Latest News

November 23, 2016

மாவீரர் நாளிற்கு எங்கே சென்றால் மன ஆறுதலும் விடுதலையின்பால் நம்பிக்கையும் தோன்றும்
by admin - 0

 

உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பிற்கு வந்திருந்த ஒரு மாவீரர் குடும்பத்தின் மனநிறைவான வார்த்தைகள்.

20.11.2016
நெஞ்சு நெகிழ வைத்த இன்றைய நாள் ஒரு பொன்னாள்!!!

எமக்கென்றான ஒரு நிலம், எங்கள் விடுதலைக்காக உகுந்த அர்த்தம் மிக்க கண்ணீர், எம் இனத்திற்காக தம் உயிரையும் அர்ப்பணிக்கத் துணிந்தவர்களின் அனுபவம் நிறைந்த வார்த்தைகள்….. அன்பும், ஏக்கமும், இழப்பின் பரிதவிப்பும், இன்பமும் துன்பமும் கலந்த ஆனந்தக் கண்ணீருமாக…… ஆன்மாக்கள் உருகும் அபூர்வ ஒலியை நான் கேட்டேன்.!!

உலகத்தின் எந்த மூலையிலும் இதுவரையில் எமக்குக் கிடைத்திராத கௌரம் மிக்க, எங்களுக்கான சொந்த நிலம் அது! 

சில மாதங்களாக என் காதுகளில் அந்த செய்தி விழுந்த போதும் அங்கு நேரில் சென்று வரும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கவில்லை. பிரித்தானியாவின் பிரசித்தி பெற்ற ஒக்ஸ்போர்ட் நகரில் 108 ஏக்கர்களை உள்ளடக்கிய பச்சைப்பசேல் என்று விரிந்து பரந்த பெருநிலம்!

வீதியிலிருந்து பிரியும் அகன்ற வாயிலில் சிவப்பும் மஞ்சளும் கலந்த கொடி, காற்றில் அசைந்து கொண்டேயிருக்கிறது. அதைக் கண்டவுடனேயே என் கண்கள் கலங்கி விட்டது. நீண்ட உள்வீதியினூடாக வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போதே மகிழ்ச்சி கலந்த பரவசம் என்னை ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டது! 

நீண்ட நாட்கள் நான் கண்ட கனவின் அத்திவாரம் போல் மனம் நெகிழ்ச்சி கொள்ளத் தொடங்கியது!

நாங்கள் விழுந்த பின் எழ முடியாமல் இருக்கிறோமா என்று எனக்குள் இருந்த சந்தேகம்; அங்கு வீசும் பசிய காற்றில் பறந்து கரையத் தொடங்கியது!

ஏராளம் உறவுகள் குவிந்து நின்றிருந்தார்கள். எல்லோர் கண்களிலும் ஒரு கனிவு, பாசம்! இது எங்கள் இடம், இங்கு நானும் நீயும் ஒன்றாகக் கூடியிருந்து ஆசை தீர அழ முடியும், ஆசையாகப் பேசிச் சிரிக்க முடியும், ஒன்றாகக் கூடியிருந்து படிக்க முடியும், அழிந்து போன எங்கள் சரித்திரங்களை மீட்க முடியும், அவற்றை ஆவணப்படுத்த முடியும், எங்கள் கலாச்சாரங்களைப் பேணமுடியும், மனஅமைதியோடு வழிபாடு செய்ய முடியும், எங்களாலான இன்னும் இன்னும்… எல்லாவற்றையும்….. இங்கிருந்து ஆசுவாசமாக, சந்தோஷமாக ஒன்றுகூடிச் செய்யமுடியும.;. மலையையும் பெயர்க்க முடியும், பெருங்கடலையும் கடக்க முடியும். நீ வேறு நான் வேறில்லை- “‘இது நாங்கள்”‘ என்னும் ஆத்ம ஒலி அந்தப் பெருநிலம் முழுவதும் இசைத்துக் கொண்டிருந்தது!

வி.பு- நிமலன் எங்களைக் கண்டதும் ஓடிவந்து ‘அக்கா வாங்கோ’ என்று வாயார வரவேற்றார். அண்ணைக்கு அருகில் நின்ற போது சாய்வதற்கு எப்போதும் ஒரு பெருந்தூண் இருக்கிறது என்ற தெம்பில் எல்லோருமே செழித்த பயிர்களாய் நின்றிருந்தார்கள். இங்கு செய்யும் அயராத பணியில் நிமலன் இளைத்துப் போய் இருந்தார். கூடவே கண்ணீரில் கரைந்து போய் என்னைத் தழுவிக்கொண்ட சங்கீதன், என் தம்பி கப்டன் மயூரனுடன் இருந்து அவன் பற்றி சில வரிகளைக் கூறி என்னை அழவைத்த நேயன், ‘மலையையும் பிரட்டக் கூடிய பலத்தை வார்த்தைகளில் கொட்டி துயர்களைக் களைந்தெறிய வைத்த பாலன் மாஸ்ரர், என் தம்பி கப்டன் மொறிஸ்ஸோடு களப்பணியாற்றிய லெப்.வெங்கடேசனின் அம்மா, அவனின் சகோதரன் கிருபா, ஆனையிறவுப் போரில் தன் காலை இழந்த என் அன்புக் கலைவிழி, கணவனை இழந்த என் அன்புக் காந்தா, கடாபியின் மனைவி…… (இப்படியே நீண்டு கொண்டு போகும்) என்று திரும்பும் பக்கமெல்லாம் மாவீரத்தின் ஒளித்துண்டுகள் சிதறிக்கிடந்தன!

மாவீரர் நாளை எங்களுக்கான நிலத்தில் கொண்டாடாமல் இனியெங்கே நான் போய் கொண்டாடுவேன்!

எல்லோரும் ஒன்று சேர்ந்தால் இந்நிலம் பொன்னிலம் அல்லவா?!

இந்த நாள் என் மனம் நிறைந்த, மனம் கரைந்த பொன்னாள்!!!

– சந்திரா இரவீந்திரன்

« PREV
NEXT »

No comments