Latest News

August 13, 2016

தமிழர் தாயகத்தை சிங்கள பௌத்த மயமாக்க இராணுவப் பின்னணியில் பௌத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும்: சிறீதரன் சீற்றம்!
by admin - 0


தமிழர் தாயகத்தைச் சிங்கள பௌத்த மயமாக்க இராணுவப் பின்னணியில் தமிழர் தாயகப் பகுதிகளில் பௌத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயச் சூழலில் இராணுவத்தினரால் அடாத்தாக அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரையைப் பார்வையிட்ட பின் கருத்துத் தெரிவிக்கும் போது கூறினார்.

கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயச் சூழலை சட்டவிரோதமாக அபகரித்துள்ள இராணுவம் அப்பகுதியில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து வருகின்றது. தமிழர் தாயகப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இப் பௌத்த விகாரையை அமைப்பதற்கு தாயகப் பகுதிகளில் எதிப்புக் குரல்கள் எழுந்துள்ளதுடன் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

இப் பௌத்த விகாரையைப் பார்ப்பதற்காக அப்பகுதிக்கு நேற்றைய தினம் தினம் மாலை 3.30 மணிக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, மாவட்ட அமைப்பாளர் அ.வேழமாலிகிதன், மத்திய செயற்குழு உறுப்பினர் க.ஜெயக்குமார், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சுப்பையா உள்ளிட்ட குழுவினர் சென்றிருந்தார். 
எனினும் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிக்குள் செல்ல முடியாதவாறு இராணுவத்தினரால் முட்கம்பி வேலியும் மதிலும் அமைக்கப்பட்டுத் தடுக்கப்பட்டுள்ளதுடன் காவலுக்கும் ஆயுதம் தரித்த இராணுவத்தினர் நின்றிருந்தார்கள். 

இதனால் அப்பகுதிக்குச் செல்ல முடியாது முட்கம்பி வேலிக்கு அப்பால் நின்று பௌத்த விகாரையின் கட்டுமான வேலைகள் இடம்பெற்று வருவதை அவதானித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கருத்துத் தெரிவிக்கும் போது தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள பௌத்த மயமாக்கும் நோக்கத்துடன் இராணுவத்தினரது துணையுடன் பௌத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இது இப்படியே போகுமாகவிருந்தால் இன்னும் சிலகாலத்தில் தமிழர்களது கலாசாரம் அழிக்கப்பட்டு தமிழர்கள் என்றொரு இனம் இங்கு வாழ்ந்துள்ளதா என்ற நிலைதான் ஏற்படும்

வரலாற்றுச் சிறப்பு மிக்க கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்திற்குள்ளேயே சிங்கள இராணுவத்தினரால் பாரிய பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதை இங்கு நாம் காண்கின்றோம். 
ஒரு வீதம்கூட பௌத்தர்கள் இல்லாத தமிழர்ளை மாத்திரம் கொண்ட பகுதியில் இப்படியான பிரமாண்டமான பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது. தமிழர்களுடைய கலாசாரத்தை அழிப்பத்து இனச்சுத்திகரிப்புச் செய்து தமிழர்களை அழித்தொழிக்கும் சிங்கள பௌத்த அரசாங்கத்தின் நடவடிக்கையாகவேதான் தமிழர்களாகிய நாம் இதைப் பார்க்கின்றோம். 

தமிழர்களுடைய பாரம்பரிய வழிபாட்டிடமான வரலாற்றுச் சிறப்பு மிக்க கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் மகிமையை அழிப்பதற்காக இராணுவ இயந்திரத்தை வைத்து அரசாங்கத்தால் திட்டமிட்ட வகையில் இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் மக்களை அடக்கி ஆக்கிரமிப்பதற்காக தமிழர்களுடைய அடையாளங்களை அழிப்பதற்காக அரசாங்கம் மிகவேகமாகச் செயற்பட்டு வருவதை இவ்விடத்தில் காணமுடிகின்றது. ஆலயத்திற்குரிய காணியில் இராணுவம் பிரதேச சபையிடமோ ஆலயத்திடமோ அனுமதி எதுவும் பெறப்படாமல் அரசாங்கச் சட்டங்களை மீறிய வகையில் சட்டவிரோதமாக மதில் அமைத்துள்ளது. அதற்குள் சட்டவிரோமாக அடாத்தாக பௌத்த விகாரை அமைக்கின்றது.
நொந்துபொயுள்ள தமிழர்களை மேலும் நோகடிப்பதிலும் நல்லாட்சி என்னும் போர்வையில் தமிழர்களை நாசமாக்குவதிலும் இந்த அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக நான் ஜனாதிபதிக்கு கடிதமூலமாகவும் தெரியப்படுத்தியுள்ளேன். பிரதேச சபையிடமும் அறிவித்துள்ளேன். சாதாரண பொது மக்கள் ஒரு மதில் கடடுவதற்கு, வீடுகட்டுவதற்கு அனுமதி பெறப்படாதுவிட்டால் தண்டங்களை அறவிடப்படும்போது இராணுவத்தினர் மாத்திரம் எந்தவித அனுமதியும் பெறப்படாது பாரிய பௌத்த விகாரையையும் அடாத்தாக அமைப்பதற்கும் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என நான் எழுத்து மூலம் கேட்டுள்ளேன்.
கனகாம்பிகை அம்மன் ஆலயக் காணியை இராணுவம் அபகரித்து புத்தவிகாரை கட்டுவதும் இப்பகுதியிலுள்ள தமிழர்களின் நிலப்பகுதிகளை இராணுவம் அபகரித்து பாரிய இராணுவ முகாம்களை அமைத்து வருவதும் தமிழர் தாயகத்தை அபகரித்துச் சிங்கள பௌத்த மயமாக்கி தமிழர்களின் கலாசாரத்தை அழித்து தமிழ் இனத்தையே அழித்தொழிப்பதற்கான திட்டமிடப்பட்ட முயற்சியாகத்தான் காணப்படுகின்றது.

நல்லாட்சிக்காக  தமிழர்கள் நம்பி இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்துள்ள போதும் நல்லெண்ணங்களை தமிழர்கள் வெளிப்படுத்திக்கொள்கின்ற போதும் அதனைப் பயன்படுத்தி அரசாங்கம் உலக நாடுகளுக்குத் தமது நல்லெண்ணம் வெளிப்படுவது போலக் காட்டிக்கொண்டு தமிழர் தாயகப் பகுதிகளை ஆக்கிரமித்துச் சிங்களக் குடியேற்றங்களையும் ஆக்கிரமிப்புச் சின்னங்களையும் இராணுவமுகாம்களையும் விஸ்தரித்துக்கொண்டுள்ள நிலை மிகவும் அபாயகரமானது. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது தொடர்பில் நாங்கள் தொடர்ந்தும்  எமது நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம். எதிர்வரும் 22.08.2016 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டப் பொது அமைப்புக்களால் தமிழர்களுக்கு சர்வதேச நீதி வேண்டியும் தமிழர்களுடைய இருப்பை வலியுறுத்தியும் ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக முன்னெடுக்கவுள்ள நீதிக்கான நடைபயணத்திற்கு நாம் முழு ஆதரவை வழங்கவுள்ளோம். தமிழர் தாயக ஆக்கிரமிப்புக்களை நாம் அனுமதிக்க முடியாது என்றார்.
« PREV
NEXT »

No comments