Latest News

November 11, 2017

தமிழீழத்தை உருவாக்க தமிழர்கள் முயற்சி - மைத்திரி
by admin - 0

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் இன்றும் உலகம் முழுவதிலும் நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருவதாக ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


நாரேஹின்பிட்டி ஶ்ரீலங்கா இராணுவ மருத்துவமனையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

சர்வதேச ரீதியாக ஒழுங்கமைந்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், தமிழீழத்தை உருவாக்குவதற்கான சாத்தியமற்ற ஒரு முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த அசாத்திய முயற்சியை சாத்தியமற்றதாக மாற்றுவது அவசியம்.

தற்போதைய அரசாங்கம் இராணுவத்தை தவறாக மதிப்பிட்டுள்ளதாக பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஊடகங்கள் ஊடாகவும், அரசியல் மேடைகளிலும் இலங்கை இராணுவம் வேட்டையாடப்படுவதாக பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

தற்போதைய அரசாங்கம் நாட்டை காட்டிக்கொடுத்துள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

அரசியல்வாதிகளும், சில ஊடகவியலாளர்களும், ஓய்வு பெற்ற இராணுவத்தினரும் இப்படியான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய அமெரிக்காவுடன் மேற்கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம், இலங்கை இராணுவத்தை சர்வதேசத்திற்கு காட்டிக்கொடுத்துள்ளதாக முன்னாள் இராணுவ உறுப்பினர் ஒருவர் மேடைகளில் குற்றஞ் சுமத்தியிருந்தார்.

இலங்கை இராணுவத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அதனை இலங்கை அரசாங்கம் உள்ளக விசாரணைகள் மூலம் தீர்வை பெற்றுக்கொடுக்கவே குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரச்சனை தொடர்பில், அரசாங்கம் புத்திசாதுரியமான யுக்திகளை கையாள்வது அத்தியாவசியமானது என மேலும் தெரிவித்தார்.

« PREV
NEXT »

No comments