Latest News

June 16, 2017

மக்கள் போராட்டத்தின் எதிரொலி! பிளவுபடுகின்றது தமிழரசுக் கட்சி!
by admin - 0


வடக்கு மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்தில் தமிழரசுக்கட்சி பிளவுபடத்தொடங்கியுள்ளது.வடக்கு முதல்வருடனான சமரச பேச்சுக்களில் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகிய இருவரும் குதித்துள்ள நிலையினில் முதல்வர் தற்போது கறாரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். தனக்கு ஆதரவாக அதிகரித்துள்ள மக்கள் போராட்டங்களையடுத்தே முதல்வரின் நிலைப்பாடு இறுக்கமடைந்துள்ளது.

 


அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் ஆகிய இருவரும் தம்மீதான விசாரணைகளை குழப்பமாட்டார்களென்ற ஒப்புதல் கடிதம் ஒப்படைக்கவேண்டும்,தமிழரசுக்கட்சியும் விசாரணைகளை தடுக்க கூடாதென்ற நிபந்தனைகளை தளர்த்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகிய இருவரும் முன்வைத்த கோரிக்கைகளினையே முதலமைச்சர் நிராகரித்துள்ளார்.

ஊழல் முறைகேடுகள் விவகாரத்தில் தொடர்பற்றவர்கள் எனில் எதற்காக அமைச்சர்களும் தமிழரசுக் கட்சியும் விசாரணைக்கு அச்சங்கொள்கின்றனரென முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே பதவியிலிருந்து ஒதுங்கியிருக்க அறிவுறுத்தப்பட்ட அமைச்சர்கள் இருவரையும் பதவியில் இணைக்க வேண்டுகோள் கடிதம், அமைச்சர்கள் விசாரணையில் தமிழரசுக்கட்சி தலையிடாதென்ற உத்தரவாத கடிதம் என்பன தேவையென முதல்வர் உறுதியாக இருப்பதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் வரை முதலமைச்சர் வாசஸ்தலம் ஆயுதக்குழுக்களது மையமென பேசி வந்த சிவஞானம் சிறீதரன் இன்று அதே இடத்திற்கு தேடிவந்தமை மக்கள் சக்தியின் வெளிப்பாடென சொல்லப்படுகின்றது.

இதேவேளை, சிறீதரனின் ஆதரவு புலத்திலுள்ள தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு மாகாணசபை உறுப்பினர்களும் அமைச்சராக இருந்த குருகுலராஜாவும் முதல்வர் அணியில் இணைய முன்வந்துள்ளனர்.

முதலமைச்சரை சந்தித்து தமது மன்னிப்பினை கோரவும் தமது ஆதரவை தெரிவிக்கவும் அவர்கள் தூதனுப்பியுள்ளனர். அவர்களிற்காக தனது அலுவலகம் திறந்தேயுள்ளதாக பதிலனுப்பியுள்ள முதலமைச்சர் மன்னிப்புக்கோருவது தேவையில்லையெனவும் நேரடியாகவே அவர்கள் முன்னர் போன்று வருகை தரலாமெனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர்கள் தமிழரசுக்கட்சி முடிவை ஏற்றுக்கொள்ளாமல் சுயாதீனமாக இயங்க முடிவெடுத்தமையினையடுத்தே சிறீதரன் களமிறங்கியதாக சொல்லப்படுகின்றது.

இதனிடையே முதலமைச்சருக்கு ஆதரவாக கிளிநொச்சியில் மூடப்பட்ட வர்த்தக நிலையங்கள் மற்றும் பாடசாலைகளை திறந்துவிட சிறீதரனது உதவியாளர்கள் பாடுபட்டமை கண்டனங்களை தோற்றுவித்துள்ளது.

-pathivu media 

« PREV
NEXT »

No comments