Latest News

July 19, 2020

20 வருடங்களுக்கு ராஜபக்சாக்களின் ஆட்சி -அசைக்க முடியாத நம்பிக்கையில் மகிந்த தரப்பு
by Editor - 0

"நாட்டில் இருபது வருடங்களுக்கு மேல் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சி தொடரப்போகின்றது. எவரும் இந்த ஆட்சியைக் கவிழ்க்கவே முடியாது. ராஜபக்சாக்களின் தலைமையில் புதிய சரித்திரத்தை நாம் படைப்போம்."

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.

பத்தனைப் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"வாக்கு என்பது உங்கள் உரிமை. அந்த வாக்குத்தான் ஆட்சியைத் தீர்மானிக்கப் போகின்றது. மக்களின் இறைமையே நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும்.

எனவே, அந்த உரிமையை எவரும் களவாடமுடியாது. முன்னர் கள்ள வாக்குப் போட்டவர்கள் இருந்தனர். சாராயத்துக்கும், சாப்பாட்டுக்கும் வாக்குகள் அளித்தவர்களும் இருந்தனர். அந்தக் காலம் தற்போது மலையேறிவிட்டது.

கள்வர்கள் மற்றும் கொள்ளையர்களும் நாடாளுமன்றம் தெரிவானதால் நல்லவர்களையும் மக்கள் திட்டினர். 225 பேருக்கும் இடிவிழ வேண்டும் எனவும் விமர்சித்தனர்.

சிலருக்கு அமைச்சுப் பதவி இல்லாவிட்டால் காலைக்கடனைகூட நிறைவேற்ற மனம் வராது. அவர்கள்தான் அந்தப் பக்கம், இந்தப் பக்கம் எனத் தாவுகின்றனர். நாளை எந்தப் பக்கம் தாவுவார்கள் எனவும் தெரியாது. எமது பக்கத்திலும் சிலர் இருக்கின்றனர். உங்கள் புள்ளடி மூலம் அவர்களுக்குச் சிறந்த பதிலடியைக் கொடுக்கவேண்டும்.

இதனால்தான் மஹிந்த ராஜபக்சவை விட்டுச் சென்றவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது என பிரசன்ன ரணதுங்ககூடக் கூறுகின்றார். சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு முடிவுகட்ட வேண்டும்.

தற்போது பருவகால குருவிகள் வருகின்றன. அழகாக இருக்கின்றன. ஆனால், எதிர்வரும் 5 ஆம் திகதி பறந்துவிடும். ஆனால், இந்த வீட்டுக்குருவி உங்களுடன்தான் இருக்கும். வாக்குகளை வாங்கிக்கொண்டு தவளைகள்போல் தாவவில்லை. பதவிகள் பறிக்கப்பட்டபோதுகூட மஹிந்தவுடனேயே இருந்தேன்" - என்றார்.
« PREV
NEXT »

No comments