Latest News

September 01, 2016

நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர் மற்றும் தீர்த்தம் திருவிழாக்காட்சிகள்
by admin - 0

நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர் மற்றும் தீர்த்தம் 


நல்லூர் கந்தனின் வருடாந்த பெருவிழா உற்சவம் ஒவ்வொரு வருடமும் "ஆடி அமாவாசை" தினத்திலிருந்து ஆறாம் நாள் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி "ஆவணி அமாவாசை"தினத்தன்று தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிட்த் தக்கது..

அழகிய முருகன்,  அலங்கார வடிவில்,  தமிழ் கடவுளாக,  தமிழர்கள் வாழும் வட பகுதியில்,  நல்லூரானாக குடிகொண்ட இடம்தான் நல்லூர் கந்தசாமி திருக்கோவில். இந்தத் திருக்கோவில் சரித்திர பிரசித்தி பெற்ற ஒரு புண்ணிய ஸ்தலம். முருக அடியார்கள் பலரின் வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்ட அற்புத திருத்தலமும் ஆகும்.

நல்லூர் திருவிழாவைப் பார்ப்பது ஒரு கண்கொள்ளாக்காட்சி. முருகன் என்றால் அழகன். கதிர்காமக் கந்தனை ஒளிவீசும் கந்தன் என்றும் காவல் கந்தன் என்றும், செல்வச்சந்நிதியானை - அன்னதானக் கந்தன் என்றும்  அழைப்பதுபோல் நல்லூரானை அலங்காரக் கந்தன் என்று முருகபக்தர்கள் அழைக்கின்றார்கள்.

புராணங்களில் முருகனின் திருவுருவம் குமரன், கந்தன்,  வீசாகன்,  குகன் என்ற நான்கு வடிவங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கந்தன் கடம்ப மாலையை சூடி கடம்ப மரத்தின் கீழ் உறைபவன் என்கிறது சிலப்பதிகாரம்.

முருகனை தமிழ் கடவுள் என்று கூறுவதற்குப் பல சான்றுகள் உண்டு. அகத்தியனுக்கு தமிழைத் தந்தவனும் முருகன், குமரகுருபரனுக்குப் பேச்சுத்திறனை அளித்தவனும் முருகன், முத்துசாமி தீட்சிதருக்குப் பாடும் வல்லமையையும், ஒளவைப்பிராட்டிக்கு ஞானத்தையும் புகட்டியவன் முருகன் என்பன குறிப்பிட்த்தக்கவை.

நல்லூர் கந்தசாமி கோவிலில் திருவிழா என்றால், யாழ்நகரில் மட்டுமல்ல, முருக அடியார்கள் அனைவரது உள்ளங்களிலும் உற்சாகம்தான். இலங்கையில் தென்பகுதியிலே, கதிர்காமக் கந்தனின் கொடியேற்றத் திருவிழாவைத் தொடர்ந்து வட பகுதியிலுள்ள நல்லூர் கந்தன் ஆலயத்தில் கொடியேறுவது ஒரு சிறப்பாகும். அதுமட்டுமல்ல, வடக்கிலும் தெற்கிலும் பிரசித்திபெற்ற, புகழ்பெற்ற, பாடப்பட்ட முருகனது ஆலயங்கள் இரண்டும், காலையடி-பண்டத்தரிப்பில அமந்துள்ள ஞானவேலயுதர் ஆலயமும் வேலாயுதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளமை மற்றுமொரு சிறப்பாகும்.

நல்லூர் கந்தனின் சிறப்பை "யோகர் சுவாமிகள்" தனது பாடலில் “நல்லூர் தேரடியில் நான் கண்டு போற்றிசைத்தேன். சொல்லுந்தரமோ சுகம்" என்றும் “பஞ்சம் படை வந்தாலும் பாரெல்லாம் வெந்தாலும் அச்சுவமோ நாங்களடி கிளியே, நல்லூர் கந்தன் தஞ்சமடி" என்றும், நல்லூரான் சிறப்பை எடுத்துக்காட்டியுள்ளார்.

முருகவழிபாட்டில், குறிப்பாக உருவ வழிபாடு அதாவது, வேல் வழிபாடு பழைமை வாய்ந்தது. பண்டைய காலத்தில் வேலை வழிபட்டு வந்தவர்களைப் பற்றிய வரலாறுகள் பல உண்டு. வேலை வழிபட்டுவந்தால் அனைத்து இடர்களும் விட்டுவிலகும் என்பது ஐதீகம். இதனால்தான் நம் முன்னோர்கள், “வேலுண்டு வினை தீர்க்க’ என்றும் கூறுவர்.

நல்லூர் கந்தன் ஆலயத்தின் கருவறையிலும் முருகனது வேலுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வேலின் மகிமையை எடுத்துக்கூற, அருணகிரியாரின் திருப்புகழ் ஒரு எடுத்துக்காட்டு. முருகனது புகழைப்பாடச் சற்று தயங்கிய அருணகிரியாரின் நாவில் முருகன் தனது வேலின் நுனியால் “ஓம்" என்ற மந்திரத்தை எழுதி முருகனது அருளால் பாட வைக்கப்பட்டதுதான் திருப்புகழாகும்.

வடபகுதியில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் முக்கியமானது இந்த நல்லூரான் திருப்பதி. முருகனின் ஆறுபடை வீட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இலங்கையிலுள்ள நல்லூர் கந்தனுக்கும், கதிர்காமக் கந்தனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில், தமிழ் மன்னனின் தலைநகரென்று சிறப்பைப் பெற்றது இந்த நல்லூர். யாழ். ஆண்ட அரசர்களின் பக்திக்கும் வழிபாட்டுக்கும் திருத்தலமாக அமைந்த பெருமை நல்லூர் கந்தசாமி திருக்கோவிலுக்குண்டு. நல்லூர் என்ற பெயரிலே நன்மையும் நலனும் பொழிவும் நிறைந்துள்ளதான கருத்தும் உண்டு.

தேர்த் திருவிழா நிகழ்வுகள்:
தேர்த் திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் ஆலய வளாகத்தில் ஒன்றுகூடுவதால் ஏற்படும் நெடுக்கடிகளை தவிர்த்து அமைதியான சூழலில் பக்தர்கள் தங்கள் நேர்த்திகளை பூர்த்தி செய்வதற்கு அதிகாலை 3.00மணி முதல் பக்திப் பரவசத்துடன் அங்கப் பிரதிட்டை, மற்றும் அடியளித்தல் செய்து தமது வேண்டுதல்களை நிறைவேற்றுவது இங்கு வழக்கமாக உள்ளது.

தேர்த் திருவிழா தினம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் எம் பெருமான் ஆலயத்தில் கூடி நிற்க பக்தர்களின் "அரோகரா" கோஸம் வானைப் பிளக்க, தேவர்கள் "பூ"மாரிபொழிய, விண் அதிரும் 6 மணிகளும் ஒலிக்க. நாதேஸ்வர தவில் வித்துவான்களின் மங்கள இசை முழங்க வசந்த மண்டப திரைச்சீலைகள் விலக ஸ்ரீ சுப்ரமணிய ஆறுமுகசுவாமி கஜவல்லி மகாவல்லி சமேதராக வசந்த மண்டபத்தில் அருள்காட்சி கொடுத்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

தொடர்ந்து வசந்த மண்டபப் பூசை வழிபாடுகள் சிறப்புற நடத்தப்பெற்றதும் மீண்டும் "அரோகரா" கோஸம் வானைப் பிளக்க ஆறுமுகசுவாமி கஜவல்லி மகாவல்லி சமேதராகவசந்த மண்டபத்தில் இருந்து எழுந்தருளுவார். பக்தர்  வெள்ளம் உள்வீதி எங்கும் அலை மோத பக்தர்கள் தோள்களின் மேல் ஆறுமுகப் பெருமான உள்வீதி வலம் வந்து, பல்லாயிரம் அடியவர்களிற்கு அருள்காட்சி கொடுத்து அருள் மழை பொழியும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.

உள்வீதியில் பக்த அடியார்கள் வெள்ளம் கரைபுரண்டு ஓட, ஆடி, ஆடி வந்த சண்முகப் பெருமானுக்கு யாகசாலையையில் பூஜைகள் நிறைவு பெற்றதும் கோபுர வாசலில்  "பூ" மழை பொழிய ஆயிரக்கணக்கான பக்த அடியார்களின் அரோகரா கோஸத்துடன் சண்முகப் பெருமான் வெளிவீதியை வந்தடைவார்.

சித்திர இரதத்தில் கம்பீரமாக ஆரோகணித்த சண்முகப் பெருமானிற்கு தீபம் காட்டப்பட்டதும், ஆயிரக்கணக்கில் குவிக்கப்பெற்றிருக்கும் தேங்காய்கள் பக்தர்களினால் சிதறு தேங்காயாக உடைக்கப்பெறுகின்றன. அத்துடன் பக்கத்ர்கள் தேரின் வடக்கயிற்றை முண்டியடித்துக் கொண்டு பற்றிக் கொள்வர். அரோகரா ஓசையுடன் ஜன சமுத்திரத்தின் மத்தியில். பேரிகை மேளமும் காண்டமணியும் மாறி மாறி ஒலிக்க, நாதேஸ்வர தவில் வித்துவான்களின் மங்கள இசை முழங்க வடக்கயிற்றை பக்தர்கள் பற்றி இழுக்க கரைபுரண்டு ஓடும் அடியார்கள் வெள்ளத்தில் சண்முகப் பெருமானின் இரதம் மிதந்து வருவது போல் காட்சி தருவார்.

இரதத்தை வழிப்படுத்தி கட்டை போடும் அடியார்கள் கந்தனருளினால் இரதத்தின் சில்லுகளை நெறிப்படுத்த சுமார் இருமணித்தியாலங்களிற்கு மேலாக வெளி வீதியில் வலம் வந்து தேர் இருப்பிடத்தை வந்தடையும்.

தேர் வீதி வலம் வரும்போது நான்கு வீதிகளிலும் நிறைகுடம், கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகளும் அர்ச்சனைகளும் இடம்பெறுகின்றன. தேரைப் பின்தொடர்ந்து அடியார்கள் அங்கப்பிரதட்சனைகள், அடிஅழித்தல், தீச்சட்டியெடுத்தல், காவடி எடுத்தல், பாற்செம்புக் காவடிகள், பஜனைகள் மூலம் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுகின்றனர்.

தேர் இருப்பிடத்திற்கு வந்த சிறிது நேரத்தில் சண்முகப் பெருமானுக்கு "பச்சை சாத்து விழா" இடம் பெறும்.  பச்சை நிற வஸ்த்திரத்தினாலும் பூக்களினாலும் அலங்கரிப்பட்டு அர்ச்சகர்களும் பச்சை வர்ண ஆடை அணிந்து பூசை வழிபாடுகள் இடம்பெற்றுகின்றது. அதனை அடுத்து, தேர் இருப்பிடத்தில் இருந்து எழுந்தருளிய சண்முகப் பெருமான் கோபுர வாசலின் முன் நின்ற சப்பற-ரதத்திற்கு முன்னால் ஆடி அசைந்து வந்து ஆலயத்தினுள் நுழைந்து, உள் வீதியின் வசந்த மண்டபத்திற்கு முன்னுள்ள தெற்கு வாசல் வரை சென்று வசந்த மண்டபத்தை வந்தடைவார்.

பச்சை தரித்த கோலத்தில் எழுந்தருளுவதன் நோக்கம் "எல்லாச் சீவராசிகளுக்கும் எல்லா அநுக்கிரகங்களையும் செய்யும் கருத்தாவாகிய சதாசிவமூர்த்தியாக உள்ளவர் தானே என்பதையும், வேண்டுவார் வேண்டுவதை ஈயும் தன்மையும் தனக்கே உடையதென்பதையும் காட்டி, எல்லா நலன்களையும் பெற்று வாழுங்கள் என்று அருள் செய்யும் குறிப்பை உணர்த்தும் கோலம்" என்பதாகும்.

வசந்த மண்டபத்த்தை வந்தடைந்த சண்முகப் பெருமானிக்கு அபிசேக ஆராதனைகள்  இனிதே நிறைவு பெற்றதும் தேர்த் திருவிழா நிறைவுக்கு வருகின்றது.

ஆலய நிகழ்வுகள்:
சைவ உலகில் ‘கோயில்’ என்றால் சிறப்பாகக் கருதப்படுவது ”சிதம்பரம்” என்னுந் திருத்தலமேயாகும். அதேபோன்று இன்று ஈழத்தில் கோயில் என்றால் சிறப்பாகக் கருதத்தக்கது நல்லூர்க் கந்தசுவாமி கோயிலேயாகும்.

நல்லூர் யாழ்ப்பாணப் பட்டணத்திலுள்ள ஓர் ஊர். ஆரியச் சக்கரவர்த்திகள் என்று கூறப்படும் யாழ்ப்பாணத் தமிழ் அரசரின் அரசிருக்கையாகப் பன்னெடுங்காலம் பேர் புகழுடன் விளங்கிய ஊர். ஆரியச் சக்கரவர்த்திகள் சைவசமயிகள். இவர்களது அமைச்சர்களும், குடிமக்களும் சைவசமயிகளாகவே இருந்தனர்.

இதனால் இம்மன்னர்கள் தங்களதும், தங்கள் மக்களதும் சமயக் கடமைகளை நிறைவேற்றுதற்காகத் தங்கள் அரணைச் சுற்றியும், சுற்றுப்புற ஊர்களிலும் பல சிவாலயங்களைக் கட்டுவாராயினர்.

வெயிலுகந்த பிள்ளையார் கோயில், கைலாய நாதர் கோயில், சட்டநாதர் சிவன் கோயில், வீரமாகாளியம்மன் கோயில் அரசகேசரி என்ற அமைச்சரால் கட்டப்பட்ட நீர்வேலி அரச கேசரிப்பிள்ளையார் கோயில் போன்றவை இவர்கள் கட்டிய கோயில்களுட் சிலவாகும்.

இவ்வாறு இவர்களினால் அமைக்கப்பட்ட ஆலயங்களில் பரிவார தேவகோட்டங்களும், சிறந்த யாக மண்டபங்களும், களஞ்சியம், அடைப்பள்ளி, திருக்குளம் முதலியனவும், சித்திக்கோபுரங்களோடு மதில்களும், நந்தவனம், அந்தணர் தங்கும் இடங்களும், மண்டபம், அன்னதான சத்திரங்கள், தேரும் தேரோடும் வீதிகளும் அமைந்திருந்தனவாம்.

இவற்றோடு நான்மருங்கும் தாமரைத் தடாகங்களும், அவைகளைச் சுற்றிச் சிறந்த படித்துறைகளும், அவைகளுக்கு அருகே தோரண மண்டப மேடைகளும், இடையிடையே சிறந்த மரக்காக்களும் அமைப்பித்துத் தேவநகராக நல்லூரை எழில்பெற இவர்கள் அக்காலத்தில் வைத்திருந்தனர். இப்படியாக மன்னர்களினால் எடுக்கப்பட்ட மனம் நிறைந்த அருள் அலை வீசும் சிவாலயங்கள் நிறைந்த கோட்டமாகிய நல்லூருக்கு இன்று அணியாக விளங்குவது அங்குள்ள கந்தவேள் கோயிலாகும்.

தமிழுக்கும் சைவத்திற்கும் அருந்தொண்டுகள் ஆற்றிய யாழ்ப்பாணத்து அரசர்களது நேரடிப் பரிபாலனத்தில் இருந்து வந்ததும், அவர்களது முக்கிய வணக்கத் தலங்களுள் ஒன்றாகவிருந்ததும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலாகும். இக்கோயில் ஆரியச் சக்கரவர்த்தியின் முதலமைச்சராக விளங்கிய புவனேகபாகு என்பவனால் கட்டப்பட்டதென்பர் ஒரு சாரார்.

இன்னொரு சாரார், யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றிய செண்பகப் பெருமாள் என்னும் புவனேக வாகுவினால் 1454இல் கட்டப்பட்டதென்பர். எது எப்படியாயினும், புவனேகவாகு என்பவனது பெயர் மகோற்சவங்களில் ஆலயக் கட்டியத்தில் கூறப்பட்டு வரும் வழக்கம் இன்றும் இவ்வாலயத்தில் இருந்து வருவது குறப்பிடத்தக்கதாகும்.

பண்டை நல்லூரில் 64 வீதிகள் இருந்தன. அவை ஒவ்வொன்றிலும் கந்தவேள் கோவிலுக்கு நியமப்படி தொழும்பு செய்பவர்கள் வாழ்ந்து வந்தனர். பல தலைமுறைகளும், பல அரச முறைகளும் உருண்டோடி விட்டன. ஆயினும், இக்கோயிற் தொழும்பு முறையால் ஏற்பட்ட இவ்வாலய அயல் இடங்களினது பெயர்கள் இன்றுவரையும் மாற்றமடையாது நின்று நிலவி வருகின்றன.

அவ்விடங்களில் வாழும் மக்கள் தலைமுறை தலைமுறையாகத் தொன்று தொட்டுச் செய்துவரும் தொழும்புகளை மறவாது உரிமையோடு செய்து வரகின்றனர். இவை இவ்வாலயத்தின் பண்டைப் பெருமையை நினைவுகூர வைத்து இப்பெருமான் மீது இம்மக்களுக்கு இருந்துவரும் பக்தியையும் எடுத்துக் காட்டுகின்றன.

1478இல் அரச கட்டிலேறிய சிங்கை பரராசசேகரன் இவ்வாலயத்திற்கு அண்மையில் பகரவடிவிலான திருமஞ்சனக்கேணி ஒன்றை அமைப்பித்தான். புண்ணிய நதியான யமுனையிலிருந்து தீர்த்தம் தருவித்து இவ்வேரியில் சொரிவித்தான். அதனால் அவ்வேரியை ‘யமுனையேரி’ என்றழைப்பாராயினர். ‘யமுனாரி’ என இன்று அழைக்கப்படுவதும் இவ்வேரியேயாகும்.

400 ஆண்டுகள் வரை சைவத் தமிழரசர்களால் ஆளப்பட்டுவந்த யாழ்ப்பாண அரசு 2-2-1621இல் அந்நியரான போர்த்துக்கேயரின் கைப்பட்டது. யாழ்ப்பாண அரசு வீழ்ச்சியுடன் சைவ ஆலயங்கள் பல போர்த்துக்கேயரினால் இடித்தழித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

அப்படியாக அழிக்கப்பட்ட சைவக் கோயில்களுள் மகோன்னத நிலையிலிருந்த நல்லூர் கந்தசுவாமி கோவிலும் ஒன்றாகும். இதனை அழித்தவன் ‘ஒலிபறா’ என்றும் பறங்கித் தளபதியாம்.
கோவிலை அழித்துச் சூறையாடியதோடு நிற்காது, அஃது இருந்த இடமும் தெரியாதபடி அத்திவாரத்தையுமே கிளறியெடுத்துவிட்டதாம் பறங்கிப் படை. போர்த்துக்கேயரிடமிருந்து 21.06.1658இல் யாழ்ப்பாணவரசு ஒல்லாந்தர் கைக்கு மாறியது. அப்போது அவர்கள் தங்கள் மத வணக்கத்திற்குரிய தேவாலயம் ஒன்றைப் பழைய கந்தசுவாமி கோவில் இருந்த இடத்தில் கட்டிக்கொண்டனர்.

பழைய நல்லூர் கந்தப் பெருமான் கோவில் இருந்த யமுனா ஏரிக்குப் பக்கத்தில் இன்று இருப்பது ஒல்லாந்தர் காலத் திருச்சபைத் தேவாலயமாகும்.

இப்படியாகப் புறத்தோற்றத்தில் இருந்த நல்லூர்க் கோவிலை அந்நியரால் அழிக்க முடிந்ததே தவிர, அவனடியாரது அகக்கோயில் வழிபாட்டை அவர்களால் அழிக்கவோ, அகற்றவோ, அசைக்கவோ முடியவில்லை. எனினும் மனத்தகத்தவனாகிய முருகப் பெருமானுக்குப் பழைய கோவிலுக்கு அண்மையில், கிட்டத்தட்ட 1734 இல், புதிய ஒரு சிறு மடாலயம் அமைத்தனர். ஆரம்பத்தில் இம்மடாலயம் கந்தபுராணம் படிக்கும் இடமாகவே பெரிதும் பயன்பட்டு வந்தது.

இம்மடாலயத்தில் வேல் ஒன்றையே வைத்து வழிபட்டும் வந்தனர். மடாலயமாக இது இருந்ததினாற்தான் தூபி எதுவும் இல்லாது இருந்து வந்தது. அக்கால ஒல்லாந்தர் ஆட்சியில் சிறாப்பராக இருந்த இரகுநாதமாப்பாண முதலியார் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இம்மடாலயத்தைக் கற்களாலும், செங்கற்களாலும் கட்டுவித்து ஓட்டால் வேயப்பட்ட கோயில் ஆக்கினார். அவர் பரம்பரையில் வந்தோரே அன்று தொடக்கம் ஆலயத்தை நிர்வகித்து வரும் அறங்காவலர்களாக இன்றுவரை இருந்து வருகின்றனர்.

இக்கோயிலைக் கருங்கற்களாற் கட்ட வேண்டும் எனவும், மூலத்தானத்தில் வேலுக்குப் பதிலாக தேவப்பிரதிட்டை செய்யப்பட வேண்டுமெனவும் கூறி வந்தவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் ஆவார். இதற்காக அவர் மூவாயிரம் ரூபாவரை பணமும் திரட்டிக் கொடுத்ததாக வரலாறு கூறுகின்றது. ஆயின் இவர் காலத்தில் இவை நிறைவேறவில்லை.

மூலத்தானத் தள வேலைகள் கருங்கற்றிருப்பணியாக 1902 இல் நிறைவேறி ஆலயப் பிரதிட்டை செய்யப்பட்டுக் குடமுழுக்கு நடைபெற்றது. 1909 இல் சுற்றுப்பிரகார மண்டபங்கள் கட்டப்பட்டன. ஆயின் இவற்றுக்கு முன்னதாக 1899இல் மணிக்கூட்டுக் கோபுரம் ஒன்று கட்டப்பட்டிருக்கின்றது. இதற்குச் சான்று அதிலுள்ள செப்பேடாகும். 

இவ்வாலயம் குமார தந்திர முறையில் பூசை நடைபெறும் தலமாகும். ஈழத்தில் இம்முறையில் பூசை நடைபெறும் தலம் -ஜி ஒன்றேயாம். இன்று இவ்வாலயத்தில் நாள்தோறும் ஆறு காலப் பூஜைகள் நேரம் தவறாது குறித்தபடி நடைபெற்று வருகின்றன.

மற்றும் சிறப்பு விழாக்களும் இதே ஒழுங்கிற்றான் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு மாதப் பிறப்பன்றும் திருவனந்தற் பூசைக்கு முன்னதாகப் பூந்தோட்டத் திருமஞ்சனக் கிணற்றில் தீர்த்தம் நடைபெறுவது இவ்வாலய வழக்கம். இங்கு மாதந்தோறும் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறுவதுடன், சஷ்டி தோறும் செல்வமுத்துக்குமார சுவாமிக்குத் திருமஞ்சனமும் நடைபெறுகின்றது.

இவ்வாலய மகோற்சவம் இருபத்தைந்து நாட்கள் நடைபெறும். இவ்வாலயக் கொடியேற்றச் சீலையை ஆண்டுதோறும் நல்லூரில் வாழ்ந்துவரும் செங்குந்த மரபினரே அழகிய தேரில் வைத்துக் கொண்டுவந்து கொடுப்பர்.

ஆவணி மாத அமாவாசையன்று தீர்த்தமும், முதல்நாள் தேர்திருவிழாவும் நடைபெறும். இக்காலகத்தில் செந்துவர் வாயார் சேவடி சிந்திக்க வரும் பக்தர்கள் கூட்டம் பல்லாயிரமாக இருக்கும். இக்காட்சி அப்பர் பெருமான் ‘முத்துவிதானம்’ என்ற திரு ஆரூர்ப் பதிகத்தில் காட்டும் ஆதிரை நாட் காட்சியையும் சிறப்பையும் எண்ணச் செய்யும்.

தேர்த் திருவிழாவன்று மாலை தேர் முட்டியில் சண்முகப் பெருமானுக்குப் பச்சை சாத்தி நடைபெறும் அர்ச்சனையும், அப்பொலிவோடு பெருமான் ஆலயத்திற்குத் திரும்பும் கோலமும் நெஞ்சை நெகிழ்விப்பதாகும். பச்சை சாத்தி எழுந்தருளுவதன் நோக்கம் ‘எல்லாச் சீவராசிகளுக்கும் எல்லா அநுக்கிரகங்களையும் செய்யும் கருத்தாவாகிய சதாசிவமூர்த்தியாக உள்ளவர் தானே என்பதையும், வேண்டுவார் வேண்டுவதை ஈயும் தன்மையும் தனக்கே உடையதென்பதையும் காட்டி, எல்லா நலன்களையும் பெற்று வாழுங்கள் என்று அருள் செய்யும் குறிப்பை உணர்த்தும் கோலம்’ என்பதுதான்.

இங்கு ஒவ்வொரு மூர்த்திக்கும் விலையுயர்ந்த தங்க, வைர, இரத்தினங்களால் ஆகிய ஆபரணங்கள் உள. அதே போன்று வெள்ளி தங்க வாகனங்களும், சிங்காசனமும் உள. கோயிலின் கிழக்கு வாயிலைச் சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த ஐந்தடுக்குக் கோபுரமும், அதன் இருமருங்குமுள்ள அழகிய மணிக்கூட்டுக் கோபுரங்களும் அணிசெய்கின்றன.

தெற்கு வீதியில் இன்னொரு கோபுரம் கோயிலை அழகு செய்கிறது- இதற்கு நேராகத் தெற்குப் புற வெளி வீதிக்குத் தெற்கே அழகிய தீர்த்தக் கேணியும், தண்டாயுதபாணி கோவிலும் இருக்கின்றன. இத்திருக் கேணியிற்றான் மகோற்சவ காலத் தீர்த்தம் நடைபெறுகிறது.
கோயிலைச் சுற்றிவரப் பல மடங்கள் இருக்கின்றன.

அவற்றுள் தேர்முட்டிக்கு அண்மையில் உள்ள அறுபத்து மூவர் குருபூசை மடம் பிரபல்யமானது. இதுவே சடையம்மா மடம் எனப்படுவதாகும். இம் மடம் 1942 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபம், முத்துத்தம்பி மடம் என பல ஆலயச் சூழலில் உள்ளன. இங்கே மகோற்சவ காலங்களில் அன்னதான நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.

படமாடும் இக்கோயிற் குமரனிடம், நடமாடும் கோயில்களாக விளங்கிய யாழ்ப்பாணச் சித்தர் பரம்பரையில் வழி வந்த செல்லப்பாச்சாமி, யோகர்சாமி போன்ற ஞானவான்கள் வந்து தரிசனஞ் செய்து நடமாடி இருக்கின்றனர்.

இவ்வாலயம் இன்றிருக்கும் காணியின் பெயர் குருக்கள் வளவு. இவ்வாலயச் சுற்றாடலில் அமைந்துள்ளது திருஞானசம்பந்தார் ஆதீனமாகும். இது சுவாமிநாத தேசிகபரமாச்சாரிய சுவாமிகளால் தாபிக்கப்பட்டதாகும். அருகில் இருப்பது நல்லூர் சிவன் தேவஸ்தானமாகும். நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு மேற்குப் புறமாக இருப்பது முத்துவிநாயகர் கோவிலாகும்.














« PREV
NEXT »

No comments