Latest News

January 17, 2017

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை-அண்ணன் மகள் தீபா
by admin - 0

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை, இருந்திருந்தால் வழக்கு போட்டிருப்பேன் என்று அவரது அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.

சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதியன்று காலமானார். அதனையடுத்து, தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். மேலும், அதிமுகவின் பொதுச்செயலாளராக, ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பொறுப்பேற்றுள்ளார்.

சசிகலாவின் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் கட்சியை விட்டே விலகி விட்டனர். அதேபோல், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபாவுக்கு ஆதரவாகவும் அதிமுகவினர் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.

தன்னை சந்திக்க வரும் தொண்டர்களிடம் எம்ஜிஆர் பிறந்தநாளன்று முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தீபா தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், இன்று முதல் புதிய பயணத்தைத் தொடங்கவுள்ளேன். ஜெயலலிதாவின் வழி நடந்து மக்கள் பணியை மேற்கொள்ள உள்ளேன். தமிழகத்தை ஆசியாவிலேயே சிறந்த மாநிலமாக மாற்ற நட்பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே நான் அரசியலில் இறங்கி விட்டேன் என்று கூறினார்.

ஜெயலலிதா பிறந்தநாளன்று அரசியலில் ஈடுபடுவது குறித்து அறிவிப்பேன். எனது அரசியல் திட்டங்களை அறிவிக்க ஜெயலலிதாவின் பிறந்தநாளை தவிர வேறு பொருத்தமான நாள் இல்லை. இளைஞர்கள், தொண்டர்கள் கருத்தை அறிந்து அரசியல் பயணம் குறித்து அறிவிப்பேன் என்று கூறினார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த தீபா, ஜெயலலிதாவின் மரணத்தில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று கூறினார். தனது சகோதரர் தீபக், அப்பல்லோ மருத்துவமனையில் அத்தையுடன் இருந்திருக்கிறார். எனவே அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்தோ, அவரது மரணத்திலோ தனக்கு எந்த சந்தேகமும் கிடையாது என்றும் தீபா தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலர் வழக்கு தொடர்ந்து வரும் நிலையில் அவரது ரத்த உறவுகள் வழக்கு தொடராதது ஏன் என்று ஹைகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் கிடையாது அவ்வாறு இருந்திருந்தால் வழக்கு தொடர்ந்து இருப்பேன் என்று கூறியுள்ளார் தீபா.

« PREV
NEXT »

No comments