Latest News

January 17, 2017

அலங்காநல்லூர் போராட்ட களத்தில் சீமான், அமீர் பங்கேற்பு.. போராட்டத்தில் புது எழுச்சி
by admin - 0

மதுரை: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆதரவாக போராட்டம் நடத்துவோருக்கு ஆதரவு தெரிவிக்க நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், திரைப்பட இயக்குநர் அமீரும் வருகை தந்தனர். அலங்காநல்லூரில் நேற்று விடியவிடிய போராட்டம் நடத்திய 240 பேரை, போலீசார் கைது செய்தனர். இதனால் தமிழகம் முழுக்க போராட்டம் பரவியது. கல்லூரி மாணவ, மாணவிகள் வீதிக்கு இறங்கி வந்து போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சீமான் மற்றும் அமீர் ஆகியோர் இன்று, அலங்காநல்லூரில் போராட்டம் நடைபெறும் இடத்திற்கே நேரடியாக வந்தனர். வேன் மீது ஏறி நின்றபடி, போராட்டக்காரர்கள் மத்தியில் ஆதரவு தெரிவித்து பேசினர். இதனால் போராட்டக்காரர்கள் உற்சாகமடைந்தனர். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி முழக்கங்களை எழுப்பினர்.

அமீர் பேச்சு 

இயக்குநர், அமீர் பேசுகையில், இது அலங்காநல்லூருக்கு மட்டுமான போராட்டம் இல்லை. தமிழக மக்கள் ஆங்காங்கு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். உங்களுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். பக்கபலமாக இருப்போம் என்றார். 

சர்வாதிகாரம் 

சீமான் பேசுகையில், மக்கள் போராட்டத்தை ஒடுக்குவது சர்வாதிகாரம். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய அரசு கடமையிலிருந்து விலகி நிற்கிறது. மாணவர்கள் போராடுகிறார்கள்.. மக்கள் தேர்ந்தெடுத்த மந்திரிகள் என்ன செய்கிறார்கள்? தொடர்ச்சியாக 3 ஆண்டுகளமாக நாம் நம்மி ஏமாந்த பிறகுதான் இளைஞர்கள் தெருவிற்கு வந்துள்ளனர். இது மாபெரும் புரட்சி. ஜல்லிக்கட்டு தடை என்பதை தனது பண்பாட்டு மீது தொடுக்கப்பட்ட போர் என பார்க்கிறார்கள். 

சட்டத்தில் இடமுள்ளது 8 கோடி மக்கள் உணர்வுகளுக்கும், நாட்டு நீதிக்கும் இவ்வளவு தூரம் இடைவெளி ஏன் வந்தது? பீட்டா என்ற அமைப்புக்கு அருகேயுள்ள நீதி, தேசிய இன மக்களுக்கு தூரத்தில் போனது ஏன்? மக்களுக்காக நாடாளுமன்றத்தை கூட்டி காளையை காட்சி விலங்கு பட்டியலில் இருந்து நீக்க மத்திய அரசால் முடியும். 

மாநில அரசு அதற்கு நெருக்கடியை தரலாம். சட்டரீதியாக அதற்கு வாய்ப்பு இருக்கிறது, அந்த உரிமையை கேட்கிறோம். இவ்வாறு சீமான் பேசினார். கருத்து மோதல் இதனிடையே போராட்ட களத்தில் அரசியல் கலக்க கூடாது என்பதால் சீமான் வெளியேற வேண்டும் என்று சிலர் கோஷமிட்டனர். அவர்களை கோஷமிட கூடாது என சீமான் தரப்பு ஆதரவாளர்கள் தடுத்தனர். இதனால் இரு தரப்பினரிடையே கை கலப்பு ஏற்படும் சூழல் உருவானது. ஆனால் அமைதியாக, அறவழியில் போராட்டம் நடத்துமாறு ஆதரவாளர்களிடம் சீமான் கோரிக்கைவிடுத்து கிளம்பி சென்றார்.  

« PREV
NEXT »

No comments