Latest News

August 11, 2016

நேர்முகத் தேர்வில் தெரிவானவர்களைப் புறக்கணித்து புதியவர்களை நியமிக்க மீள விண்ணப்பம் கோரல் பூநகரிப் பிரதேசசபையில்
by admin - 0

நேர்முகத் தேர்வில் தெரிவானவர்களைப் புறக்கணித்து புதியவர்களை நியமிக்க மீள விண்ணப்பம் கோரல் பூநகரிப் பிரதேசசபையில். 

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பூநகரிப் பிரதேச சபையால் கடந்த 2014 ஆம் ஆண்டு அட்டவணைப்படுத்தப்படாத பதவிகளுக்கு பகிரங்கமாக விண்ணப்பம் கோரப்பட்டு அதற்கமைவாக விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடாத்தி முறைப்படி தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு இதுவரை நியமனங்களை வழங்காது அவர்களைப் புறக்கணித்து ஒதுக்கிவிட்டு தற்போது மீண்டும் அதே பதவிகளுக்கு மேற்படி பூநகரிப் பிரதேச சபையால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதனால் நேர்முகத் தேர்வில் தோற்றி தெரிவுசெய்யப்பட்டவர்கள் தமக்கு குறித்த வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்து ஏமாற்றப்பட்டுள்ளதாகக் கூறிக் கவலையும் விசனமும் தெரிவித்துள்ளதுடன். இவ்விடயம் குறித்து பாதிக்கப்பட்டுள்ளவர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறையிடப்பட்டுள்ளது.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது, பூநகரிப் பிரதேச சபையால் அட்டவணைப்படுத்தப்படாத பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டதற்கமைவாக விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 05, 06, 08 ஆம் திகதிகளில் பூநகரிப் பிரதேச சபையில் நேர்முகத் தேர்வு இடம்பெற்றுள்ளது.

இதில் அலுவலக ஊதவியாளர், சாரதி, ஆயுர்வேத மருந்தாளர், வெளிக்களத் தொழிலாளி, சந்தை மேற்பார்வையாளர், சுகாராரத் தொழிலாளி, நூலகப் பரிசாரகர், மின்னிணைப்பாளர் என எட்டுப் பதவிகளுக்கு நேர்முகத் தேர்வின் மூலம் 23 பேர் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். அவர்களது பெயர் விபரம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 26 ஆம் திகதி பிரதேச சபையில் காட்சிப்படுத்தப்பட்டது. அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் விரைவில் அனுப்பப்படும் எனக்கூறப்பட்ட போதிலும் இதுவரை அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படவில்லை.

நேர்முகத்தேர்வில் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு நியமனம் வழங்கப்படாத நிலையில் மேற்படி குறித்த பதவிகளுக்கு பூகரிப் பிரதேச சபையால் தற்போது மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
இதனால் நேர்முகத் தேர்வில் தோற்றித் தெரிவுசெய்யப்பட்டவர்கள் தமக்கு வேலை கிடைத்துவிட்டது தமக்கான நியமனக் கடிதங்கள் விரைவில் வழங்கப்படும் என்று காத்திருந்த நிலையில் இப்படியான அறிவித்தல் வந்துள்ளமையால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தம்மைப் பூநகரிப் பிரதேச சபை நம்பிக் காத்திருக்க வைத்து ஏமாற்றியுள்ளதாகவும் கூறிக் கவலையும் விசனமும் தெரிவிக்கின்றார்கள்.

இவ்விடயத்துடன் தொடர்புடைய பொறுப்பு வாய்ந்தவர்கள் உடனடியாகத் தலையிட்டுத் தமக்கான வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டு நிற்கின்றார்கள்.

இவ்விடயம் குறித்து பூநகரிப் பிரதேச சபைச் செயலாளர் குறிப்பிடுகையில் குறித்த பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்று ஏழு நாட்களுக்குள் தெரிவுசெய்யப்பட்டவர்களின் பெயர் விபரம் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். தாமதமாக ஒரு வருடத்தின் பின்னர் தெரிவுசெய்யப்பட்டவர்களின் பெயர் விபரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையானது அவை நீக்கப்பட்டவையாக இருக்கலாம் எனக் கருதுகின்றேன். நான் இச்சபையை 2016 ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் உள்ளூராட்சித் திணைக்களத்தால் குறித்த பதவிகளுக்கு விண்ணப்பம் கோரி நியமனம் வழங்குமாறு கேட்கப்பட்டதற்கமைவாக தற்போது விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. புதிய விண்ணப்பங்கள் வரத்தொடங்கியுள்ளன. மேற்படி பதவிகளுக்கு ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்டவர்கள் பொறுப்புவாய்ந்த உரியவர்களிடம் தமது முறைப்பாட்டினைச் சமர்ப்பித்து தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும். என்றார்.

குறித்த முறைப்பாட்டினை பாதிக்கப்பட்டவர்கள் வடக்கு மாகாண சபையிடமும் முறையிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இவ்விடயத்தில் பொறுப்புவாய்ந்த உரிய தரப்பினர் தலையிட்டு நேர்முகத் தேர்வு மூலம் தெரிவுசெய்யப்பட்ட தமக்கான பதவிக்குரிய நியமனக்கடிதங்கள் கிடைக்க ஆவன செய்யுமாறு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக் காத்திருக்கின்றார்கள்.
« PREV
NEXT »

No comments