Latest News

September 19, 2016

தாய் தமிழ உறவுகள் தாக்கப்படும் அநீதியை கண்டித்து கனடா வாழ் தமிழர்கள் கனடிய தமிழர் தேசிய அவையின் ஏற்பாட்டில் கடும் கண்டன குரலை வலிமையாக எழுப்பினர்.


by admin - 0

தாய் தமிழ உறவுகள் தாக்கப்படும் அநீதியை கண்டித்து கனடா வாழ் தமிழர்கள் கனடிய தமிழர் தேசிய அவையின் ஏற்பாட்டில் கடும் கண்டன குரலை வலிமையாக எழுப்பினர்.




நேற்று செப்டம்பர் 16, வெள்ளிக்கிழமை மாலை 7:00 மணிக்கு கனடாவில் ஸ்கார்ப்புரோவில் அமைந்துள்ள கனடா கந்தசாமி ஆலய மண்டபத்தில் கனடிய தமிழர் தேசிய அவை ஒழுங்கமைத்த வீரத்தமிழன் விக்கினேஸ்க்கு கண்ணீர் வணக்க நிகழ்வும், கர்நாடகாவில் காவிரி நதி நீர் சிக்கலில் தமிழர்கள் தாக்கப்பட்டு அவர்கள் உடைமைகள் எரியூட்டப்பட்ட மற்றும் நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்திய கொடும் செயல்களை கண்டித்தும் தமிழர்களுக்கு நதி நீர் மறுக்கும் கர்நாடக மக்கள்  தமிழக விவாசாயிகளுக்கு நீர் தரமாட்டோம் என மறுக்கும் அநீதியை கண்டித்தும் தமிழக மக்களோடு கனடா வாழ் ஈழ தமிழர்களாகிய நாமும் உரத்து குரல் கொடுக்க  இருக்கின்றோம் என்ற உணர்வை வெளிப்படுத்தியும் கண்டன, மற்றும் வீர வணக்க நிகழ்வு நடைபெற்றது.



தமிழகத்தை சேர்ந்த தமிழர்கள், மலையக தமிழர்கள், தமிழீழ தமிழர்கள் என்ற பேதங்கள் இன்றி அனைத்து தமிழர்களும் மொழியால் ஒன்றிணைந்து தமிழக உறவுகளுக்கு தோள் கொடுக்க வலிமையாக கண்டன உரைகளை ஆற்றினார்கள்.
தாய் தமிழக மக்களுக்கான நன்றி கடனாற்றும் நிகழ்வாகவும்  தமிழினத்தின் தமிழ்  தேசிய கடனாற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகவும் இந்நிகழ்வு இடம்பெற்றது. 

ஈழத்து தமிழர்கள் சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளால் தாக்கி அழிக்கப்பட்ட பொழுதுகளில் எல்லாம் வலி தாங்காமல் உதவி கேட்டு "அம்மா" என அழுததில்லை. "அன்னை தமிழகமே எம்மை பாரம்மா " என்று தான் கதறி இருக்கின்றார்கள். 

எங்கள் தமிழக உறவுகளும் ஈழத்தில் நாம் படும் அவலங்களை கேட்டவுடன் அழைக்க முன்பே துயர் அறிந்து ஓடோடி வந்து தோள் கொடுத்து இருக்கின்றார்கள். 

உயிரள்ளி கூட கொடுத்த அன்னை தமிழகத்திற்கு நன்றி கடனாற்ற ஈழத்து தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழ் தேசிய மாந்தர்களாக பிரித்தானியா, யாழ்ப்பாணம், கனடா என குரல் கொடுத்திருப்பது வரலாற்றில் தனி சிறப்பான தமிழ் எழுச்சி மிக்க காலங்களாக இக்காலங்களை பதிவாக்கி இருக்கின்றது.

அந்த வகையில் இந்த கண்டன கூட்டத்தில் உரையாற்றிய அனைத்து தமிழக, மலையக, தமிழீழ தேசிய மாந்தர்களும் சொன்ன உறுதி மொழி இனிமேல் உலகில் எந்த தமிழனுக்கு என்ன அநீதி எங்கு  நிகழ்ந்தாலும் இதே போல் ஒட்டுமொத்த தமிழினமும் பொங்கி எழ வேண்டும் என்பதாகும்.

உரையாற்றியவர்களுள் சிலர் இந்திய அரசின் தமிழின பகைமை போக்கையும் கர்நாடக அரசின் தமிழரை பாதுகாக்காத செயலையும் தமிழக அரசின் பாராமுக சிந்தையையும் வலிமையாக கண்டித்தார்கள். 


நதி என்பது அது தோன்றும் மலைக்கு மட்டுமல்ல அது கடலில் கலக்கும் கழி முகங்கள் வரை பாய்ந்தோடி வரும் நிலங்கள் அனைத்துக்கும் சொந்தமானவை.
அந்த வகையில் பல்லாயிரம் ஆண்டுகள் காவிரியை கொண்டு விவசாயம் செய்த தமிழக தமிழர்கள் சுமார்150 ஆண்டுகளுக்குள் இப்படி அணை கட்டி அநீதி செய்யும் கர்நாடக மக்களால் மற்றும் பாராமுகமாக இருக்கும் இந்திய அரசால் தடுக்கப்படுவது கண்டனத்திற்குரியது என்ற கருத்து வலிமையாக முன்வைக்கப்பட்டது. 

உலகெங்கும் தமிழர்கள் இருந்தாலும் தமிழர்க்கு என்று ஒரு தேசம் இல்லாததால் தான் இந்த நிலை என அனைவரும் வருந்தினார்கள். தமிழ் தேசங்களின் விடியல் தமிழ் மக்களின் உரிமை மீட்பு போராட்டங்கள் என்பனவே இற்றை காலத்தில் தமிழ் மக்களின் போராட்டங்களாக மாறி இருக்கும் உண்மைகளும் எடுத்து சொல்லப்பட்டன. 

எமக்காக உலகில் எந்த அரசும் பேசாவிட்டாலும் தமிழர்களுக்காக தமிழர்கள் குரல் கொடுப்பார்கள் போராடுவார்கள் என்பதையே இந்த நிகழ்வு எடுத்து காட்டுகின்றது.

உணர்வு மிக்க ஒருமித்த தமிழினத்தின் குரலாக ஓங்கி ஒலித்த இந்த கண்டன கூட்டத்தை போல் இவ்வாரம் இன்னொரு நிகழ்வு கனடிய மண்ணில் தமிழக உறவுகளுக்கு ஆதரவாக நிகழ இருக்கின்றது. 

அந்த வகையில் எதிர் வரும் திங்கட்கிழமை செப்டம்பர் மாதம் 20 ஆம் நாள் தன்னெழுச்சி கொண்ட மக்களால் நீதிக்கான குரலாக கர்நாடகாவில் நிகழ்ந்த தமிழர்க்கு எதிரான வன்முறையை கண்டித்து ரொறன்றோவில்  இந்திய துணை தூதரகத்திற்கு முன்பாக நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரை கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வு நடை பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழினம் வலிமையான இனம். அது பொங்கு தமிழாக எழுக தமிழாக உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து எழுகை கொண்டு போராடும் காலம் இது.

தமிழின் பெயரால் தாக்கப்பட்டோம். தமிழின் பெயரால் ஒன்றிணைவோம்! எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே!
« PREV
NEXT »

No comments