Latest News

October 02, 2016

ஈழத் தமிழர் அரசியல் ஏதிலிகளா? குவாதர் துறைமுகமும் ஈழத்தமிழர் தலைவிதியும்-மு.திருநாவுக்கரசு
by admin - 0


காணப்படும் வாய்ப்புக்களை சிக்கெனப் பற்றி பயன்படுத்தவும் எழும் பிரச்சனைகளை தமக்கு சாதகமாக கையாளவும் கூடிய அரசியல் தேர்ச்சி சிங்களத் தலைவர்களிடம் இயல்பாகவே உண்டு.
 
இவ்வாண்டின் இறுதிவாக்கில் இனப்பிரச்சனைக்கு அரசியல் யாப்பு ரீதியான தீர்வு காணப்படுமென்ற கருத்து பரவியிருக்கும் இக்காலச் சூழலில் இலங்கையின் அரசியல் பிரச்சனைகளோடு நெருக்கமாக சம்பந்தப்பட்டிருக்கும் நாடுகளைச் சார்ந்த இன்றைய சர்வதேச சூழலை மதிப்பீடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

இந்து சமுத்திர அரசியல்தான் இலங்கையின் அரசியல் போக்கை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கும், பாத்திரமும் வகிக்கக்கூடிய சர்வதேச அரசியலாகும். தற்போது இந்துசமுத்திர அரசியல் சூறாவளி அரபிக் கடலில் பாகிஸ்தானை அண்டி மையம் கொண்டுள்ளது. 
அதேவேளை இந்து சமுத்திர அரசியலின் பிரதான பங்காளிநாடான அமெரிக்காவின் அடுத்த ஆட்சியாளருக்கான தேர்தல் இவ்வாண்டின் இறுதியில் நடக்க இருப்பதால் அமெரிக்க அரசின் கவனம் பெரிதும் அங்கு குவிந்துள்ளது. 

அத்துடன் இலங்கை அரசியலுடன் பிரிக்க முடியாது பிணைக்கப்பட்டுள்ள இந்தியாவின் கவனம் குவாதர் துறைமுகத்துக்கு ஊடாக இந்து சமுத்திரத்தில் தலையெடுக்கும் சீனா சம்பந்தமானதாகவும், காஷ்மீர் பிரச்சனை சம்பந்தமானதாகவும் பாகிஸ்தானுடன் தொடர்புற்று காணப்படுகிறது. 

இலங்கைப் பிரச்சனையில் அதுவும்; இனப்பிரச்சனைக்கான தீர்வோடு நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு அரசுகளின் கவனமும் தற்போது திசைதிரும்பியுள்ளன. இப்பின்னணியில் இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் மேற்படி இருநாடுகளினதும் கவனம் திசைதிரும்பியுள்ள பின்னணியில் அதனைப் பயன்படுத்தி தமது நலன்களுக்கு பொருத்தமான வகையில் அரசியல் யாப்பை வடிவமைப்பதற்கான வாய்ப்பு சிங்களத் தலைவர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் பெரிதாக உண்டு.

அரசுகளுக்கென அடிப்படையான நிறுவன, நிர்வாக கட்டமைப்பு நிரந்தரமாக இருக்கின்ற போதிலும் குறித்த கட்டங்களில் ஆட்சியாளர்கள் தமக்கு முக்கியமானதான பிரச்சனைகளுக்கே முதன்மை கொடுப்பர். அத்துடன் யதார்த்தத்தின் படி ஊடகங்களின் கவனம் அப்போதயை சூழலில் எரிந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்சனையின் பக்கமே காணப்படும். அத்தகைய யதார்;த்த சூழலும் ஊடகக் கவனங்களும் இணைந்து அரசியல் தீர்மானங்களை நிர்ணயிப்பதில் முன்னுரிமை அடிப்படையில் பங்குவகிக்க முடியும்.
இத்தகைய சூழலை ஆட்சிக்கலையில் கைதேர்ந்த சிங்களத் தலைவர்கள் தமக்குப் பெரிதும் சாதகமாக பயன்படுத்துவர் என்பதில் சந்தேகமில்லை. இப்போது இந்து சமுத்திரம் சார்ந்த சர்வதேச யதார்த்தத்தை அப்படியே இருக்கும் வடிவில் படம்பிடித்தாற்போல் பார்க்க வேண்டியது அவசியம்.

முதலாவதாக உலகின் தலையாய உலப் பேரரசாகக் காணப்படுவது அமெரிக்காவாகும். அந்த அமெரிக்காவின் ஆட்சி அதிகாரம் அடுத்து யாரின் கையில் என்பது இன்னும் சில மாதங்களில் தீர்மானிக்கப்படவுள்ளது. தற்போது பதவியில் இருக்கும் ஆட்சியாளரின் கீழ் குறிப்பாக இந்து சமுத்திர பிராந்தியத்தில் அமெரிக்கா  அடைந்திருக்கக்கூடிய வெற்றி – தோல்விகளின் அளவு முதலில் கவனத்திற்குரியது.

தமது 8 ஆண்டுக்கால ஆட்சிக் காலத்தில்  ஒபாமா நிர்வாகம் இந்து சமுத்திரத்தில் அடைந்திருக்கக்கூடிய வெற்றி - தோல்விகள் இங்கு கவனத்திற்குரியது. முதலாவதாக இப்பிரச்சனை மத்திய கிழக்கு, ஆப்கானிஸ்தான், பர்மா, இலங்கை என்பன தொடர்பாக அமெரிக்காவின் இந்து சமுத்திர அரசியல் கவனத்திற்குரியது. 

மத்திய கிழக்கைப் பொறுத்தவரை அமெரிக்காவினுடைய பிரச்சனை பிராந்தியத்தோடும், மதத்தோடும் இணைந்த வெளிப்பாட்டைக் கொண்டிருந்தது. இதில் பின்லேடன் எங்கிருந்தாலும் அவர் வேட்டையாடப்படுவார் என்ற சூளுரையை இரட்டைக் கோபுரத்தின் மீதான விமானத் தாக்குதலின் போது பதவியில் இருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் தெரிவித்திருந்தார். 

அதன்படி இன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் நிர்வாகத்தின் கீழ் மே மாதம் 2011 ஆண்டு பின்லேடன் கொல்லப்பட்டதோடு அவரை வேட்டையாடும் இலக்கு முடிவுற்றது. அத்துடன் லிபியா நாட்டின் ஜனாதிபதி கேணல் கடாபி ஆட்சியில் இருந்து கவிழ்க்கப்பட்டு 2011 அக்டோபரில் கொல்லப்பட்டார். இவை அவரது ஆட்சிக்கால நேரடிச் சாதனைகளாகும். 

இதனைச் சாதனைகளின் பின்னணியில் அவரால் தனது இரண்டாவது தவணைக்குரிய தேர்தலில் 2012 ஆம் ஆண்டு இலகுவாக வெற்றிபெற முடிந்தது.

ஏற்கனவே 2006 டிசம்பர் 30ஆம் தேதி ஈராக்கிய அதிபர் சதாம் உசைன் தூக்கிலிடப்பட்டதும் அதன் பின்பு அடுத்தடுத்து பின்லேடன், கடாபி போன்றோர் கொல்லப்பட்டதும் இணைந்து மத்திய கிழக்கிற்கான தனது அரசியலில் ஒபாமா இலகுவாக முன்னேற முடிந்தது. 

இதன்பின் மத்திய கிழக்கில் சிரியா, ஈரான் ஆகிய இரண்டு நாடுகளின் ஆட்சியும் அமெரிக்காவிற்கு சவாலாய் இருந்தன. இதில் சிரியா அதிபர் அசாத்தின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நேரடி இராணுவ நடவடிக்கையில் ஈடுபட ஒபாமா நிர்வாகம் முடிவெடுத்தது. ஆனால் அப்படி சிரியா  அமெரிக்காவின் கையில் வீழ்ந்தால் முழு மத்திய கிழக்குமே அமெரிக்காவின் வசமாகிவிடும் என்ற நிலையில் ரஷ்ய அதிபர் புடின் அதனை தீவிரமாக இராணுவ பரிமாணத்துடன் தானும் எதிர்க்கத் தயாரானார். இந்நிலையில் ஒபாமா நிர்வாகம் தனது இராணுவ நடவடிக்கையை கைவிட நேர்ந்தது. இதில் ஒபாமா நிர்வாகம் வெற்றி பெறாமலே தனது ஆட்சிக்காலத்தை நிறைவு செய்யப்போகின்றது.

அதேவேளை ஈரானைப் பொறுத்தவரை இராணுவ நடவடிக்கையின் மூலம் அதனை பணிய வைப்பதற்கான முயற்சிகள் ஒபாமா நிர்வாக தரப்பில் முதன்மை பெற்று வந்த காலத்தில் ஈரானில் ஏற்பட்ட உள்நாட்டு அரசியல் மாற்றம் ஈரானை அமெரிக்காவுடன் சமரசத்திற்கு இட்டுச் சென்றது. அணுவாயுத தயாரிப்பு முயற்சியிலிருந்து ஈரான் பின்வாங்குவதாக மேற்கொள்ளப்பட்ட அறிவித்தலின் மூலம் அமெரிக்கப் படையெடுப்பிற்கான வாய்ப்பை ஈரானிய புதிய அரசாங்கம் இல்லாது செய்தது. இதுவிடயத்தில் அமெரிக்கா முழு வெற்றியீட்ட முடியாமல் ஆனால் அரை வெற்றியை ஈட்டிக் கொண்டது.

மத்திய கிழக்கிற்கு வெளியே சீனாவுடன் கைகோர்த்திருந்த பர்மிய இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக அங்கு 2015 நவம்பரில் நடந்த தேர்தலில் ஓம் சேங் சுச்சி வெற்றி பெற்று பதவிக்கு வந்ததோடு அங்கு ஒபாமா நிர்வாகம் இராசதந்திர அடிப்படையில் பெரு வெற்றியை ஈட்டிக்கொண்டது. 

மேலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையைப் பொறுத்தவரையில் மகிந்த அரசாங்கம் சீன சார்புடன் நடந்து கொண்டதால் ஒபாமா நிர்வாகம் அதில் நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தது. இறுதியாக இராசதந்திர ரீதியான நடவடிக்கைகளின் மூலம் மகிந்த அரசாங்கத்தை 2015 ஜனவரியில் வீழ்த்திய நிலையில் அமெரிக்காவிற்கு சாதகமான அரசாங்கம் இலங்கையில் பதவிக்கு வந்தது. 

இப்படிப் பார்க்கையில் மத்திய கிழக்கில் சிரியாவைத் தவிர ஏனைய இடங்களில் ஒபாமா நிர்வாகம் வெற்றியீட்டி மத்திய கிழக்கில் தனது பிடியை பலப்படுத்தியுள்ளது. ஆயினும் சிரியாவில் அதன் இலக்கு அடையப்படாதமை அமெரிக்க அரசுக்கு வருத்தம் அளிக்கக்கூடிய விடயமே. ஈரானின் கிடைத்த அரை வெற்றி அதற்கு ஆறுதல் அளிக்கவல்லது. இலங்கையிலும் பர்மாவிலும் கிடைத்த வெற்றி அமெரிக்காவிற்கு மகிழ்ச்சியளிக்கவல்லது.

ஆனால் சீனாவிற்கு  இலங்கையில்  ஏற்பட்ட பின்னடைவிற்குப் பதிலாக அது குவாதர் துறைமுகத்தை 43 வருட குத்தகைக்கு இவ்வாண்டு பாகிஸ்தானிடமிருந்து பெற்றுக் கொண்டதன் மூலம் அரபிக் கடலில் சீனாவிற்கான நீண்டகால நலன் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. இதன் மூலம் ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு ஆகிய இரு பிராந்தியங்களிலும் இருந்து தனக்குப் பெறக்கூடிய நீண்டகால நலன்கள் அனைத்துக்குமான வாய்ப்புக்களையும் சீனா நிலைநிறுத்திவிட்டது.

சீனாவின் இராணுவம் பலம்வாய்ந்தது என்பது உண்மை. 73 இலட்சத்திற்கும் மேலான படையினரைக் கொண்ட பலம் பொறுத்திய இராணுவம் அது. ஆனால் இராணுவத்தின் பலம் அதற்கான எரிபொருள் பலத்தில் தங்கியுள்ளது. அவ்வாறு எரிபொருள் பலமற்று இருக்குமனால் எத்தகைய நவீன ஆயுதங்களும் கம்பு தடிக்குச் சமனானவை

ஆனால் தற்போது குவாதர் துறைமுகத்தின் மூலம் மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்கா உள்ளிட்ட பெற்றோலிய வளத்தை சீனா தங்குதடையின்றி பெற முடியும். ஆதலால் சீனா இராணுவத்தினுடைய கட்டுமானம் நம்பிக்கையுடனும் வீரியத்துடனும் எழும். 
பாகிஸ்தானிலுள்ள குவாதர் துறைமுகம் சீனாவின் கைவசமானதன் மூலம் அரபிக் கடலின் பெரும் பகுதியில் சீனாவின் கை நிரந்தரமாக ஓங்குவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

 இதன்மூலம் அமெரிக்காவின் மத்திய கிழக்கு முதன்மை நீண்ட காலத்தில் சீனாவிடம் பறிபோவதற்கான வாய்ப்பு தென்படத் தொடங்கியுள்ளது. இப்பின்னணியில் மத்திய கிழக்கின் மீதும், கிழக்கு ஆபிரிக்கா நோக்கியதுமான அமெரிக்காவின் கவனம் முன்னெப்பொழுதையும்விட முதன்மைப் பெற வேண்டிய சூழல் இன்றைய நிலையில் ஏற்பட்டுள்ளது. 

அதேவேளை இதனால் அதிகம் பாதிக்கப்படும் நாடு இந்தியாவாகும். பாகிஸ்தானுடன் இணைந்தவாறான அரபிக் கடலில் சீனக் கொடி நிரந்தரமாக பறப்பதற்கான வாய்ப்பு மேலோங்கியுள்ளமை இந்தியாவை அதிகம் கவலைக்குள்ளாக்கியுள்ளது. மேலும் காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தான் அதிகம் கவனம் செலுத்துவதாலும் காஷ்மீரை அண்டிய பகுதிகளில் பாகிஸ்தான் ஆதரவு இராணுவ மற்றும் மத அமைப்புக்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாலும் இந்தியாவின் கவனம் இலங்கை இனப்பிரச்சனையைத் தாண்டி பாகிஸ்தான் - சீனா சார்ந்த மேற்படி பிரச்சனையின் பக்கம் திரும்பியுள்ளது.

அமெரிக்காவினதும், இந்தியாவினதும் மேற்படிஇந்து சமுத்திரம் சார்ந்த கவனம் சீனா - பாகிஸ்தான் சார்ந்த அரசியல் இராணுவ நடவடிக்கைகளை நோக்கி குவியத் தொடங்கியுள்ளது. அத்துடன் அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலும் இலங்கையின் இனப்பிரச்சனை மீதான அமெரிக்க கவனத்தை குறைத்துள்ளது. இவ்வகையில் இலங்கையின் இனப்பிரச்சனையோடு பதில் சொல்ல வேண்டிய அளவிற்கு நெருக்கமாக சம்பந்தப்பட்டிருக்கும் அமெரிக்காவும், இந்தியாவும் தமது கவனத்தை மேற்கூறப்பட்டவாறான விடயங்களில் குவித்திருக்கும் வேளையில் அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி தனது அரசியல் நகர்வுகளை இலங்கை அரசாங்கம் தனக்கு ஏற்ப கைக்கொள்வற்கான சூழல் தோன்றியுள்ளது.

சீனாவைப் பொறுத்தவரையில் இலங்கையின் இனப்பிரச்சனை விடயத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அது இலங்கை அரசுக்கு சாதகமான முடிவுகளையே எடுக்கும். ஆதலால் பதவியில் இருக்கும் இன்றைய அரசாங்கத்திற்கு சீனா எவ்வகையிலும் இது தொடர்பாக நெருக்கடி கொடுக்கமாட்டாது. அதன் ஆதரவு இலங்கை அரசுக்கு நிரந்தரமானது. எனவே அப்பக்கத்தால் இலங்கை அரசு சிந்திக்கத் தேவையில்லை.

அதேவேளை ஈழத்தமிழர் விவகாரத்தில் 
அமெரிக்காவும், இந்தியாவும் தமிழ்த் தரப்பிற்கு ஏதோ ஒருவகையில் பதில் அளிக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டவர்கள். அவர்களுடைய கவனம் திசைதிரும்பி இருப்பது இலங்கை அரசிற்கு மிகவும் சாதகமானது. அதனை பதவியில் இருக்கும் இன்றைய அரசாங்கம் பயன்படுத்த தவறாது.

இந்நிலையில் ஈழத்தமிழ் அறிஞர்களும், தலைவர்களும் மற்றும் தமிழ் மக்களின் உரிமை மீது அக்கறை கொண்ட ஜனநாயக விரும்பிகளும் மேற்படி அரசியல் கள யதார்த்தத்தின் பின்னணியில் அதிகம் அக்கறையுடன் சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறு பார்க்கையில் இந்து சமுத்திர அரசியலில் பிரதான பங்கெடுக்கும் அமெரிக்கா - சீனா - இந்தியா ஆகிய மூன்று நாடுகளின் மேற்படி அரசியல் பின்னணியை இன்றைய ஆட்சியாளர்கள் தமக்கு சாதகமாக அறுவடை செய்ய தவறமாட்டார்கள். இதுவிடயத்தில் நீதிக்கான தமிழ் மக்களின் கோரிக்கைகளும் தேவைகளும் இந்து சமுத்திர அரசியல் யதார்த்தத்தில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. 

எப்படியாயினும் வங்களா விரிகுடாவையும், அரபிக் கடலையும் உள்ளடக்கிய தென்னாசியப் பிராந்தியத்தின் முக்கி;யத்துவம் இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் அமைவிடத்திலேயே உள்ளது. முழு இலங்கையினதும் கேந்திர முக்கியத்துவம் வடக்கையும், கிழக்கையும் அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளது. கிழக்கே திருகோணமலையும், வடக்கே மன்னார் மற்றும் நெடுந்தீவும் இவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகும். இவை இருமருங்கிலும் முறையே வங்கக்கடல், அரபிக்கடல் என்பனவற்றை தொடுத்து நிற்கும் மையங்களாகும். 

இவ்வகையில ஈழத் தமிழரிடம் பொன்னையும், கனிப்பொருட்களையும், எரிபொருளையும்விட பெறுமதியான சொத்தாக அவர்களது அமைவிடம் முக்கியத்துவம் உள்ளது. 

இந்து சமுத்திரத்தின் தென் பகுதி முற்றிலும் அமெரிக்காவின் கையில் உள்ளது. அது மொறிசியஸ் நாட்டைத் தவிர ஏனைய பகுதிகள் நாடுகளற்ற பெரும் கடல் பிராந்தியமாகும். இந்து சமுத்திரத்தில் உள்ள 44 நாடுகளில் 43 நாடுகள் இந்து சமுத்திரத்தின் வடக்கேதான் உள்ளன. 

வடஇந்து சமுத்திரத்தில் கிழக்குக்கும், மேற்கிற்கும் இடையே மையத்தில் அமைந்திருப்பது இலங்கைத்தீவு. இந்த இலங்கைத் தீவின் கேந்திர முதன்மை வடக்கு - கிழக்கில்தான் உண்டு. இது வெறுமனே முழு இந்துசமுத்திரம் சார்ந்த கேந்திர முக்கியத்துவத்தை மட்டுமன்றி இந்தியாவின் பாதுகாப்புக்கு அவசியமான கேந்திரத்திலும் அமைந்துள்ளது.

ஆதலால் ஈழத்தமிழர்கள் ஒருபோதும் வெறுங்கையுடன் இல்லை. மேலும் அமெரிக்காவின் கைவசமுள்ள தென் இந்து சமுத்திரத்தின் நலன் இலங்கைத் தீவில் ஏற்படக்கூடிய வெளிநாடுகள் சார்ந்த அரசியலால் பாதிக்கப்படக்கூடியது. இந்த வகையில் ஈழத் தமிழர்கள் ஒரு பலமான இடத்தில் உள்ளார்கள். இதனை உணராதவரை இதனை உணர்ந்து கையாளத் தெரியாதவரை ஈழத்தமிழர்கள் ஏதிலிகள்தான்.

Hi இலங்கை அரசின் அரசியல் இராசதந்திர நடவடிக்கைகளானவை 2500 ஆண்டுகால தொடர் அரச நிறுவன கட்டமைப்பைச் சார்ந்ததும், அதற்கூடான மெருகான அரசியல் நடவடிக்கைகளுக்கு உரியதுமாகும். யார் பதவிக்கு வந்தாலும் அவரை அந்த இராசதந்திர கட்டமைப்பு வழிநடத்தும். அந்த அரச நாற்காலிக்கு அப்படியான ஒரு பொறிமுறை உண்டு. ஆனால் தமிழ்த்தரப்பைப் பொறுத்தவரை தமிழத் தலைவர்களை வழிநடத்த அப்படியொரு கட்டமைப்போ, பொறிமுறையோ கிடையாது. அத்துடன் கூடவே நடைமுறையில் அரச இயந்திரத்தை கையாண்ட தேர்ச்சி தமிழ்த்தரப்பிற்கு இயல்பாக இல்லை. இந்நிலையில் இவை விசேட கவனத்திற்குரிய அறிவையும் செயற்பாட்டையும் பெறாதுவிட்டால் விளைவுகள் சாதகமாக அமைவது கடினம்.
« PREV
NEXT »

No comments