன. எந்தெந்த ரைசோபியம் இனம் வேர்முடிச்சு உண்டுபண்ணக்கூடியதோ அவற்றை உபயோகப்படுத்த வேண்டும்.
அசோஸ்பைரில்லம்: அனைத்து வேளாண் பயிர்களுக்கும் இடலாம் என சிபாரிசு செய்யப் பட்டிருந்தாலும் தானிய பயிர்களில் அசோஸ் பைரில்லத்தின் செயல்பாடு மிக நன்றாக உள்ளது. அசோஸ் பைரில்லம் தழைச்சத்தை கிரகித்து பயிர்களுக்கு கொடுப்பதுடன் பயிர் வளர்ச்சிக்கு தேவையான வளர்ச்சி ஊக்கிகளான இண்டோல் அசிடிக் அமிலம் மற்றும் ஜிப்ரலிக் அமிலம் ஆகியவற்றை உற்பத்தி செய்து பயிர்களின் வேர்களும், தண்டுகளும், இலைகளும் வேகமாக வளர உதவிபுரிகிறது. அசோஸ்பைரில்லம் மண்ணில் அங்கக பொருட்கள் அதிக அளவு இல்லாதபோதிலும் தழைச்சத்தை நிலைப்படுத்தி நன்கு செயல்பட வாய்ப்பு உள்ளது. பாஸ்போ பாக்டீரியா - இடுவதால் பயிரின் வேர்கள் செழித்து வளருகின்றன. திசுக்கள் வளம்பெறுகின்றன. பாறை பாஸ்பேட்டில் உள்ள மணிச்சத்தினை பயிர்கள் எளிதில் ஈர்க்கும் வகையில் மாற்றித்திரும் திறன் கொண்டது. ரசாயன உரத்தேவையில் மணிச்சத்தின் அளவில் 25 சதம் குறைத்துக்கொள்ளலாம்.
வேர் உட்பூசணங்கள்: வி.ஏ.எம். மண்ணிலுள்ள மணிச்சத்தினை பயிர்களுக்கு எடுத்துக்கொடுப்பதுடன் கந்தகம், துத்தநாகம் மற்றும் சுண்ணாம்புசத்து ஆகியவற்றை மண்ணிலிருந்து பயிர்களுக்கு எடுத்துக் கொடுக்கிறது. பூசண வேர்த்தூவிகள் மண்ணில் வெகு தூரத்திற்கு சுலபமாக பரவிவிடுகிறது. ஆகவே வேர்கள் பரவமுடியாத தூரத்தில் உள்ள மணிச்சத்தை சல்லடை போட்டு தேடுவதுபோல் தேடிப்பிடித்து உறிஞ்சி, பயிர்களுக்கு கொடுக்கிறது. வேர் உட்பூசணம் மண்ணிலிருக்கும் மணிச்சத்தை கரைக்க ஏதுவான அமிலம் எதையும் உற்பத்தி செய்வதில்லை. ஆகவே அதனுடைய செயல் சுலபமாக கிடைக்கக்கூடிய மணிச்சத்தை சல்லடை போட்டு தேடுவதுபோல் தேடிப்பிடித்து உறிஞ்சி பயிர்களுக்கு கொடுக்கிறது. வேர் உட்பூசணங்கள் வேரைத் தாக்கும் பூஞ்சாண நோய்களிலிருந்து பயிர்களைப் பாதுகாக்கிறது. நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்த 2 முறைகள் உள்ளன. 1. விதைநேர்த்தி முறை, 2. நாற்றுக்களை நனைத்தல்.
1. விதைநேர்த்தி: ஒரு பாக்கெட் 200 கிராம் உரத்தை 200 மி.லி. ஆறிய கஞ்சியுடன் கலந்து ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் நன்கு கிளறிவிட்டு, 30 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி, பின்னர் விதைக்கலாம். பயிருக்கு ஏற்ப அசோஸ்பைரில்லம் (அ) ரைசோபியம் நுண்ணுயிர்களை பாஸ்போபாக்டீரியாவுடன் கலந்தே இடுவது நல்லது.
2. நாற்றுக்களை நனைத்தல்: 2 பாக்கெட் நுண்ணுயிர் உரத்தை15 லிட்டர் நீரில் கலந்து நாற்றின் வேர்ப்பகுதியை கலவையில் நன்றாக நனைத்து நடவு செய்யலாம். நாற்றுக்களை நனைக்கும்போதும் தழைச்சத்துக்கான உயிர் உரமும் மணிச்சத்துக்கான உயிர் உரமும் கலந்தே உபயோகிக்கலாம்
No comments
Post a Comment