Latest News

August 14, 2017

செஞ்சோலை படுகொலையின் 11 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று
by admin - 0

செஞ்சோலை படுகொலையின் 11 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று




முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில், ஸ்ரீலங்கா விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டதன் 11 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுட்டிக்கப்படுகின்றது.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி காலை 7 மணியளவில் ஸ்ரீலங்கா விமானப்படை விமானங்கள், செஞ்சோலை சிறுமிகள் பராமரிப்பு நிலையத்தின் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டன.

இதன்போது 62 பேர் கொல்லப்பட்டதுடன் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் வெளியிடப்பட்டிருந்தது.


ஸ்ரீலங்கா விமானப்படையின் நான்கு அதிவேக யுத்த விமானங்களும் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகள் மாணவிகளின் உயிர்களைப் பறித்தன.

இவ்வாறு விமானத் தாக்குதலுக்கு இலக்கானோரது உடல்கள் சிதறியபடி காணப்பட்டதுடன், காயமடைந்தோர் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தர்மபுரம் மற்றும் கிளிநொச்சி பொது வைத்தியசாலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட நடுநிலை அமைப்புக்களான ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமும், ஸ்ரீலங்கா போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும், படுகொலை செய்யப்பட்ட அனைவரும் மாணவர்களே என்பதை உறுதிசெய்துள்ளன.

கொல்லப்பட்ட மாணவிகள், க.பொ.த உ/த மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி நெறிக்காககிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும்துணுக்காய் கல்வி வலய பாடசாலைகளில் இருந்து தலைமைத்துவ பயிற்சிநெறிக்காக தெரிவுசெய்யப்பட்டு செஞ்சோலையில் கூடியிருந்த 400 மாணவிகளில் ஒரு பகுதியினரே ஆவர்.

இத் தலைமைத்துவ பயிற்சிநெறி கிளிநொச்சி கல்வி வலயத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு "Women's Rehabilitation and Development (CWRD)" நிதி உதவியுடன் செயற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments